மத்திய அரசின் உத்தரவுப்படி பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் தேர்வில் வேளாண் துறை கெடுபிடி காட்ட துவங்கியுள்ளது. நாடு முழுதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதான் மந்திரி கிஷான் (PM Kishan) திட்டத்தின் கீழ் மூன்று தவணைகளில் ஆண்டு தோறும் 6000 ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
வேளாண் துறை நடவடிக்கை:
தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ் 44 லட்சம் பேர் சேர்க்கப்பட்டு இருந்தனர். இதில் பலர் விவசாயிகள் அல்லாதோர் என தெரியவந்தது. இதையடுத்து முறைகேடாக சேர்ந்தவர்களின் வங்கி கணக்குகளில் (Bank Account) செலுத்தப்பட்ட உதவித் தொகை திரும்ப பெறப்பட்டது. இதற்கு உதவியாக இருந்த வேளாண் துறை அதிகாரிகள், அலுவலர்கள், பொது சேவை மையம், தனியார் இ - சேவை மைய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நடப்பு ஆண்டிற்கான மூன்றாவது தவணை (Third Installment) உதவித்தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் விரைவில் வரவு வைக்கப்பட உள்ளது. அதனால் மத்திய அரசின் உத்தரவுப்படி பயனாளிகள் தேர்வில் வேளாண் துறையினர் (Agriculture Department) கெடுபிடி காட்ட துவங்கியுள்ளனர்.
புதிய விவசாயிகளை சேர்ப்பதற்கான வழிமுறை:
பிரதான் மந்திரி கிஷான் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பித்தோர் விபரங்களை, கிராம நிர்வாக அலுவலர் (VAO) சரிபார்த்து ஆன்லைனில் பதிவேற்றம் செய்வார். அதன்பின் தாசில்தார் ஆர்.டி.ஓ. (RDO)- டி.ஆர்.ஓ. (DRO) ஆகியோரும் இந்த விண்ணப்பங்களை ஆன்லைனில் சரிபார்ப்பர். வேளாண் துறை அலுவலகத்திற்கு விண்ணப்பம் சென்றபின் அங்குள்ள தனிப் பிரிவில் விண்ணப்பதாரர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்படும். இறுதியாக வேளாண் துறை இயக்குனரின் சரிபார்ப்பிற்கு பின் பயனாளிகள் பட்டியல் மத்திய அரசிற்கு அனுப்பி வைக்கப்படும்.
வேளாண் துறையின் இந்த கெடுபிடிகளால் வரும் காலங்களில் இத்திட்டத்தில் முறைகேடாக யாரும் சேர முடியாத நிலை ஏற்படும். இனி, பிரதான் மந்திரி கிஷான் திட்டத்தின் உதவித்தொகை முழுக்க முழுக்க விவசாயிகளுக்கு மட்டுமே கிடைக்கும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
70% மானியத்தில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள்! முதல்வர் தொடங்கி வைத்தார்!
மழைநீரில் மூழ்கிய பயிர்களை காப்பாற்ற போராடும் விவசாயிகள்! வெள்ள நீரை வடிய வைக்கும் பணி தொடக்கம்!