1.42 லட்ச கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகை- அரசாணை வெளியீடு

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Special incentive

சர்க்கரை ஆலைகளுக்கு 2022-2023 அரவைப் பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத் தொகை வழங்குவதற்காக ரூ.253.70 கோடி வழங்கி ஆணை வெளியீடப்பட்டுள்ளதாக வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தகவல் தெரிவித்துள்ளார்.

கரும்பு சாகுபடிப் பரப்பினையும், உற்பத்தியையும் அதிகரிப்பதற்காக, அதிக கரும்பு மகசூலுடன், அதிக சர்க்கரைக் கட்டுமானமும் தரக்கூடிய கரும்பு இரகங்களை பிரபலப்படுத்துதல், கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குதல் மற்றும் மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசனம், கரும்பு அறுவடை இயந்திரங்கள் வழங்குதல் ஆகியவை தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு அரசு, நலிவடைந்து வரும் சர்க்கரை ஆலைகளில் புனரமைப்பு, எத்தனால் உற்பத்தித் திட்டம், இணைமின் திட்டம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால் சர்க்கரை ஆலைகளின் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

கரும்பு சாகுபடிப் பரப்பு அதிகரிப்பு:

கரும்பு விவசாயிகளின் நலனுக்காக அரசு எடுத்த நடவடிக்கைகளினால், 2020-21 அரவைப் பருவத்தில் 95,000 எக்டராக இருந்த கரும்புப் பதிவு, 2022- 23 அரவைப் பருவத்தில் 1,50,000 எக்டராகவும், கரும்பு அரவை 98.66 இலட்சம் மெட்ரிக் டன்னிலிருந்து 160.54 இலட்சம் மெட்ரிக் டன்னாகவும் அதிகரித்துள்ளது. மேலும் சர்க்கரைக் கட்டுமானம் கடந்த பத்து ஆண்டுகளுக்கு பிறகு 2022-23 அரவைப் பருவத்தில் 9.27 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை:

2023-24 ஆம் ஆண்டு வேளாண்மை நிதி நிலை அறிக்கையில், 2022-23 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய தகுதியுள்ள விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.195/- சிறப்பு ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஒன்றிய அரசு 2022-23 ஆம் அரவைப் பருவத்திற்கு அறிவித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான (Fair and Remunerative Price) ரூ.2821.25/-யைக் காட்டிலும் கூடுதலாக மாநில அரசின் சிறப்பு ஊக்கத் தொகையாக டன்னுக்கு ரூ. 195 வழங்கிடும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.253.70 கோடி நிதியினை மாநில நிதியிலிருந்து வேளாண்மை-உழவர் நலத்துறைக்கு வழங்கி ஆணையிட்டுள்ளது.

அரசு வெளியிட்டுள்ள இந்த ஆணையின்படி, தமிழ்நாட்டில் இயங்கி வரும் இரண்டு பொதுத்துறை, 14 கூட்டுறவு மற்றும் 15 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு 2022-23 அரவைப் பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ள நியாயமான மற்றும் ஆதாய விலையான ரூ.2821.25 மற்றும் மாநில அரசின் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.195 யையும் சேர்த்து, டன் ஒன்றுக்கு ரூ.3016.25/- கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

2022-23 அரவைப்பருவத்தில் சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளின் விபரம் சேகரிக்கப்பட்டு சர்க்கரைத்துறை ஆணையரகத்தால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவின் பரிந்துரையின்படி, தகுதியுள்ள விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கரும்பு விவசாயிகளின் நலனுக்காக ரூ.253.70 கோடி மதிப்பில் தமிழ்நாடு அரசு வழங்கும் சிறப்பு ஊக்கத்தொகையினால் சுமார் 1.42 இலட்சம் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது செய்தி அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் காண்க:

BS3 பெட்ரோல்- BS4 டீசல் வாகனங்கள் வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்!

ஊசலாடிய தங்கத்தின் விலை படிப்படியாக உயர்வு- பொதுமக்கள் அதிர்ச்சி

English Summary: Special incentive for 1.42 lakh Tamilnadu sugarcane farmers Published on: 04 November 2023, 11:41 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.