TNEB: இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் புதிய அறிவிப்பு, உளுந்து விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விதைகள் அறிவிப்பு, TNAU பயிர்களுக்கான நடைமுறைகளின் தொகுப்பை டிஜிட்டல் மயமாக்க வேகூல் உடன் ஒப்பந்தம், அரசு நெல் நிலையங்களில் வட மாநிலத்தவர்கள் பணி! விவசாயிகள் அதிர்ச்சி, சின்ன வெங்காயம் விலை குறைய வாய்ப்பு: TNAU தகவல், TAHDCO வழங்கும் பயிற்சி, 100% வேலைவாய்ப்பு உறுதி, 40 ஆயிரம் ரூபாய்க்கு தேங்காய், பருப்பு ஏலம் முதலான வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
1. TNEB: இலவச மின்சாரம் குறித்து அமைச்சர் புதிய அறிவிப்பு!
1,000 யூனிட் இலவச மின்சார பயன்பாடு தொடர்பான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் , அதில் விசைத்தறிக்கு இது வழங்கப்படும் என்றும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். ஈரோட்டில் நேற்று, கிழக்கு தொகுதிக்கான வேட்பாளர் மேடை நிகழ்ச்சி நடந்தது. இந்த கூட்டத்தில் பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், விசைத்தறி ஒன்றுக்கு இதுவரை, 750 யூனிட் இலவச மின்சாரம் என்பது, 1,000 யூனிட்டாக உயர்த்தப்படுகிறது என்றும், கைத்தறிக்கு, 200 யூனிட் இலவச மின்சாரம் இனி, 300 யூனிட்டாக உயர்த்தப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும், விசைத்தறி மற்றும் கைத்தறிக்கு கூடுதலாக வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க:6 மாதத்திற்குள் அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட் - அமைச்சர் மனோ தங்கராஜ்
2. உளுந்து விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விதைகள் அறிவிப்பு!
டெல்டா மாவட்டங்களில் பருவமழையால் ஏற்பட்டுள்ள பயிர் சேதம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இம்மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இழப்பீடாகப் பேரிடர் மேலாண்மை விதிமுறைகளின்படி, பாதிக்கப்பட்ட உளுந்து விவசாயிகளுக்கு மீண்டும் உளுந்து விவசாயம் செய்ய 50 சதவிகிதம் மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயறு விதைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், டெல்டா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நெல் அறுவடையை உடன் மேற்கொள்ள வேளாண் பொறியியல் துறை மூலம் 50 சதவிகிதம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம் வாடகைக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. TNAU பயிர்களுக்கான நடைமுறைகளின் தொகுப்பை டிஜிட்டல் மயமாக்க வேகூல் உடன் ஒப்பந்தம்
தமிழ்நாட்டில் உள்ள விவசாய சமூகத்தை மேம்படுத்துவதற்கும், WayCool இன் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதற்கும், TNAU அதன் தற்போதைய PoPகளை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம், உத்திசார் ஒத்துழைப்பு மூலம் விவசாயிகளுக்கு பயனளிக்கும். வேகூலின் உழவர் ஈடுபாட்டுப் பிரிவான Outgrow மூலம் PoPகள் மொபைல் பயன்பாடுகள் மூலம் விவசாயிகளுக்குக் கிடைக்கும். WayCool, பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேரடி திட்டங்களில் பங்கேற்கவும், வேலைவாய்ப்பு மற்றும் வேலைவாய்ப்புகளை எளிதாக்கவும், OARS வசதிக்கான களப்பயணங்களை ஏற்பாடு செய்யவும் வாய்ப்புகளை வழங்கும், இவை அனைத்தும் தொழில் முனைவோர் நோக்கிய அவர்களின் பயணத்திற்கு உதவும்.
4. அரசு நெல் நிலையங்களில் வட மாநிலத்தவர்கள் பணி! விவசாயிகள் அதிர்ச்சி!!
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், பீஹாரைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இது, விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வட மாநிலத்தவர்கள் செருப்பு அணிந்த படி, நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றுவது, விவசாயிகள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
5. சின்ன வெங்காயம் விலை குறைய வாய்ப்பு! TNAU தகவல்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டமானது, சின்ன வெங்காயத்திற்கான விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது. வர்த்தக மூலங்களின்படி, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பெய்த பருவமழை காரணமாக பயிர் சேதமடைந்து உள்ள காரணத்தால் தமிழ்நாட்டு சந்தைக்கு சின்னவெங்காயம் வரத்து குறைந்துள்ளது. இதனால் சின்ன வெங்காயத்தின் விலை சமீப காலமாக அதிகரித்து காணப்பட்டது. நடப்பாண்டின் பயிர் அறுவடை மற்றும் கர்நாடக வரத்து காரணமாக பிப்ரவரி-மார்ச் 2023ல் சின்ன வெங்காயத்தின் விலை குறைய வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
6. TAHDCO வழங்கும் பயிற்சி, 100% வேலைவாய்ப்பு உறுதி!
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்கள் விமான நிலையத்தில் பணிபுரிய விமான வாடிக்கையாளர் சேவை மற்றும் அதன் தொடர்புடைய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பயிற்சியினை பெற 18 முதல் 25 வயது வரை உள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களும், பன்னிரெண்டாம் வகுப்பு அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கான கால அளவு மூன்றுமாதம், விடுதியில் தங்கி படிக்க வசதியும், இப்பயிற்சிக்கான மொத்த செலவு தொகை ரூ.20,000த்தை தாட்க்கோ வழங்கும். இப்பயியற்சியினை பெற்றவர்களுக்கு 100 சதவீதம் வேலை வாய்ப்பு அளிக்க படும் என்று தெரிவிக்க பட்டுள்ளது,. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://www.tahdco.com/ திரையில் தோன்றும் இணையத்தளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
7. 40 ஆயிரம் ரூபாய்க்கு தேங்காய், பருப்பு ஏலம்!
காங்கயத்தில் கரூர் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு ஏல முறையில் விற்பனை நடைபெற்றது. இதில் காங்கயம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 2 விவசாயிகள் 13 மூட்டைகள் (569 கிலோ) தேங்காய் பருப்பினை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இங்கு நடந்த ஏலத்தில் ரூ.40 ஆயிரத்திற்கு பருப்புகள் விற்பனையானது. தேங்காய் பருப்பு அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.82-க்கும், குறைந்தபட்சமாக ரூ.68-க்கும், சராசரியாக ரூ.80-க்கும் ஏலம் போனது.
8. விழுப்புரம் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க வேளாண் மண்டல அலுவலர் அறிவுரை
விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட வேளாண் மண்டல அலுவலர் விவசாயிகளுக்கு தரமான விதைகள் வழங்க அறிவுரை வழங்கினார். திருச்சி மண்டல விதைப்பரிசோதனை அலுவலர் அறிவழகன், விழுப்புரம் விதைப்பரிசோதனை நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதைப்பரிசோதனை நிலையத்திற்கு வரப்பெறும் விதை மாதிரிகளில் விதைகளின் முளைப்புத்திறன் சோதனை, ஈரப்பத சோதனை, புறத்தூய்மை சோதனை, பிற ரக கலப்பு விதைகளை கண்டறியும் சோதனை முறைகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது பற்றி ஆய்வு செய்தார் அப்போது இதைக் கூறியுள்ளார்.
9. பொறியியல் சார்நிலை பதவிகளில் 1,083 காலி பணியிடங்கள்: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பதவிகளில் காலியாக உள்ள 1,083 பணியிடங்களை நிரப்ப மே மாதம் தேர்வு நடக்க உள்ளது. இதற்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மார்ச் 4-ம் தேதி கடைசி நாள் - ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பதவிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சித் துறையில் பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர் பதவி யில் 794 காலி பணியிடங்கள் உள்ளன. தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் மார்ச் 4-ம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10. விவசாயிகளுக்கு ட்ரோன் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஏரிஸ் அக்ரோ நிறுவனம் திட்டம்!
மும்பையைச் சேர்ந்த ஏரிஸ் அக்ரோ லிமிடெட், நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் சிறப்பு உரங்களின் உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர், உரங்கள் தெளிப்பதற்கும், மண் ஸ்கேனிங் சாதனங்களுக்கும் ட்ரோன்களை வழங்கப் போவதாகக் கூறியுள்ளது. இந்த ட்ரோன்கள் அடுத்த சில மாதங்களில் ரூ. 8 - 10 லட்சம் விலையில் வாங்குவதற்கு கிடைக்கும் என்றும், அதே நேரத்தில் விவசாயிகள் அதன் சேவையை ஏக்கருக்கு ரூ. 500 - 600 வரை வாடகைக்கு பெறலாம் என்றும் கூறியுள்ளது. மேலும், மண் ஸ்கேனிங் கருவியை விவசாயிகள் ஒரு சோதனைக்கு 50-100 ரூபாய் விலையில் பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
11. தக்காளி மகசூல் குறைவு! விவசாயிகள் கவலை!!
உடுமலை பகுதிகளில், தக்காளி மகசூல் குறைந்துள்ள நிலையில், விலையும் தொடர் சரிவை சந்தித்து வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதிகளில், தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ, 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரமாக, உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ள நிலையில், வியாபாரிகள் வருகை குறைந்ததால், விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. விலை சரிவால், விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர்.
12. விரைவில் அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட்: அமைச்சர் மனோ தங்கராஜ் தகவல்
இன்னும் 6 மாத காலத்திற்குள் தமிழ்நாட்டின் அனைத்து கிராமங்களிலும் இன்டர்நெட் வசதி வழங்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் இன்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பத்திரிக்கை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். சைபர் செக்யூரிட்டி கொள்கையில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று பல தரப்பினர் தெரிவித்து கோரிக்கை விடுத்து வரு கின்றனர் . எனவே சைபர் செக்யூரிட்டி கொள்கையில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து ஆலோசனைகள் பல தரப்பினரிடம் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
13. சின்னவெங்காய விவசாயிகள் கவலை!
திருப்பூர் மாவட்டத்தில் அதிகப்படியான விவசாயிகள் சின்ன வெங்காயம் நடவு செய்துள்ளார்கள். தற்பொழுது நோய் தாக்குதல் மற்றும் விலை குறைவு ஆகியவற்றால் சின்ன வெங்காயம் விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மேலும் சின்ன வெங்காயத்திற்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். இல்லையெனில் இனி சின்ன வெங்காயம் நடவு செய்ய வேண்டுமா என்று சிந்திக்க வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
14. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நீடிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் வரும் நீரின் அளவு, விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 1454 கன அடியாக இருந்த நீர்வந்தது, இன்று காலையும் அதே நிலையில் நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நேற்று 103.76 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.77 அடியாக உள்ளது.
மேலும் படிக்க
ரூ.30000|பயிறுதினம்|உழவர் விருது|தக்காளி விலை|தங்கம் விலை|மேட்டூர் அணை
PM Kisan அப்டேட்|மானியத்தில் கொப்பரை தேங்காய்|கருப்பட்டி விலை|மத்திய குழு ஆய்வு|ட்ரோன் தொழில்நுட்பம்