தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரிசி அட்டைதாரருக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000, ஒரு கிலோ அரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தார்.
இத்திட்டத்தின் மூலம் 2.19 கோடி அரிசி அட்டைதாரர்கள் மற்றும் புனர்வாழ்வு முகாம்களில் உள்ள இலங்கையர்கள் பயனடைவார்கள். தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இத்திட்டத்தை ஜனவரி 2-ம் தேதி சென்னையில் முதல்வரும், அன்றைய தினம் அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்களும் தொடங்கி வைக்கிறார்கள்.
2.உழவர் நலத்துறையின் அறிவிப்பு குறித்து தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டம்
வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் தலைமையில், வேளாண் உழவர் நலத்துறையின் 2021-22 மற்றும் 2022-23 ஆம் வருடங்களுக்கான அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.
3.கொப்பரை தேங்காய்க்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு
2023ஆம் ஆண்டு பருவத்தில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கொப்பரை தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, சாரசரி தரத்திலான அரவைக் கொப்பரையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.10,860 ஆகவும் முழு கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ.11,750 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு பருவத்தைக் காட்டிலும் அரவைக் கொப்பரைக்கு ரூ.270வும் முழு கொப்பரைக்கு ரூ.750வும் அதிகமாகும்.
4.விவசாயிகளுக்கான உழவன் செயலி: இதுவரை 12.70 லட்சம் பேர் பதிவிறக்கம்
விவசாயிகளுக்கான உழவன் கைப்பேசி செயலியை இதுவரை12.70 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இதுகுறித்து, வேளாண்மைத் துறை வெளியிட்ட செய்தி: கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், 9 முக்கிய சேவைகளுடன் உழவன் செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்போது 22 வகையான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்தச் செயலியில் உள்ள சேவைகள் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளன. விவசாயிகளிடையே இந்த உழவன் செயலி பிரபலமாகி வருகிறது. இதனை இதுவரை 12 லட்சத்து 70 ஆயிரம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும் பதிவிறக்கம் செய்யாத விவசாயிகள் பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
5.நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம்
நாமக்கல் வட்டார பகுதி விவசாயிகளுக்கு வேளாண்மை -உழவர் நலுத்துறை சார்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என வேளாண்மை உதவி இயக்குநர். ப. சித்ரா, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நுண்ணீர் பாசனம் மூலம் குறைந்த நீரை கொண்டு அதிக பரப்பளவில் சாகுபடி செய்யலாம். நீரில் கரையும் உரங்களை நேரடியாக பயிரின் வேர் பகுதிக்கு வழங்குவதால் உர பயன்பாடு குறைகிறது. களைகளை கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு/குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நுண்ணீர்ப் பாசன நிறுவனத்தின் மூலம் சொட்டுநீர் பாசன கருவி, தெளிப்பு நீர் பாசனக்கருவி, மழை மழை தூவான் அமைத்து தரப்படுகிறது.
6.இலங்கை படையினரால், தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்
சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்று ஞாயிற்றுக்கிழமை காலை திரும்பிய மீனவர்கள் குழு சர்வதேச கடல் எல்லையில் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதாக புகார் தெரிவித்தனர். இருப்பினும், ராமேஸ்வரத்தில் உள்ள எந்த நிறுவனத்திடமும் அதிகாரப்பூர்வ புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாகவும், சுமார் 10 விசைப்படகுகளின் மீன்பிடி சாதனங்களை சேதப்படுத்தியதாகவும் மீனவர்கள் குற்றம் சாட்டினர். துன்புறுத்தல் காரணமாக அவர்கள் குறைந்த பிடியுடன் திரும்ப வேண்டியதாக இருந்தது. மீனவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ம.க., தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், தமிழக மீனவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடித் தளங்களில் அச்சமின்றி செயல்படுவதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், இந்த தாக்குதல் இந்திய அரசுக்கு சவாலாக உள்ளது என்றும் அவர் கூறினார். பேச்சுவார்த்தை உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
7.காய்கறிகளின் விலை சரிவு!
சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை திடீரென சரிந்துள்ளதால் நுகர்வோர் மகிழ்ச்சியில் உள்ளனர். கோயம்பேடு காய்கறி சந்தையில் வழக்கத்தை விட வரத்து அதிகரித்தாலும், கிறிஸ்துமஸ் மற்றும் நள்ளிரவு பெய்த மழை காரணமாக வியாபாரம் குறைந்துள்ளதால், அனைத்து அத்திவாசிய காய்கறிகளின் விலை சரிந்துள்ளது. கேரட், பீட்ரூட் ஆகியவை ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், முள்ளங்கி, சவ்சவ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகள் 7 முதல் 15 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆந்திர வெங்காயம் கிலோ 14 ரூபாய்க்கும், நாட்டுதக்காளி கிலோ 15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
8.நிலக்கடலை பயிர் காப்பீடு டிசம்பர் 31 கடைசி நாள்
நாமக்கல் மாவட்டத்தில். 2022-23ம் ஆண்டு ராபி பருவத்தில் நிலக்கடலை பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நிலக்கடலை பயிர்க்கு புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ், பயிர் காப்பீடு செய்து பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட விவசாயிகளை வேளாண்மை இணை இயக்குநர், சு.துரைசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளார். மேலும் கூறுகையில் பிரிமியத் தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு நிலக்கடலை பயிருக்கு ரூ.311.22/- கடைசி தேதி 31.12.22க்குள் செலுத்த வேண்டும்.
9.கூகுளின் புதிய தொழில்நுட்பம்: விவசாயித்தில் பெரும் பங்கை வகிக்கும்
விவசாயத் துறையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை அதிகரிக்க கூகுள் இப்போது சுமார் 10 லட்சம் டாலர்களை மானியமாக வழங்கப் போகிறது. இந்த மானியம் மூலம் விவசாயத் துறையில் புதிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு, இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது விவசாயிகளுக்குப் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் உருவாக்கப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் விவசாயிகளுக்கு வானிலை பற்றிய துல்லியமான தகவல்கள் கிடைக்கும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம், வானிலை எப்போது நன்றாக இருக்கும், எப்போது வானிலை மோசமாக மாறும் என்பதை விவசாயிகள் இப்போது அறிந்து கொள்வார்கள். இதன் மூலம் விவசாயம் தொடர்பான முடிவுகளை விவசாயிகள் எளிதாக எடுக்க முடியும். இதுமட்டுமின்றி, பயிர் மற்றும் பிற விவசாய தகவல்களும் இந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிடைக்கும். இந்திய மக்கள்தொகையில் பாதி பேர் விவசாயத்தை நம்பியுள்ளனர். எனவே, இந்த செயற்கைத் தொழில்நுட்பம் விவசாயத்திற்கு பெரும் பயனளிக்கும் என்று கூகுள் ரிசர்ச் இந்தியா இயக்குநர் மணீஷ் குப்தா தெரிவித்தார்.
10. வானிலை தகவல்
இன்று மற்றும் நாளை தமிழ்நாடு. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானகு முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மீனவர்கள் நாளை குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்ச்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் படிக்க:
தமிழ் நாட்டின் நாட்டு மாடுகள் மற்றும் அதன் வகைகள்- ஓர் பார்வை
காளான் வளர்ப்பு கூடம் அமைக்க ரூ.1லட்சம் மானியம்| கத்தரி விலை முன்னறிவிப்பு| Millet Lunch