சென்னை, கோவை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் தக்காளி விலை 75 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்துள்ளனர். தொடர் மழையால் ஏற்பட்ட வரத்து குறைவு, இந்த விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.
சில மாதங்களுக்கு முன், மழை பொழிவு அதிகரித்து, தக்காளி சாகுபடி பாதித்து, மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது. அப்போது, ஒரு கிலோ, 100 ரூபாய்க்கு விற்றது. தக்காளி விலை உயர்வை, தங்கம் விலை உயர்வுடன் ஒப்பிட்டு, விவாதமே நடந்தது. தக்காளி விலை உயர்வால், மக்கள் பாதித்த நிலையில், தக்காளி உற்பத்தி இல்லாததால், விவசாயிகளும் கவலை அடைந்தனர்.அதன்பின், தக்காளி வரத்து அதிகரிக்கும் போது, விலைச்சரிவு ஏற்பட்டு, கிலோ, ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்டது.
சென்னை
இந்நிலையில் தொடர் மழை காரணமாக தற்போது சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்துவிட்டது. இதனால் ஒரு கிலோ தக்காளி ரூ.75 வரை விற்பனை செய்யப்படுகிறது.
பொள்ளாச்சி
இதேபோல், பொள்ளாச்சி வடக்கு மற்றும் கிணத்துக்கடவு ஒன்றியப்பகுதிகளில், அதிகளவில் தக்காளி சாகுபடி செய்யப்படும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் தக்காளிக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. பறித்து சந்தைக்கு கொண்டு சென்றால், செலவுக்கு கூட கட்டுப்படியாகாது என விவசாயிகள் செடியிலேயே பறிக்காமல் விட்டனர்.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தக்காளி விலை தடாலடியாக அதிகரிக்க துவங்கியது. தற்போது, மார்க்கெட்டில் கிலோ, 75 ரூபாய்க்கு விற்கப்படுவதால்மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.பொள்ளாச்சி பகுதியில் அக்னி நட்சத்திர காலத்தில் எதிர்பாராமல் பெய்யும் கோடை மழையால், தக்காளி வரத்து குறைந்துள்ளதால், விலை அதிகரித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை துவங்கும் போது, மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'மழை காலம் துவங்கியதும், காய்கறிகள் விலை படிப்படியாக உயர துவங்கியது. தற்போது, மூன்று லோடு தக்காளி வர வேண்டிய கடைகளுக்கு, ஒரு லோடு மட்டுமே வரத்து உள்ளது. இதனால், விலை உயர்ந்து வருகிறது,' என்றனர்.
கிணத்துக்கடவைச் சேர்த்த தக்காளி விவசாயி துரைமுருகன் கூறுகையில், கோடை வெயிலால் ஏற்கனவே, தக்காளி பயிர் வளர்ச்சி, உற்பத்தி இரண்டும் பாதித்திருந்தது.இந்நிலையில், எதிர்பாராத மழையால், தக்காளி செடிகள் பாதித்துள்ளன. தண்டு அழுகல், காய் அழுகலால், உற்பத்தி பாதித்துள்ளது. தோட்டங்களில், 15 கிலோ எடையுள்ள ஒரு பெட்டி தக்காளி, 800 - 900 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது,' என்றார்.
மேலும் படிக்க...