நெல் விதைகளை கடினப்படுத்துதல் மற்றும் நெல்லில் விதை உறக்கம் நீக்கும் முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கீழ் விதையியல் துறை மற்றும் பயறுவகைத் துறையில் பணியாற்றி வரும் இணை பேராசிரியர்களான கவிதா, தங்க ஹேமாவதி, பி.எஸ்.சண்முகம், வே.தனுஷ்கோடி ஆகியோர் ஒருங்கிணைந்து பல தகவல்களை கிரிஷி ஜாக்ரனுடன் பகிர்ந்துள்ளார்கள்.
விவசாயிகள் பெரிதும் சந்திக்கும் பிரச்சினைகளான நெல் விதைகளை கடினப்படுத்தும் முறை குறித்தும் விதை உறக்கம் நீக்கும் முறை குறித்தும் அவர்கள் அளித்த தகவல்கள் பின்வருமாறு-
நெல் விதைகளை கடினப்படுத்துதல்:
விதைகளைக் கடினப்படுத்துவது என்பது நேரடி நெல்விதைப்பில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான தொழில் நுட்பங்களுள் ஒன்றாகும். கடினப்படுத்துவதால் விதைகள் பல்வேறு கால நிலைகளுக்கு ஏற்றவாறு வறட்சிக்கு எதிர்ப்புத்திறன் கொண்டதாக உள்ளது. இம்முறையில் நெல் விதைகளைத் தண்ணீர் அல்லது இரசாயன மருந்து கொண்டு ஊறவைத்து பின்பு அதன் ஈர அடக்கானது, விதைகள் ஊறவைப்பதற்கு முன்பு இருந்த அளவில் வரும்வரை நிழலில் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும்.
விதைப்பதற்கு முன் விதைகள் கடினப்படுத்துவதால் செல்களில் உள்ள மைட்டோகான்ட்ரியாவின் செயல்திறன் அதிகரிக்கப்படுகிறது. இதன் மூலம் செல்களின் சக்தி பெருக்கப்பட்டு அவற்றின் தன்மைகள் காக்கப்படுவதுடன், பயிர் பல்வேறு கால நிலைகளிலும் மிக மோசமான பருவ நிலைகளையும் எதிர்க்கும் தன்மையைப் பெறுகிறது. மேலும், முதல் கட்ட முளைப்புத்திறன் மற்றும் கருப்பை விரிவடைதலும் விதைக்குள்ளேயே நடைபெறுக்கின்றன. இதன் மூலம் விதைகள் மண்ணில் குறைந்த ஈரத்தன்மையில் கூட முனைத்து திறனுள்ள நாற்றுக்களைக் கொடுக்கின்றன.
செய்முறை:
நெல் விதைகளை முதலில் தண்ணீரில் அல்லது ஒரு சதம் பொட்டாசியம் குளோரைடு அதாவது ஓர் ஏக்கருக்கு வேண்டிய 40 கிலோ விதையை 400 கிராம் பொட்டாசியம் குளோரைடு உப்பும் 40 லிட்டர் நீரும் கலந்த கரைசலில் சுமார் 20 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.
பின்பு விதைகளைக் கரைசலிலிருந்து எடுத்து நிழலிலோ அல்லது மிதமான சூரிய வெப்பத்திலோ விதையின் ஈர அடக்கம், கரைசலில் ஊறவைப்பதற்கு முன்பிருந்த அளவு வரும்வரை நன்கு உலர்த்த வேண்டும். இவ்வாறு உலர்த்தப்பட்ட விதைகளை உடனடியாக விதைப்பதற்கு பயன்படுத்தலாம். மாறாக, விதைகளை ஏதாவது ஒரு காரணத்தால் உடனடியாக விதைக்க முடியாவிட்டால் சுமார் 20 நாட்கள் வரை சேமித்து வைத்து பின்பு விதைக்கலாம்.
குறிப்பு: கடினப்படுத்திய விதைகளை 20 நாட்களுக்கு மேல் சேமித்து வைப்பதால் விதைகளின் முளைப்புத்திறனும் அதன் வீரியத்தன்மையும் வெகுவாக பாதிக்கப்படும்.
Read more: விவசாயிகளுக்கான PM kisan நிதியுதவி திட்டம்- தேர்தலுக்கு பின்பும் தொடருமா?
விதைகளைக் கடினப்படுத்துவதன் நன்மைகள்:
- விதைகளின் முளைப்புத்திறன் மற்றும் அதன் வீரியத்தன்மைகள் அதிகரிக்கின்றன.
- கடினப்படுத்தப்பட்ட விதைகளிலிருந்து உருவாகும் பயிர் மற்ற பயிரைப்போல் தண்னணீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் அதிகமாக வாடுவதில்லை.
- பூக்கள் வெளிவரும் காலம் சிறிது விரைவுறுகிறது.
- வறட்சி மற்றும் உவர் மண்ணில் தீமையைத் தாங்கும் திறன் ஏற்படுகிறது.
- கடினப்படுத்தப்பட்ட விதைகள் அதிக வெப்பத்தைக் தாங்கும் திறனைப் பெறுகிறது.
நெல் விதை உறக்கம்:
பொதுவாக விதைகள் அறுவடைக்கு முன் உறக்கத்தில் ஆழ்ந்து விடுகின்றன. விதை உறக்க காலமானது இரகத்திற்குத் தகுந்தாற்போல் மாறுபடும். சாதாரணமாக, அறுவடை செய்து விதை சுத்தம் செய்யும் இடைவெளியில் விதை உறக்க காலமானது கழிந்துவிடும்.
ஆனால், ஆடுதுறை 37 என்ற இரகத்தில் நெல் அறுவடை செய்து 50 நாட்களுக்கு மேலும் விதை உறக்கம் உள்ளது. ஆனால், அறுவடை செய்து, உடனடியாக விதைகளை விதைப்பதற்குப் பயன்படுத்தும்போது விதைகள் நன்கு முளைப்பதில்லை. இவ்வாறு விதை உறக்கமுள்ள விதைகளின் விதை உறக்கத்தை விதைப்பதற்கு முன்பு நீக்க வேண்டும்.
விதை உறக்கம் நீக்கும் முறைகள்: ஓர் ஏக்கருக்கு தேவையான விதை உறக்கமுள்ள நெல் விதைகளை விதைப்பதற்கு முன் 0.5 சதம் பொட்டாசியம் நைட்ரேட் உப்புக்கரைசலில் ஊறவைக்க வேண்டும்.
அதாவது, விதைகளை 100 சிராம் உப்பு மற்றும் 20 லிட்டர் நீர் கலந்த கரைசலில் சுமார் 16 மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும். பின்னர் விதைகளிலுள்ள நீரை நன்கு வடித்து விட்டு வழக்கமாக மூடிவைக்கும் முறையில் (ஈர சாக்கு கொண்டு மூடி இருட்டான இடத்தில்) இரவு மூடிவைக்க வேண்டும். பின்பு விதைக்கப் பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
Read more:
அடுத்த 2 நாட்கள்: உள் தமிழகத்தில் உஷ்ணம்- டெல்டா மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!
கால்நடை தீவன உற்பத்தி- பிப்ரவரியில் TNAU மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!