PM-kisan திட்டத்தில் தகுதி இல்லாதவர்கள் நிதியுதவி பெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. இதன் அடிப்படையில் சுமார் 3 லட்சம் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் இருந்து பணத்தைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (பிஎம் கிசான்) எனப்படும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள நலிந்த விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 என ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
11ஆவது தவணை
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இதுவரையில் மொத்தம் 10 தவணைகள் வழங்கப்பட்டுவிட்டன. அடுத்ததாக, 11ஆவது தவணைக்காகக் கோடிக்கணக்கான விவசாயிகள் காத்திருக்கின்றனர். இந்தப் பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த நிதியுதவி பெறுவதற்கு கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட விதிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
யாருக்கு கிடைக்கும்?
பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் இணைவதற்கு பயிரிடக்கூடிய நிலங்களைத் தங்களது பெயரில் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்கள் தகுதியுடையவை. கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். ஆனால், நிறுவன விவசாயிகள், மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற அதிகாரிகள், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், வருமான வரி செலுத்துபவர்கள், அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் உழவர் குடும்பங்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொறியாளர்கள் போன்றோர் இத்திட்டத்தில் இணைய முடியாது.
தகுதியற்ற பயனாளிகள்
உத்தரப் பிரதேச மாநிலத்தில் மட்டும் சுமார் 3.15 லட்சம் தகுதியற்ற பயனாளிகள் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற்றுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 2.55 லட்சம் பேர் ஒருமுறையாவது நிதியுதவி பெற்றவர்கள் ஆவர்.
தவறானத் தகவல்கள்
அதேபோல, திட்டத்தின் பயனாளிகளில் சுமார் 6.18 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் தவறாக உள்ளன.
இந்நிலையில், தகுதியற்ற நபர்கள் பெற்ற நிதியுதவியைத் திரும்பப் பெறும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு பணம் வசூல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியில்லாதவர்கள்
வருமான வரி செலுத்துபவர்கள் போன்ற தகுதியற்ற விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து நிதியுதவி பெறுவதாக குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. அதேபோல, கணவன் - மனைவி இருவருமே நிதியுதவி பெறுவதாகவும் தெரியவந்துள்ளது. இதுபோன்று நிதியுதவி பெறுபவர்களைக் கண்டுபிடித்து அவர்களை திட்டத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
மேலும் படிக்க...
ஓய்வூதியத் தொகை உயர்வு-மத்திய அரசு நடவடிக்கை!
மூத்த குடிமக்களுக்கு ஏசி ரயிலில் ஓசி பயணம்- அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!