பொள்ளாச்சியின் ஆனைமலை ஒன்றிய பகுதியில், பந்தல் சாகுபடிக்கு விவசாயிகளுக்கு 2 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. எனவே அதனைப் பெற உடனடியாக விண்ணப்பிக்குமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
பந்தல் காய்கறிகள்
கோவை மாவட்டத்தின் உள்ள பொள்ளாச்சியில், காய்கறிகள் சாகுபடி செய்வதற்கு உதவும் வகையில், மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.ஆனைமலை ஒன்றிய பகுதிகளில் ஆண்டு முழுவதிலும், 490 ஏக்கர் பரப்பில், பாகற்காய், பீர்க்கங்காய், சுரக்காய் மற்றும் புடலை உள்ளிட்ட பந்தல் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன.
அதிக செலவு
கற்கள் நட்டி, கம்பிகளைக்கொண்டும், மூங்கில் குச்சிகள் அமைத்தும், விவசாயிகள் பந்தல் சாகுபடி செய்கின்றனர். இதற்கு அதிகப்படியான செலவு ஏற்படுவதால், விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில், விவசாயிகளுக்கு உதவும் வகையில் மானிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
ரூ.25,000 மானியம்
இதுகுறித்து ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜமுனாதேவி கூறியதாவது:
விவசாயிகள் மூங்கில் பயன்படுத்தி பந்தல் காய்கறி சாகுபடி செய்ய, ஒரு ஹெக்டேருக்கு, 25 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. 10 ஹெக்டேருக்கு இலக்கு பெறப்பட்டுள்ளது. அதேபோல், கருங்கற்கள் மற்றும் கம்பிகள் பயன்படுத்தி பந்தல் காய்கறி சாகுபடி செய்ய, ஒரு ஹெக்டேருக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரையில் மானியம் வழங்கப்படுகிறது.
இதற்கு, இரண்டு பேருக்கு வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.விவசாயிகள் ஆனைமலை தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் பதிவு செய்து, திட்டங்களில் பயன்பெறலாம். இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும் படிக்க...