மழைக்காலத்தில் பயிர்களில் தோன்றும் வாடல், வேரழுகல் மற்றும் தண்டழுகல் நோய்க்காரணிகளான பியூசோரியம், ரைசக்டோனியா, ஸ்கிளிரோசியம் பூஞ்சாணங்களை கட்டுப்படுத்தி விளைச்சலை அதிகரிக்கலாம்.
விதைநேர்த்தி
உயிரியல் முறையில் பருத்தி, பயறுவகைகள், எண்ணெய் வித்துப்பயிர்கள், காய்கறிகள், மலர்கள், பழப்பயிர்களில் நோய்களை கட்டுப்படுத்தலாம். இதற்கு விதைக்கும் முன்பே ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் 10 கிராம் பேசில்லஸ் கலந்து விதைநேர்த்தி செய்தால் அனைத்து நோய்களும் கட்டுப்படுத்தப்படும்.
மண்ணில் எக்டருக்கு 2.5 கிலோ டிரைக்கோடேர்மா விரிடி அல்லது பேசில்லசை 50 கிலோ மட்கிய உரத்துடன் கலந்து 10-15 நாட்கள் நிழலில் வைத்திருந்து இடுவதின் மூலம் வேரழுகலையும், வாடல் நோய்களையும் கட்டுப்படுத்தலாம். வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 250 கிலோ இடும்போது மண்ணில் தோன்றும் நோய்கள் கட்டுப்படுத்தப்படுகிறது.
வேதியியல் முறையில் கார்பன்டசிம் மருந்தை ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கலந்து விதைநேர்த்தி செய்து விதைக்கலாம். கார்பன்டசிம் (பெவிஸ்டின்) மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 கிராம் கலந்து பாதிக்கப்பட்ட செடிகள், அவற்றின் துார்களில் ஊற்றினால் மண் மூலம் தோன்றும் வாடல், வேரழுகலை கட்டுப்படுத்தலாம். மேன்கோசெப் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு லிட்டருக்கு 2 கிராம் கலந்து தெளித்தால் இலை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்தலாம்.
ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் லிட்டர் தண்ணீருக்கு 0.5 கிராம் அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம் கலந்து தெளித்தால் பாக்டீரியா நோய்களை கட்டுப்படுத்தலாம். நோயுற்ற செடிகளை பிடுங்கி எரிக்கவேண்டும். நோயுற்ற நாற்றுக்களை நடக்கூடாது. அளவான தழைச்சத்து, மணிச்சத்து அதிகமான சாம்பல்சத்து அளிப்பதன் மூலம் நோய் தாக்கத்தை குறைக்கலாம்.
கிருஷ்ணகுமார்
தொழில்நுட்ப வல்லுனர்
ஹேமலதா
திட்ட ஒருங்கிணைப்பாளர் வேளாண்மை அறிவியல் நிலையம்,
மதுரை
98652 87851
மேலும் படிக்க
நெற்பயிர் வயல் வரப்பில் பயறு வகை: மகசூலை அதிகரித்து, மன்வளத்தை கூட்டும்