மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 December, 2020 3:00 PM IST

செம்பனை அல்லது ஆப்பிரிக்கன் எண்ணெய்ப் பனை என்று அழைக்கப்படும் ‘பாமாயில் மரம்’ (இலேயஸ் கைனென்சிஸ்) ஒரு ஆண்டிற்கு ஒரு ஹெக்டரில் 4 முதல் 6 டன் வரை எண்ணெய் கொடுக்கக்கூடிய ஒரு மரமாகும்.

பாமாயில் மரம் அதிக அங்கக பொருட்களையும், ஆண், பெண் பூக்கள் மற்றும் குலைகளை தொடர்ந்து உற்பத்தி செய்து வளர்ச்சியடைவதால் அதிகளவு ஊட்டச்சத்துக்களை கிரகிக்கும் பண்பை கொண்டுள்ளது. ஆகையால் இம்மர சாகுபடிக்குத் தேவையான அளவு தழை, மணி, சாம்பல் சத்துக்களுடன் இரண்டாம் நிலை சத்துக்களான மெக்னிசீயம், கால்சியம், மற்றும் நுண்ணூட்டங்களான போரான், மாங்கனீசு போன்றவைகளை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் இடுவது அவசியமாகும். 

மகசூல் அதிகரிக்க உதவும் தேனீ வளர்ப்பு-ஒரு நாள் சிறப்பு பயிற்சி!

மேற்கூறப்பட்ட சத்துக்களில் குறைபாடு ஏற்படின், மரத்தின் வளர்ச்சியிலும், மகசூலிலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிப்பு ஏற்படும்.

முக்கிய ஊட்டச் சத்துக்களின் செயல்பாடுகள்

தழைச்சத்து

செல்லில் காணப்படும் புரோட்டோபிளாசம், புரதம், அமினோ அமிலங்கள் அல்கலாய்டுகள் மற்றும் குளோரோபில்; போன்றவைகள் உருவாக்கப்பட தழைச்சத்து மிகவும் அடிப்படையாகின்றது. இலைகளின் பரப்பு, ஆண், பெண் பூக்களின் விகிதம் மற்றும் குலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பயன்படுகின்றது.

மணிச்சத்து

திசுவளர்ச்சியில் நியுக்ளிக் அமிலத்தின் ஒரு பகுதியாக காணப்படுகின்றது, வேர்களின் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், பழக்குலைகளின் முதிர்ச்சிக்கும் மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றது. தழைச்சத்தைப் போன்று இலைகளின் வளர்ச்சி, எண்ணிக்கை, அங்ககப் பொருட்களை அதிகரிக்க பயன்படுகிறது. 

விவசாயத்தில் அதிக லாபம் தரும் பணப்பயிர்கள்!!

சாம்பல்சத்து

முக்கிய வேதியல் செயல்பாட்டில் கிரியா ஊக்கியாக செயல்பட்டு ஒளிச்சேர்க்கையை அதிகப்படுத்தி பழக்குலைகள் உருவாகவும் நீராவிப் போக்கை கட்டுப்படுத்துவதலிலும் பங்கு வகிக்கின்றது. தழை, மணிச்சத்துக்கள் போன்று இலைகளின் உற்பத்தி, எண்ணிக்கை, பரப்பளவு, அங்ககப் பொருட்கள் போன்றவைகளை அதிகரிக்கவும், ஆண், பெண் பூக்களின் விகிதம், பழக்குலைகளின் எண்ணிக்கை, எடை போன்றவற்றை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

இரண்டாம் நிலை சத்துகள்

  • மெக்னீசியம்: பச்சையத்தில் ஒரு பாகமாகி ஒளிச்சேர்க்கையை அதிகரித்து கொழுப்புசத்து உற்பத்தியை பெருக்கி குலைகளின் எண்ணிக்கை விகிதத்தை அதிகப்படுத்துகின்றது.

  • கால்சியம்: வேர் வளர்ச்சிக்கும், தழைச்சத்து சாம்பல் சத்து போன்ற ஊட்டச் சத்துக்ககளை உறிஞ்சும் பண்பை அதிகரிக்கவும் பயன்படுகின்றது.

  • மாங்கனீஸ்: பச்சையத்தின் உற்பத்தி ஈடுபட்டு ஒளிச்சேர்க்கையை அதிகரிப்பதோடு, நொதிகளின் செயல்பாடுகளைத் துரிதப்படுத்தும் கிரியா ஊக்கியாக செயல்படுகிறது.

  • இரும்புச்சத்து: பச்சையத்தின் செலய்பாட்டிலும் நொதிகளின் செயல்பாட்டிலும் முக்கிய கிரியா ஊக்கியாக செயல்படுகின்றது. மேலும் சுவாதித்தலை அதிகப்படுத்துகின்றது.

  • துத்தநாகம்: புரதம் மற்றும் பச்சையத்தின் உற்பத்தியில் பெரும் பங்கு வகிக்கின்றது. பச்சைய உற்பத்தியில் பங்கு வகிப்பதோடு பெரும்பாலான தாவர செயல்பாடுகளில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

  • மாலிப்டினம்: நொதிகளின் ஒரு பாகமாகி தழைச்;சத்து மாற்றத்தில் நைட்ரேட்டால் மாற்றம் செய்யும் பணியைச் செய்கின்றது.

  • போரான்: பெரும்பாலான தாவரச் செயல்பாடுகளில் ஈடுபடுகின்றது.

  • தாமிரம்: தாவரச் செயல்பாடுகளில் தொடர்புடைய நொதிகள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் குளோரோ்பில் நிறமி உருவாக காரணமாக விளங்குகிறது.

  • கந்தகம்: புரதத்தின் ஒரு பகுதியிலும் பச்சைய உற்பத்தியிலும் மாவுச் சத்து வளர்ச்சிதை மாற்றத்திலும் பெரும்பங்கு வகிக்கின்றது. எண்ணெயின் அளவை அதிகரிக்கும் செயலிலும் ஈடுபடுகின்றது.

சமநிலை உரமிடுதல்

உரங்கள் இடும்போது அவையனைத்தும் மண்ணின் சத்து நிறை,. குறைகளுக்கு ஏற்றவாறு சமச்சீராக இடுகிறோமா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் தழைச்சத்து அதிகமாகி மணிச்சத்தில் குறைபாடு ஏற்படின் மரத்திற்கு வேண்டிய மற்ற ஊட்டச் சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும். சாம்பல் சத்து குறைவாக உள்ள நிலங்களில் அதிக தழைச்சத்தும் சுண்ணாம்புச் சத்தும் இடுவதால் சமநிலை ஊட்டச் சத்துக்கள் கிரகிப்பு பாதிக்கப்பட்டு வளர்ச்சி குன்றுகிறது. 

மகசூலை அதிகரிக்க, எளிய முறையில் எலிகளை பிடிக்கும் தொழில்நுட்பம்!

மரத்தின் வயது- முதலாமாண்டு (தழைச்சத்து 400கிராம், மணிச்சத்து 200கிராம், சாம்பல்சத்து 400 கிராம், மெக்னீசியம் சல்பேட் 125 கிராம்) இரண்டாமாண்டு (தழைச்சத்து 800 கிராம், மணிச்சத்து 400 கிராம், சாம்பல்சத்து 800 கிராம், மெக்னீசியம் சல்பேட் 250 கிராம்)மற்றும்மூன்றாமாண்டிலிருந்து (தழைச்சத்து 1200 கிராம், மணிச்சத்து 600 கிராம், சாம்பல்சத்து 1200 கிராம், மெக்னீசியம் சல்பேட் 500 கிராம்) உர அளவு தற்காலிகமாக வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறையால் பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

தோட்டத்தில் ஆறாமாண்டிலிருந்து தோராயமாக 20-25 டன் பழக்குலைகள் அறுவடைக்கு வரும் காலங்களில் உற்பத்தி வீதத்திற்கு தகுந்தவாறு கூடுதலாக 20 சதவீத ஊட்டச் சத்துக்கள் அதிகரிப்பட வேண்டும். போரான் பற்றாக்குறை அறிகுறிகள் எதுவும் தென்பட்டால் ஒரு மரத்திற்கு ஒரு ஆண்டிற்கு 100 கிராம் போராக்ஸ், இரு முறை பிரித்து மண்ணில் இடுவது நல்லது. இரசாயன உரங்களோடு மரத்திற்கு 50 கிலோ பசுந்தாள் உரம் அல்லது மக்கிய தொழு உரம் அல்லது 3 கிலோ வேப்பம் புண்ணாக்கு வருடத்திற்கு இரு முறை பிரித்து இடுவதால் மண்ணின் வளம் மேம்படுகிறது.

உரமிடும் முறைகள்

வட்டப்பாத்தி முறை

மரத்தின் அடிப்பகுதியிலிருந்து சுற்றிலும் 50 செ.மீ இடைவெளிவிட்டு வட்டப்பாத்தியில் நன்கு கலந்த உரக்கலவையை இடவேண்டும். உறிஞ்சும் வேர்கள் மண்ணின் மேல் மட்டத்தில் இருப்பதினால் ஊட்டச்சத்துக்களையும், நீரையும் உறிஞ்சுவதற்கு இம்முறை பொறுத்தமானதாகும். உரம் இடுவதற்கு முன்பு மண்ணை இலேசாகக் கிளறி விட்டு, உரமிட்ட பிறகு உடனே நீர்பாய்ச்சவேண்டும். வேர்கள் பெரும்பாலும் தலையின் 30 செ.மீ ஆழத்தில் அதிகமாக இருப்பதால் ஆழமாக வெட்டி உரமிடுவதை தவிர்க்கவேண்டும்.

வரிசைகளுக்கிடையே உரமிடும் முறை

வளர்ந்த மரத்தின் வேர்கள் ஒன்றோடொன்று இரு வரிசைகளுக்கிடையே இணைந்துவிடுவதால் அப்பகுதியில் மண்ணை இலேசாக கிளரி 2 மீட்டர் அகலத்தில் உரங்களை இட வேண்டும். இவ்வாறு செய்வதால் வளரும் இளம் உறிஞ்சு வேர்கள் சத்துக்களை நேரடியாக எடுத்துக் கொள்ள ஏதுவாகிறது. 

பயறு வகைகளில் விதை நேர்த்தி! மகசூலை அதிகரிக்கும் வழிகள்!

நீருடன் கலந்து உரமிடல்

சொட்டு நீர் பாசனம் உள்ள தோட்டங்களில் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து போன்ற ஊட்டச் சத்து கலவையை நீரில் கரைத்து சொட்டு நீர்ப்பாசன குழாய்கள் மூலமாக செலுத்தப்படுகிறது. சாதாரணமாக கிடைக்கும் உரங்களை நீரில் கலக்கியும் இம்முறையின் கீழ் பயன்படுத்தலாம். இவ்வாறு கொடுக்கும் பொழுது வடிகட்டி உபயோகிப்பதால் உரக்கலவை குழாய்களை அடைக்காத வண்ணம் பாதுகாத்துக் கொள்ளமுடியும்.
எத்தனை முறை உரமிட வேண்டும்

பாமாயில் மரம் ஒரு இறவைப் பயிராக உள்ளதாலும், ஆண்டுதோறும் பழக்குலைகள் உற்பத்தி செய்வதாலும் மரத்திற்கு ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து கிடைக்கும் விதத்தில் உரமிடல் வேண்டும். பொதுவாக ஆண்டிற்கு நான்கு அல்லது மூன்று முறை சமமாகப் பிரித்து உரமிடுவது நல்லது. மணல் கலந்த நிலங்களில் குறைந்த அளவு உரத்தை குறுகிய கால இடைவெளியில் இடுவதால் உரம் வடிந்து வீணாவதை தடுக்கலாம். செப்டம்பர்-அக்டோபர், அக்டோபர்-நவம்பர் போன்ற மாதங்களில் பசுந்தாள், தொழு உரம் இடுவதற்கு ஏற்ற பருவங்களாகும். பசுந்தாள், தொழு உரங்கள் கோடை காலங்களில் மூடுபொருளாகப் பயன்பட்டு மண்ணின் ஈரப்பதத்தையும், தட்பவெப்பநிலையையும் பராமரிக்க உதவுகின்றது. கோடை காலங்களில் இரசாயன உரங்கள் இடுவதை தவிர்க்க வேண்டும்.

சுண்ணாம்புச் சத்து, ஜிப்சம் இடுதல்

அமிலத் தன்மையுள்ள மண்ணில் சுண்ணாம்பை வருடத்திற்கு ஒரு முறை இடுவதினால் அமிலத்தன்மைக் குறைக்கப்படுகின்றது. காரநிலை அதிகமுள்ள மண்ணில் ஜிப்சம் இடுவதினால் நிலத்தின் காரநிலை குறைகின்றது. இவையன்றி பூண்டுகள், செடிகள் போன்ற பசுந்தாள்களை வளர்த்து உழுதுவிடுவதால் காரநிலை குறைக்கப்படுகின்றது. தொடர்ச்சியாக இம்முறையைப் பின்பற்றுவதினால் மண்ணின் தன்மையை ஒரளவிற்கு மாற்றியமைக்க முடியும்.

உயிரியல் உரங்கள்

நுண்ணுயிர் உரங்களை மண், விதை, இரசாயன உரம் ஆகியவற்றில் கலந்து பயன்படுத்தப்படுகிறது. ரைசோபியம், அசோலா, அசோஸ்பைரில்லம் ஆகியன நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண்ணுயிர் பாக்டீரியாக்களாகும். மண்ணில் கரையாத பாஸ்பேட்டுக்களை கரையும் பாஸ்பேட்களாக மாற்றுவது அஸட்டோபாக்டர் என்னும் பாக்டீரியாவாகும்.

பாமாயில் மரத்திலிருந்து அபரிதமான அங்ககப் பொருட்கள் மண்ணிற்கு செல்வதினால் இவ்வுயிர் உரங்களைப் பயன்படுத்தி கூட்டு கரிமப் பொருட்களை நேரடியாகப் பயன்படும் ஊட்டச் சத்து வடிவிற்கு மாற்றி மரத்திற்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

மண்புழு உரம் (அல்லது ) வெர்மிகம் போஸ்ட்

வெர்மிகம் போஸ்டை தொழு உரத்துடன் கலந்து வட்டப்பாத்திகளில் இடுதல் சமீபகாலமாக பிரசித்தி பெற்ற தொழிற் நுட்பமாகக் கருதப்பட்டு பின்பற்றப்பட்டு வருகிறது.

புஞ்சை நிலத்தை செழிப்பாக்க பண்ணைக் குட்டைகளை அமைப்போம்!

கரிமப்பொருட்களின் சுழற்சி

பாமாயில் மரத்தின் இலைகள், ஆண், பூக்கள், காலியான குலைகள் நார்கள், ஒடுகள், ஆலையிலிருந்து வெளிவரும் கழிவுப் பொருட்களை வீணாக்காமல் கரிமச்சுழற்சிக்கு உட்படுத்துவதன் மூலம் தழை, மணி. சாம்பல் சத்து அடங்கிய இரசாயன உரங்களை ஏறத்தாழ 50% குறைத்து இடுவதற்கு ஏதுவாகிறது. கரிம சுழற்சி முறையோடு பசுந்தாள் உரங்களை இடுவதால் மரங்களுக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்தை கொடுப்பதோடு மண்ணின் வளத்தைப் பாதுகாத்து சுற்றுப்புற சூழல் சீர்கேடு அடையாமல் பாதுகாக்க முடிகிறது.

கா. அருண்குமார் மற்றும் த. சுமதி
தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் 641003.

English Summary: Want to make more money on palm oil Tree, here the Tips on Fertilizer Management of Oil Palm’ Tree !!
Published on: 15 December 2020, 02:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now