வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண்மை ஆணையரகத்தில் 2021-2022 ஆண்டில் மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் அதிக மகசூல் பெற்ற 18 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கியும், பூச்சிக்கொல்லி அமலாக்க மேலாண்மை தகவல் இணையதளத்தையும் நேற்று (03.11.2023) தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு, விவசாயிகளின் நலனிற்காக பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு, இத்திட்டங்கள் விவசாயிகளை சென்றடைவதற்கு போதிய தொழில்நுட்ப அலுவலர்களையும், நிர்வாகப் பணியாளர்களையும் நியமனம் செய்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 213 தெரிவாளர்களில் 30 சுருக்கெழுத்துத் தட்டச்சர் (தரம்-3) மற்றும் 183 தட்டச்சர்களுக்கு பணி நியமன ஆணைகள் நேற்று வழங்கப்பட்டது.
பயிர் விளைச்சல் போட்டி:
விவசாயிகள், வேளாண்மை உழவர் நலத்துறை வழங்கி வரும் தொழில்நுட்பங்களை சரிவர கடைபிடித்து, அதிக மகசூல் பெறுவதை ஊக்குவிப்பதற்கு பயிர் விளைச்சல் போட்டியை நடத்தி வருகின்றது. 2021-22 ஆம் ஆண்டு நிலக்கடலை, பருத்தி, கரும்பு, மக்காச்சோளம் சோளம், கம்பு, துவரை, பச்சைப்பயிறு, மற்றும் உளுந்து பயிர்களில் மாநில அளவில் முதல் மற்றும் இரண்டாம் பரிசு பெற்ற 18 விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பூச்சிக்கொல்லி விற்பனை:
பூச்சிக் கொல்லி மருந்து உற்பத்தி ஆலைகள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை நிலையங்களுக்கு உரிமங்களை எளிய முறையில் இணையதளம் மூலம் பெறுவதற்கு, பூச்சிக்கொல்லி உற்பத்தி மற்றும் விற்பனை உரிமம் மேலாண்மை இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
விதைப்பு செய்ய இயலாமை:
தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் சம்பா நெல் மற்றும் இதர பயிர்கள் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் சில மாவட்டங்களில் மழைப்பொழிவு குறைவாக உள்ள நிலையில் விவசாயிகள் விதைப்பு மேற்கொள்ள இயலாத நிலை உள்ளது. இவ்விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்து கொள்வதன் மூலம் விதைப்பு செய்ய இயலாமை என்னும் இடர் நிகழ்வின் கீழ் இழப்பீட்டு தொகை பெற இயலும்.
தமிழ்நாட்டில், நீண்ட இழைப் பருத்தி சாகுபடி பரப்பினை அதிகரித்து விவசாயிகளுக்கு அதிக இலாபம் கிடைத்திடவும் தமிழ்நாட்டில் உள்ள நூற்பாலைகளுக்குத் தேவையான தரமான பருத்திப் பொதிகளை கிடைத்திடவும் தென்னிந்திய நூற்பாலைகள் அசோசியேசன் (SIMA) மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் விஞ்ஞானிகள் வேளாண் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஒரு கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு தமிழ்நாட்டின் பருத்தி சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியினை அதிகரித்திட உரிய கருத்துரு அரசுக்கு அனுப்பிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச்செயலாளர் அபூர்வா, இ.ஆ.ப. வேளாண்மை ஆணையர் முனைவர் இல.சுப்பிரமணியன், இ.ஆ.ப., வேளாண்மை கூடுதல் இயக்குநர் (பணி மேலாண்மை).ஸ்ரேயா பி.சிங், இ.ஆ.ப. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் டாக்டர் இரா. பிருந்தாதேவி. இ.ஆ.ப., மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் காண்க:
ஊசலாடிய தங்கத்தின் விலை படிப்படியாக உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி
1.42 லட்ச கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை- அரசாணை வெளியீடு