விவசாயம் செய்வதற்கு முதலில், நிலத்தைப் பண்படுத்தி, ஏர் உழுது, வரப்பை வெட்டிப் பூச விவசாயிகளுக்கு அதிக நேரமெடுக்கிறது. இதனால், வேலையாட்களை வைத்து, வரப்பை வெட்டுகின்றனர். தற்போதுள்ள சூழ்நிலையில், விவசாயத்திற்கு வேலையாட்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. அப்படியே கிடைத்தாலும், ஊதியம் அதிகமாக கேட்பார்கள். நெல்வயலில் (Paddy Field) வரப்பையொட்டி எலி வளை, நண்டு வளைகள் தோண்டுவதால் வயலுக்கு நீர்க்கட்டும் போது நீர் கசிந்து வெளியேறுகிறது. இதைத் தடுக்கும் வகையில் வரப்பை வெட்டி பூசும் பணி வழக்கமாக நடைபெறும். ஒரு ஏக்கர் அளவு வயலை வெட்டி பூசுவதற்கு குறைந்தது ஆறுபேர் வேலை செய்ய வேண்டும். அதோடு நேரமும் அதிகமாகும். இதற்கெல்லாம் தீர்வாக, நவீன இயந்திரம் (Modern Machine) ஒன்றை வேளாண் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.
வரப்பு வெட்டும் நவீன இயந்திரம்:
வேளாண் பல்கலைக்கழகம், அரசின் புதுமை முயற்சி திட்டத்தின் கீழ், வரப்பு வெட்டும் இயந்திரத்தை மதுரை விவசாயக் கல்லுாரியில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு வயலில் இருந்து, இன்னொரு வயலுக்கு தண்ணீர்க் கசிவதை இதன் மூலம் தடுக்கலாம். ஒரு மணி நேரத்தில், ஒரு ஏக்கர் நிலத்திற்கு வரப்பை வெட்டி பூசி விடுகிறது, இந்த இயந்திரம். இதனால் வரப்பில் உள்ள எலி, நண்டு வளைகள் அடைக்கப்படுவதோடு உறுதியான சுவர் (Wall) போல வரப்பு மாறி விடுகிறது. பயிர் அறுவடை செய்யும் 130 நாட்கள் வரை வரப்பு உறுதியாக நிற்கிறது. இந்த இயந்திரம், நிச்சயம் விவசாயிகளுக்கு ஓர் வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
பயன்படுத்தும் முறை:
ஸ்டீல் இயந்திரத்தால் ஆன இந்த வெட்டி பூசும் கருவியை, டிராக்டர் (Tractor) வைத்திருக்கும் விவசாயிகள் தனியாக வாங்கி பொருத்திக் கொள்ளலாம். பிறகு, வரப்பின் ஓரம் டிராக்டரை இயக்கினால், இந்த இயந்திரம் தானாகவே வரப்பு வெட்டி பூசி விடும். இதனால் நேரம் மிச்சமாவதோடு, பலமான வரப்பும் அமைந்து விடும். டிராக்டர் இல்லையென்றால் இந்த இயந்திரத்தைப் பயன்படுத்த இயலாது என்பது தான், இதிலுள்ள ஒரு குறை.
இலவசப் பயிற்சி:
கருவியை பயன்படுத்தி பார்க்க விரும்பும் விவசாயிகள் தனியாகவோ, குழுவாகவோ வந்தால் இலவசப் பயிற்சியும் (Free Training) அளிக்கப்படுகிறது. இதனால், இந்த இயந்திரத்தை இயக்க எளிதில் கற்றுக்கொள்ள முடியும்.
மேலும் படிக்க...
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு, தோட்டக்கலைத் துறை சார்பில் ரூ.2500 ஊக்கத்தொகை!
நிலக்கடலையில் சுண்ணாம்பு மற்றும் கந்தகச் சத்துக்களை அதிகரிக்கும் வழிகள்!