தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்ற 50% மானியம்: அரசு அறிவிப்பு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக்த்தின் இரை விழுங்கிகள் வளர்ப்பு பயிற்சி, மதுரையில் மூங்கில் தோட்டம் உணவகம்: மக்களை ஈர்க்கும் உணவக அமைப்புகள், தமிழ்நாட்டில் உள்ள 5 ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குத் தேசிய தர உறுதி சான்றிதழ்: மா. சுப்பிரமணியன் அறிவிப்பு முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
தமிழ்நாட்டில் உள்ள 5 ஆரம்பச் சுகாதார நிலையங்களுக்குத் தேசிய தர உறுதி சான்றிதழ்: மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள 5 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர உறுதி சான்றிதழ் கிடைக்கபெற்றதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ம.சுப்பிரமணியன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் தளவாய்பட்டினம், திருப்பத்தூர் மாவட்டம் பாச்சூர், ராமநாதபுரம் மாவட்டம் வெங்கிட்டாங்குறிச்சி, தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தர உறுதி சான்று கிடைக்கபெற்றுள்ளது.
தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்ற 50% மானியம்: அரசு அறிவிப்பு
வேளாண் தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றிச் சாகுபடிக்குக் கொண்டு வருவதன் மூலம் சாகுபடி பரப்பு மற்றும் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டாரத்தில் 2022-23 ஆம் ஆண்டில் 510 ஏக்கர் அளவில் இரண்டு ஆண்டுகளாக உள்ள தரிசு நிலங்களில் முட்புதர்களை அகற்றி, சாகுபடிக்கு கொண்டு வருவதற்காக 50 சதவீத மானியம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த அரிய வாய்ப்பினை விவசாயிகள் பயன்படுத்தித் தங்களது தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றிட சிவகாசி, வேளாண்மை உதவி இயக்குநர் ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் இரை விழுங்கிகள் வளர்ப்பு பயிற்சி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பூச்சியியல் துறை மூலமாக, "ஒட்டுண்ணிகள் மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு மற்றும் பயன்படுத்தும் முறைகள்" பற்றிய ஒருநாள் பயிற்சி வரும் செப்டம்பரி 2-ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது. இந்த பயிற்சியில் ஒட்டுண்ணி வகைகள், ஊண் விழுங்கிகள், புழு ஒட்டுண்ணி வளர்ப்பு, கண்ணாடி இறக்கைப் பூச்சி வளர்த்தல், பொறிவண்டு வளர்ப்பு முதலானவை வளர்க்கப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் 02.09.2022 வெள்ளிக்கிழமை அன்று, காலை 9.00 மணிக்குள்ளாக பூச்சியியல் துறைக்கு வருகை தர வேண்டும். பயிற்சி நேரம் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு entomology@tnau.ac.in என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளலாம்.
வாழை கிளஸ்டர் அமைக்கத் திட்டம்: Agency-க்களுக்குத் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை அழைப்பு
தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமை, தேசிய தோட்டக்கலை வாரியம், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தால் தேனியில் வாழை கிளஸ்டர் அமைக்க Agency-க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள ஏஜென்சிகள் www.nhb.gov.in அல்லது https://tnhorticulture.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இவ்வாறு பதிவு செய்ததற்கான கடைசி தேதி வரும் அக்டோபர் 25 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உச்சத்தைத் தொட்ட பூக்களின் விலை
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வடைந்துள்ளது. இயல்பாக 300 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும் மல்லிகைப்பூ இன்று 1600 முதல் 1800 ரூபாய் எனும் விலையில் விற்பனையாகிறது. இதே போல, 50 - 60 ரூபாய்க்கு விற்பனையாகும் சம்மங்கி இன்று 200 ரூபாய்க்கும், 250 - 300 ரூபாய்க்கு விற்பனையாகும் பிச்சி, முல்லை பூக்கள் இன்று 900 ரூபாய்க்கும் என விற்பனையாகிறது.
மேலும் படிக்க