1. செய்திகள்

காப்பீடு திட்டத்தை அரசே ஏற்குமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில்

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
CM M.k.stalin inspects agri related work in delta area

காப்பீடு திட்டத்தில் நிறைய பிரச்சினைகள் இருப்பதால், அரசே காப்பீடு திட்டத்தை நடத்த வேண்டும் என உழவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், உழவர்களின் கோரிக்கை குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

ஜுன்-12 ஆம் தேதி, மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைப்பெறும் வேளாண் தொடர்பான திட்டப்பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் விவசாய பெருமக்கள் தொடர்பான கேள்விகளுக்கு விளக்கமளித்தார்.

கேள்வி: காப்பீடு திட்டத்தை அரசே நடத்த வேண்டும் என்று உழவர்கள் தொடர்ந்து வலியுறுத்துகிறார்கள், ஏனென்றால் காப்பீடு திட்டத்தில் முறையாக பலன் கிடைப்பது இல்லை, நிறைய பிரச்சினைகள் இருப்பதாக சொல்கிறார்களே?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்: ஆய்வில் இருக்கிறது. ஆய்வு செய்து கொண்டிருக்கிறோம்.

கேள்வி: நூறு நாள் வேலை திட்ட பணியாளர்களை சந்தித்தீர்கள், அவர்கள் என்ன கோரிக்கை வைத்தார்கள்? வேளாண் பணிகளை நூறு நாள் திட்டத்தில் கொண்டுவர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கைகள் இருக்கிறது.

முதல்வரின் பதில்: அந்த மாதிரி கோரிக்கைகள் எதுவும் இன்று (ஜூன் 9) அவர்கள் வைக்கவில்லை. அவர்கள் கொடுக்கும் ஊதியத்தை முறையாக கொடுக்க வேண்டும் என்றுதான் கோரிக்கை வைத்தார்கள். அது முறையாக கொடுக்கப்பட்டு வருகிறது. எங்கெல்லாம் புகார் இருக்கிறதோ, அது குறித்து விசாரிக்கிறோம் என சொல்லியிருக்கிறோம்.

தூர்வாரும் பணிகள் குறித்து முதல்வரின் பதில்:

” இந்த ஆண்டு நீர்வளத்துறை மூலமாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்காக 90 கோடி ரூபாயினை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் 4 ஆயிரத்து 773 கிலோமீட்டர் நீளமுள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 96 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளும் இன்னும் சில நாட்களில் முழுமையாக முடிக்கப்படும்.

இதோடு வேளாண் பொறியியல் துறை மூலமாக, 5 கோடி ரூபாய் செலவில் ஆயிரத்து 146 கிலோ மீட்டர் நீளமுள்ள கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் 651 கிலோ மீட்டர் தூர்வாரும் பணிகள் முடிந்துள்ளது. எஞ்சியுள்ள 45 விழுக்காடு தூர்வாரும் பணிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்று வருகிறது.

அதேபோல, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலமாக, 27 கோடியே 17 இலட்சம் கோடி ரூபாய் செலவில் 1,433 கிலோமீட்டர் நீளமுள்ள சிறிய கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 8 கோடியே 13 இலட்சம் ரூபாய் செலவில் 25 எண்ணிக்கையிலான குளம், குட்டை போன்ற நீர்நிலைகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.

மேட்டூர் அணையின் நீர் காவிரி டெல்டா பகுதிக்கு வருவதற்கு முன்னதாகவே நான் ஏற்கெனவே உங்களிடம் கூறியபடி அனைத்து தூர்வாரும் பணிகளும் சிறப்பாக முடிக்கப்படும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நாளை மறுதினம் மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், தற்போதே டெல்டா மாவட்டங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளது. 2022-2023-ஆம் ஆண்டில் 5 இலட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், 13 இலட்சத்து 53 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டது. இதனால் 41 இலட்சத்து 45 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண்க:

கால்நடை மருத்துவ படிப்பிற்கான (BVSc & AH/BTech) மாணவர் சேர்க்கை- முழுவிவரம்!

English Summary: CM M.k.stalin inspects agri related work in delta area Published on: 10 June 2023, 02:45 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.