பூச்சி தாக்குதல் மற்றும் எதிர்பாராத காலநிலை மாற்றத்தினால் பல்வேறு காய்கறி மற்றும் பழங்களின் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றின் விலைகள் சந்தைகளில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில், நடப்பாண்டு ஜீலை மாதம் தோட்டக்கலைப் பயிர்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாப்பது தொடர்பான முன்னறிவிப்பு மற்றும் மேலாண்மை வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
பழப்பயிர்களில் பூச்சித்தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை:
மா:
மா பயிர்களில் தத்துப்பூச்சி மற்றும் இலைப்பேன் தாக்குதலை கட்டுப்படுத்த இமிடாக்குளோபிரிட் 17.8 எஸ்எல் 2.0 மிலி/10 லிட்டர் அல்லது தயாமீத்தாக்சாம் 25% WG 1.0 கிராம் / 10 லிட்டர் பரிந்துரைக்கப்படுகிறது. பழ ஈக்களின் தாக்குதல் காணப்பட்டால் அதனை கட்டுப்படுத்த பழங்கள் முதிரும் சமயத்தில் வேப்பெண்ணைய் 30 மிலி / லிட்டர் தெளிக்க வேண்டும். தாக்கப்பட்ட பழங்களை சேகரித்து அழிக்க வேண்டும். எக்டருக்கு 25 எண்கள் மீத்தைல் யூஜினால் கவற்சிப் பொறி வைக்க வேண்டும்.
வாழை - வாடல் நோய் மேலாண்மை:
வாழை வாடல் நோய் தாக்கம் ரஸ்தாளி, மொந்தன், நெய் பூவன், விருப்பாச்சி இரகங்களில் அதிகமாக காணப்படும். நோய் தாக்கப்படாத வாழைக் கன்றுகளை தேர்வு செய்து நட வேண்டும். கிழங்குகளை கார்பன்டாசிம் (2 கிராம் / லிட்டர்) கரைசலில் 30 நிமிடம் நனைத்து நடவு செய்தல் அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் (10 கிராம் / கிழங்கு) என்ற அளவில் கிழங்கு நேர்த்தி செய்து நடவு செய்ய வேண்டும். கார்போபியூரான் 40 கிராம் / கிழங்கு என்ற அளவில் நேர்த்திசெய்து நடவு செய்தல்.
மரத்திற்கு கார்பன்டாசிம் (1 கிராம் / லிட்டர்) தயாரித்து மரத்தை சுற்றி மண்ணில் 2 லிட்டர் ஊற்றுதல். நோய் தாக்கிய மரங்களை அப்புறப்படுத்தி குழிக்குள் 1-2 கிலோ கிராம் சுண்ணாம்பு இடவும்.
கொய்யா:
கொய்யா பயிர்களில் தேயிலை கொசுவின் தாக்குதலை கட்டுப்படுத்த வேப்ப எண்ணெய் 3% (30 மிலி/லிட்டர்) அல்லது மாலத்தியான் 50 EC 2 மிலி/லிட்டர் பரிந்துரைக்கப்படுகிறது. காய்க்கும் பருவத்தில் 21 நாட்கள் இடைவெளியில் குறைந்தது நான்கு முறை அதிகாலை அல்லது மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த மஞ்சள் வர்ண ஒட்டும் பொறி எக்டருக்கு 12 வைக்கவும்.
மேற்குறிப்பிட்ட வகையில் மருந்துகளை தெளிப்பதன் மூலம் நோய் தாக்குதலில் இருந்து பழப் பயிர்களை பாதுகாக்க இயலும் என தெரிவித்துள்ள ஆட்சியர், மேலும் தகவல்களுக்கு அருகிலுள்ள வட்டார வேளாண் அலுவலர்களை தொடர்புக் கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் காண்க:
தானியங்கி முறையில் வில்லங்க சான்றிதழா? பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டம்