எலுமிச்சை விவசாயம் தற்போது நன்முறையில் வளர்ந்து வருகிறது. எலுமிச்சையின் விற்பனை விலையே இதற்கு காரணம். எலுமிச்சை விவசாயிகள், விற்பனையை தொடங்கினால், இலாபம் அதிகளவு கிடைக்கும். எலுமிச்சையில் ஏற்படும் நுண்ணூட்ட குறைபாட்டை சரிசெய்ய உரக்கலவையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம். எலுமிச்சையில் பல வகை இரகங்கள் உள்ளது. சாய்சாபதி, ரஸ்ராஜ், விக்ரம் மற்றும் பிரமாலினி போன்ற எலுமிச்சை இரகங்கள் உயர் விளைச்சல் இரகங்களாகும். பி.கே.எம் 1 மற்றும் பாலாஜி இரகங்கள் தமிழக மண்ணிற்கு உகந்தது.
நுண்ணூட்ட மேலாண்மை (Micronutrient Management)
எலுமிச்சை பழப் பயிரில் சத்துக் குறைவால் நுண்ணூட்டச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. இந்த குறைபாடுகளை தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம். எலுமிச்சைகள் காய்க்கும் முன்பாக புதிய தளிர்கள் தோன்றும். மார்ச், ஜுலை மற்றும் அக்டோபர் மாதங்களில், ஒரு லிட்டர் தண்ணீரில் 5 கிராம் அளவு ஜிங்க் சல்பேட்டை கரைத்து தெளிக்க வேண்டும். இது தவிர மாற்று வழியும் உள்ளது. வருடத்திற்கு 3 முறை பரிந்துரைக்கப்பட்ட நுண்ணூட்ட உரக் கலவையை இட வேண்டும்.
எலுமிச்சையின் இளஞ்செடிகளுக்கு இரண்டு வருடங்களுக்கு, வாரம் ஒரு முறை நீர்ப் பாய்ச்சினால் போதுமானது. மழைக்காலங்களில் தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. செடியின் அடிப்பகுதியில் தண்ணீர்த் தேங்காமல் மரத்தை சுற்றி மண் அணைக்க வேண்டியது அவசியம். சொட்டு நீர்ப் பாசனத்தில், மரத்திற்கு ஆரம்ப பருவத்தில் 4 முதல் 6 லிட்டர் தண்ணீர்ப் பாய்ச்ச வேண்டும். முதிர்ச்சிப் பருவத்தில் 25 முதல் 30 லிட்டர் பாய்ச்ச வேண்டும்.
ஊடுபயிர்கள் (Intercropping)
தரை மட்டத்திலிருந்து 30 முதல் 45 செ.மீ. உயரத்திற்கு தோன்றும் கொப்பு, நீர் போத்துகள் மற்றும் குறுக்கு நெடுக்கான கிளைகளையும் அகற்றி விட வேண்டும். அவ்வப்போது களையெடுப்பதும் மிக அவசியம். முதல் 3 ஆண்டுகளில் ஊடுபயிர்களாக காய்கறி, மொச்சைப் பயிறு மற்றும் தட்டைப் பயிறு சாகுபடி செய்து கொள்ளலாம்.
பூ பூக்காத மரங்களுக்கு, 10 கிராம் பொட்டாசியம் நைட்ரேட்டை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். கோடை காலத்தில் எவ்வளவு தண்ணீர்ப் பாய்ச்சினாலும் ஓரளவு பிஞ்சுகள் உதிரும். அதிகமாக பிஞ்சுகள் உதிர்வதை தடுக்க, ஒரு லிட்டர் தண்ணீரில் 20 மில்லி வளர்ச்சி ஊக்கியை கலந்து, பிஞ்சுகள் மிளகு அளவில் இருக்கின்ற போது தெளிக்க வேண்டும்.
எலுமிச்சை செடிகள், நட்ட 4 ஆம் ஆண்டிலிருந்து காய்ப்புக்கு வந்து விடும். நன்கு பராமரித்து வந்தால் கிட்டத்தட்ட 20 வருடங்கள் நல்ல மகசூல் தரும். வருடம் முழுவதும் காய்கள் காய்த்தாலும் ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஜுலை, ஆகஸ்டில் தான் அதிகளவில் மகசூல் கிடைக்கும். ஏழு ஆண்டுகளுக்குப் பின் மரமொன்றுக்கு ஏறக்குறைய 1000 முதல் 2000 எலுமிச்சைப் பழங்கள் கிடைக்கும்.
மேலும் படிக்க