குடியரசு தினத்தன்று டெல்லியின் காசிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி எல்லைப் பகுதிகளில் இருந்து டிராக்டர் பேரணியைத் தொடங்க விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதில் சுமார் 2 லட்சம் டிராக்டர்கள் டெல்லிக்குள் நுழையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் போராட்டம் (Protest Continue)
மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளாண் திருத்தச் சட்டங்களை பஞ்சாய், ஹரியானா உள்ளிட்ட பல வட மாநில விவசாயிகள் ஏற்க மறுத்தனர். இதையடுத்து இந்த சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் 60-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பேச்சுவார்த்தை தோல்வி (Talks Failed)
விவசாயிகளுடன் இதுவரை 11 சுற்றுகளாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியும், சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் விவசாயிகளின் போராட்டம் தொடர்கிறது.
டிராக்டர் பேரணி (Tractor Rally)
குறிப்பாக, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், குடியரசு தினத்தன்று டெல்லியில் பிரமாண்டமாக டிராக்டர் பேரணி நடத்த விவசாய சங்கங்கள் திட்டமிட்டுள்ளன.
2 லட்சம் டிராக்டர்கள் (2 Lakh Tractors)
இதற்காக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயிகள் டிராக்டர்களில் டெல்லி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர். இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கிவிட்டதாகவும், டெல்லிக்குள் 100 கிமீ தூரத்திற்கு டிராக்டர் பேரணி நடத்தப்போவதாகவும் விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 2 லட்சம் டிராக்டர்கள் தலைநகருக்குள் நுழையும் எனத் தெரிகிறது.
ஆனால், இந்த தகவலுக்கு முரணாக காவல்துறையின் பதில் அமைந்துள்ளது.
பேரணி செல்லும் பாதை தொடர்பாக விவசாய சங்கங்கள் எழுத்துப்பூர்வமாக வழங்கவில்லை என்றும், அதன்பிறகுதான் பேரணி குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட முடியும் என்றும் டெல்லி போலீஸ் கமிஷனர் கூறி உள்ளார்.
அனுமதி கிடைக்குமா? (Permission)
முன்னதாக, விவசாய சங்கங்களுக்கும் காவல்துறைக்கும் இடையேல் பேரணி செல்லும் பாதை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விவசாய சங்க தலைவர் அபிமன்யு கோஹர் கூறும்போது, டிராக்டர் பேரணி டெல்லியின் காசிப்பூர், சிங்கு மற்றும் திக்ரி எல்லைப் பகுதிகளில் இருந்து தொடங்கும் என்றும், விரிவான விவரங்கள் பின்னர் இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.
டெல்லி எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்ட தடுப்புகள் ஜனவரி 26 ஆம் தேதி அகற்றப்படும் என்றும், தலைநகருக்குள் நுழைந்த பின்னர் விவசாயிகள் டிராக்டர் பேரணிகளை மேற்கொள்வார்கள் என்றும் மற்றொரு விவசாய சங்கத் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
தக்காளி செடியில் இலைச்சுருட்டு நச்சுயிரி நோய்- பாதுகாப்பது எப்படி?
வண்ண வண்ண மலர்கள் விற்பனையில் அதிக லாபம் தரும் - பட்டன் ரோஸ் சாகுபடி!
மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!