வேளாண் துறைக்கு தேவையான அடிப்படை கருவிகளை தயாரித்து விவசாயிகளுக்கு உதவ, கோயம்புத்தூர் மாவட்ட தொழில் துறையினர் முன்வரவேண்டும் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலை, அழைப்பு விடுத்துள்ளது. வேளாண் மற்றும் விவசாயிகளின் தேவைகளின் அடிப்படையில் பல்கலை வடிவமைத்துள்ள மாடல் கருவிகளை கொண்டு புதிய நவீன கருவிகளை செய்து தர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
நீடிக்கும் ஆட்கள் பற்றாக்குறை
ஒரு நாட்டின் அடிப்படை தேவையே வேளாண்மை என்றபோதிலும், இந்தியாவில் நலிந்து வரும் தொழிலாக வேளாண்மை மாறி வருகிறது. பலரும் வேறு தொழில் தேடி சென்று வருவதால் வேளாண்மை தொழிலில் இருப்போருக்கும், விவசாயிகளுக்கும், ஆட்கள் பற்றாக்குறை நீடித்து வருகிறது. ஆட்கள் கிடைத்தாலும், பெண்களுக்கு மட்டுமே, 300 முதல் 400 ரூபாய் வரையிலும், ஆண்களுக்கு 750 முதல் 900 ரூபாய் வரையிலும், தேவையை பொறுத்து நாள் கூலியை, விவசாயிகள் தர வேண்டியுள்ளது.
புதிய மாடல் கருவிகள்
விவசாயிகளுக்கு அதிக கூலி, உரம், உழவு, பூச்சி மருந்து உள்ளிட்ட இடுபொருள் செலவுகள் தேவை அதிகம் ஏற்படுகின்றன. விளைபொருட்களின் விலையும் பல சமயங்களில் குறைந்து விடுவதால் விவசாயிகளால் லாபம் ஈட்ட முடிவதில்லை. எனவே, விவசாயிகளுக்கு உதவும் வகையில், வேளாண்மை கருவிகளை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் கண்டறிந்து மாடல் கருவிகளை தயாரித்துள்ளது. வேளாண்மை கருவிகளில் பல்வேறு மாற்றங்களையும், புதுமையையும் புகுத்தியுள்ளது பல்கலைக்கழகம்.
தொழில்துறையினருக்கு அழைப்பு
வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறையை சமாளிக்கவும், வேளாண் பணிகளை வேகமாக மேற்கொள்ளவும் புதிய கருவிகள் உதவுகின்றன. பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்டறிந்த இந்த கருவிகளை, வணிக ரீதியாக உற்பத்தி செய்து, விவசாயிகளுக்கு பயன்தரும் வகையில் தயாரிக்க, தொழில் நிறுவனங்களுக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அழைப்பு விடுத்துள்ளது.கண்காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த வேளாண் மாடல் கருவிகளை கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு தலைமையிலான குழுவினர் இந்த கருவிகளை பார்வையிட்டனர்.
அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில் புதிய கருவிகள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், இந்த புதிய மாடல் வேளாண் கருவிகள் குறித்து தொழில் நிறுவனத்தினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர், இந்த கருவிகளை, உற்பத்தி செய்யத் தேவையான அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் பல்கலைக்கழகம் அளிக்கும் என்றும், தொழிற்துறையினர் அவற்றை செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டா். இந்த புதிய கருவிகள் பற்றிய விளக்கங்கள், இந்த ஆண்டு நடக்கவிருக்கும் அக்ரி இன்டெக்ஸ் கண்காட்சியில் இடம் பெறலாம் எனவும் குமார் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
‘இனிப்பு புரட்சி’-யில் இலக்கை எட்டவிருக்கும் தேசிய தேனீவளர்ப்பு & தேன் இயக்கம்!!
வீட்டுத் தோட்டம் அமைக்க சொட்டு நீர் உபகரணங்களுக்கு மானியம்! அனைவருக்கும் அழைப்பு!!
மரவள்ளி கிழங்கிலிருந்து மதிப்புக்கூட்டு பொருள் தாயரிப்பு! - விவசாயிகளுக்கு செயல் விளக்கப் பயிற்சி!!