விவசாய மின் இணைப்பில் புகார்கள் எதிரொலி காரணமாக தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின அறிவித்தார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் 500 மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டப்பட்டது. இது குறித்த சுற்றறிக்கையை அனைத்து உதவி மின் பொறியாளர் அலுவலகங்களுக்கும், விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குமாரசுவாமி அனுப்பினார். அதில், முன்னுரிமை வரிசையில் 1.4.2003 முதல் 31.3.2013 வரை இணைப்புக்காக விண்ணப்பம் பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் செயற் பொறியாளர்களை தொடர்பு கொண்டு 30 நாள் அறிவிப்பு கடிதம் பெற்று ஆவணங்களை சமர்பித்து மின் இணைப்பு பெறலாம்.31.3.2014 வரை விவசாய விண்ணப்பம் பதிவு செய்து 10 ஆயிரம் ரூபாய் சுயநிதி திட்டத்தில் மின் இணைப்பு பெற 500 ரூபாய் முன் மதிப்பீட்டு தொகை செலுத்தியுள்ள விண்ணப்பதாரர்கள் மதிப்பீட்டு தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம்.
இலவச மின் இணைப்பு (Free Electricity Connection)
31.3.2018 வரை விவசாய விண்ணப்பம் பதிவு செய்து, 25 ஆயிரம் அல்லது 50 ஆயிரம் ரூபாய் சுயநிதி திட்டத்தில் மின் இணைப்பு பெற 500 ரூபாய் முன் மதிப்பீட்டு தொகை செலுத்திய விண்ணப்பதாரர்கள் மதிப்பீட்டு தொகை செலுத்தி மின் இணைப்பு பெற்றுக்கொள்ளலாம். இந்த ஆண்டுகளில் பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக அறிவிப்பு கடிதம் வழங்கப்படும். கடிதம் கிடைக்கப்பெற்றவுடன் விண்ணப்பதாரர்கள் சமீபத்திய தேதியில் வி.ஏ.ஓ.,விடம் பெறப்பட்ட ஆவணங்களை அளித்து குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முன்னுரிமையினை பதிவு செய்ய வேண்டும். தயார் நிலை முன்னுரிமையின் அடிப்படையில் மின் இணைப்பு வழங்கப்படும்.
விரைவு மின் இணைப்பு வழங்கல் திட்டத்தின் மூலம் 5 எச்.பி., வரை உள்ள மின் மோட்டார்களுக்கு 2 லட்சத்து 50 ஆயிரம், 7.5 எச்.பி., வரை 2 லட்சத்து 75 ஆயிரம், 10 எச்.பி., வரை 3 லட்சம், 15 எச்.பி., வரை 4 லட்சம் ரூபாய் வீதம் ஒரு முறை கட்டணம் செலுத்தும் விண்ணப்பதாரர்களுக்கு, இலவச விவசாய மின் இணைப்பு பெற செயற்பொறியாளரிடம் இசைவினை தெரிவித்து பணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் 60 விவசாய மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 440 மின் இணைப்புகள் வழங்காமல் நிலுவையில் உள்ளது.
விவசாயிகள் புகார் (Farmers Complained)
விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கு, கிராமப்புறங்களில் உள்ள மின் வாரிய அதிகாரிகள் 15 ஆயிரம் ரூபாய் வரை லஞ்சம் கேட்கின்றனர். இதனால் பல விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்காமல் இருப்பதாக மின்வாரிய தலைமை அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. இதன் எதிரொலியாக, தமிழக மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, விழுப்புரம் மாவட்டத்தில் விரைவில் ஆய்வு செய்ய உள்ளார். அப்போது, விவசாய மின் இணைப்பு வழங்குவதற்கு தாமதம் ஏற்படுவது குறித்தும், விவசாயிகள் புகார்கள் குறித்தும் விசாரணை நடத்த உள்ளார்.
மேலும் படிக்க
ஒருங்கிணைந்த பண்ணையம்: முதல் முயற்சியே வெற்றி கண்ட இயற்கை விவசாய தம்பதி!