விழுப்புரம் மாவட்டத்தில் நுண்ணீர்ப் பாசனக் கட்டமைப்புகளுக்கான அரசின் மானியத் திட்டங்களில் அதிகபட்சமாக 40,000 ரூபாய் வரை மானியம் வழங்கப்பட இருப்பதால், விவசாயிகள் பயன்பெறுமாறு வேளாண்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ராஜசேகர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
தமிழகம் நீர்ப் பற்றாக்குறையுள்ள மாநிலம் என்பதால், பாசன வசதி இல்லாத இடங்களில் பாசன நீர் ஆதாரங்களை உருவாக்கி, நுண்ணீர் பாசன முறையை அமைப்பதற்கு முன்வரும் விவசாயிகளை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, நுண்ணீர்ப் பாசனத்துக்கு வழங்கப்படும் மானியங்களுடன், தற்போது துணை நிலை நீர் மேலாண்மைப் பணிகளுக்கும் வேளாண் துறை மூலம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இதன்படி, பாதுகாப்பான குறு வட்டங்களில் குழாய்க்கிணறு/துளைக்கிணறு அமைப்பதற்கு செலவிடப்படும் தொகையில் 50 சதவீத மானியமாக, அதிகபட்சமாக ரூ.25,000 அளிக்கப்படும்.
டீசல் பம்பு செட்/ மின் மோட்டார் பம்புசெட் நிறுவுவதற்கு அதன் விலையில் 50 சதவீத மானியம், அதிகபட்சம் ரூ.15,000 அளிக்கப்படும்.
வயலுக்கு அருகில் பாசன நீரைக் கொண்டு செல்ல நீர்ப்பாசன குழாய் அமைப்பதற்கு 50 சதவீத மானியத் தொகையாக ஹெக்டேருக்கு ரூ.10,000 வரை வழங்கப்படும்.
பாதுகாப்பு வேலியுடன் தரைநிலை நீர்த் தேக்கத் தொட்டி நிறுவுவதற்கு, அதற்கு ஆகும் செலவில் 50 சதவீதத் தொகை, ஒரு கன மீட்டருக்கு ரூ.350க்கு மிகாமலும், ஒரு பயனாளிக்கு அதிகபட்சம் ரூ.40,000 அளவில் மானியம் வழங்கப்படும்.
விவசாயிகள் இத்திட்டத்தில் மானியம் பெறுவதற்கு, வேளாண்மை துணை இயக்குநர், உதவி இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) அல்லது வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களில் விண்ணப்பத்தை அளித்து பதிவு செய்து பயன் பெறலாம்.
இத்திட்டப் பணிகளை விவசாயிகள் முதலில் தங்கள் சொந்த செலவில் மேற்கொண்டு, அதற்கான முழு ஆவணங்களையும் வேளாண் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இப்பணிகளுக்கான மானியம், நுண்ணீர்ப் பாசனம் அமைத்து, மானியத் தொகை அந்த நிறுவனங்களுக்கு விடுவிக்கப்பட்ட பிறகு, இத்துணை நீர் மேலாண்மைக்கான மானியத் தொகை முழுவதும் விவசாயிகளின் சேமிப்பு கணக்குக்கு நேரடியாக வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
PMKSY: சொட்டு நீர்ப்பாசனம் அமைக்க விருப்பமா? 100% மானியம் தருகிறது மத்திய அரசு!
PMSMY: ஏழை விவசாயி குடும்பத்திற்கு 2-வது வருமானம்! மத்திய அரசின் திட்டம்!