சம்பா நெல் சாகுபடியில் இலைச்சுருட்டு புழுத்தாக்குதலைக் கட்டுப்படுத்தி உயர் விளைச்சல் பெற்ற புதுக்கோட்டை வேளாண்துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் கூறியதாவது:
-
புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா நெற்பயிர் வளர்ச்சிப் பருவத்தில் உள்ளது.
-
இலைச்சுருட்டு புழுக்கள் நெற்பயிரின் இலையில் உள்ள பச்சையத்தைச் சுரண்டி உண்பதால் இலைகளில் வெள்ளை வெள்ளையாகக் காணப்படும்.
-
இவ்வாறு பச்சையம் முழுவதும் சுரண்டப்பட்ட நிலையில் பயிர் எரிந்தது போல் தோன்றும். இதன் தாக்குதல் வயல் ஓரங்களில் நிழலான பகுதிகளிலும், அதிக உரம் இட்ட பகுதிகளிலும் மிகுந்து காணப்படும்.
-
புரட்டாசி மாதத்திலிருந்து மார்கழி மாதம் வரை இந்தத் தாக்குதல் அதிகமிருக்கும்.
-
இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்திட வரப்புகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
-
பரிந்துரைத்த அளவுக்கு மேல் இல்லாமல், தேவையான தழைச்சத்தினை மூன்று அல்லது நான்கு தடவையாகப் பிரித்து இடவேண்டும்.
-
விளக்குப் பொறியினை மாலை 6.30 மணி முதல் இரவு 10.00 மணி வரை விட்டுத் தாய் அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம்.
-
நடவு செய்த 37,44 மற்றும் 51ம் நாட்களில் முட்டை ஒட்டுண்ணியான டிரைகோகிரம்மா கைலோனிஸ்ஸை ஏக்கருக்கு 2.சி.சி அளவுக்கு காலை நேரத்தில் வயலில் விட்டு இப்புழுவின் முட்டைக் குவியலை அழிக்கலாம்.
-
ஒரு கூடைத் தவிட்டில் 100 மிலி மண்ணெண்ணெய்யைக் கலந்து வயலில் விசிறுதல் வேண்டும்.
-
ஏறத்தாழ எட்டடி நீளமுள்ள வைக்கோல் பிரியை வடலின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கொருவர் பிடித்துக் கொண்டு நெற்பயிரின் மேல் நன்குபடுமாறு இழுத்துச் செல்ல வேண்டும்.
-
இதனால் நெல்லின் இலைப்பகுதி வைக்கோல் பிரியில் பட்டு நிமிரும் போது, மடக்கப்பட்ட பகுதி விரிந்து விடும்.
-
இந்தத் தாக்குதல் கட்டுப்படவில்லை என்றால், ஏக்கருக்கு கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 4 Gv என்றக் குருணை மருந்தினை 7.5 கிலோ முதல் 10 கிலோ வரை மண்ணில் இட்டு கட்டுப்படுத்தலாம்.
-
எனவே ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறையில் இலைச் சுருட்டு புழுவினைக் கட்டுப்படுத்திப் பயன் பெறலாம்.
-
இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
நெல்லில் புகையான் பூச்சித் தாக்குதல்- கட்டுப்படுத்த சில வழிகள்!
இயற்கை உரத்தில் உள்ள சத்துக்கள் சதவீதம் தெரியுமா? விபரம் உள்ளே!