சாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றும் நபர்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் தொகையுடன் மாநில அரசின் பங்களிப்பாக கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்தியா முழுவதும் சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் காயமடைவோர்களின் எண்ணிக்கையினை குறைக்கும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு நடவடிக்கையாக சாலை விபத்தில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுவோருக்கு ஒன்றிய அரசு சார்பில் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவும் நற்கருணை வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் வெகுமதி வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அறிவிப்பினைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் சார்பில் வழங்கப்படும் வெகுமதியுடன் மாநில அரசின் பங்களிப்பாக கூடுதலாக ரூ,5 ஆயிரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் விபத்தில் பாதிக்கப்பட்டவரை காப்பாற்றுபவருக்கு ரூ.10,000 வெகுமதியாக இனி வழங்கப்பட உள்ளது.
வெகுமதி பெற தகுதியானவர்கள் குறித்த பரிந்துரையை மாதந்தோறும் போக்குவரத்து ஆணையரகத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்ப வேண்டும் எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தங்களது அடையாளத்தை வெளிக்காட்டி கொள்ள விரும்பாதவர்களுக்கு வெகுமதி வழங்கப்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டமானது 2026- ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் எனவும் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48:
முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48 என்கிற திட்டத்தினை அமல்படுத்தியது. இதன் மூலம் சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் 48 மணி நேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழ்நாடு அரசே ஏற்கும் வகையில் ஆணை வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள்/ இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வேற்று நாட்டவர் என அனைவருக்கும் தமிழக எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளுக்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும்.
நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் 81 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை முறைகள் இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும். சேத குறைப்பு அடிப்படையில் உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளும் வகையில் ஆவன செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மத்தியில் தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம்- நம்மை காக்கும் 48 திட்டம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ள நிலையில், அரசின் இந்த ஊக்கத்தொகை அறிவிப்புக்கும் பாரட்டு கிடைத்துள்ளது. அரசின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
pic courtesy: Her zindagi
மேலும் காண்க: