Farm Info

Sunday, 31 July 2022 10:23 AM , by: Elavarse Sivakumar

டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட்உரங்களை பயன்படுத்துமாறு, நெல் விவசாயிகளுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. டிஏபி உரத்தை மாவட்டங்களுக்கு அனுப்புவதில் சிலசமயம் தாமதம் ஏற்படுகிறது. சூப்பர் பாஸ்பேட் உரத்தால் பயிரின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்கும்.

இதுதொடர்பாக, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம். ஆர். கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் பெரும்பாலும் டிஏபி உரத்தினையே அடி உரமாக பயன்படுத்துகிறார்கள். டிஏபி உரம் தயாரிப்புக்குத் தேவைப்படும் மூலப்பொருளான பாஸ்பாரிக் அமிலத்தின் விலை அகில உலக அளவில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதனால், உள்நாட்டில் டிஏபி உர உற்பத்தி குறைந்து, பெரும்பாலான டிஏபி உரங்கள் வெளி நாட்டிலிருந்தே இறக்குமதி செய்து, விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தாமதம்

இறக்குமதியின் போது சில நேரங்களில் கப்பல் பற்றாக்குறை அல்லது துறைமுகங்களில் இட நெருக்கடி போன்ற காரணங்களினால் டிஏபி உரத்தை துறைமுகத்தில் இறக்கி, மாவட்டங்களுக்கு அனுப்புவதில் சிலசமயம் தாமதம் ஏற்படுகிறது.

எனவே, மத்திய அரசின் உரத்துறையானது, டிஏபி உரத்துக்கு மாற்றாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை அடி உரமாக இட விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குமாறு அனைத்து மாநிலங்களையும் வலியுறுத்தி வருகிறது.

மத்திய அரசு  அறிவுரை

அதன்படி, 9 கிலோ தழைச்சத்தும் 23 கிலோ மணிச்சத்தும் உள்ள 50 கிலோ டிஏபி உரத்திற்கு மாற்றாக, அடி உரமாக, காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரங்களை கீழ்க்கண்ட மூன்று வழிகளில் ஏதேனும் ஒரு வழியினை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மூன்று மூட்டை (150 கிலோ) சூப்பர் பாஸ்பேட்டும், 20 கிலோ யூரியாவும் (அல்லது) ஒரு மூட்டை (50 கிலோ) 20:20:0:13 காம்ப்ளக்ஸ்சும், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் (அல்லது) ஒரு மூட்டை (50 கிலோ) 16:20:0:13 காம்ப்ளக்ஸ்சும், 75 கிலோ சூப்பர் பாஸ்பேட்டும் பயிரின் வளர்ச்சிக்கு அவசியம் தேவைப்படுகிறது.

இத்துடன் கந்தகச்சத்து காம்ப்ளக்ஸ் உரத்தில் 13 சதமும் சூப்பர் பாஸ்பேட் உரத்தில் 11 சதமும் உள்ளதால், பயிரின் வளர்ச்சியும், மகசூலும் அதிகரிக்கும். இதனால், டிஏபி இட்ட வயலைப் போன்றே, பயிர்வளர்ச்சி செழித்து, விளைச்சலும் அதிகரிக்கும்.

இருப்பு

தற்போது, அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் காம்ப்ளெக்ஸ் உரமும், சூப்பர் பாஸ்பேட் உரமும் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. எனவே, டிஏபி உரத்திற்கு மாற்றாக சூப்பர் பாஸ்பேட் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை நெல்லுக்கு அடியுரமாக பயன்படுத்து வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட் கிழிப்பு - கைது செய்த போலீஸார்!

பொருளாதாரத்திற்கு இயற்கை விவசாயமும் அடிப்படை - பிரதமர் மோடி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)