PM kisan திட்டத்தில் பயன்பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்களுக்கு நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் சமீபத்தில் நடைப்பெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.
பிரதம மத்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின் கீழ் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணையாக தலா ரூ.2000/- வீதம் ஆண்டிற்கு ரூ.6000/- வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த தவணைத் தொகையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் கைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை இணைத்து கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் e-KYC பதிவு மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்துக் கொண்டவர்களுக்கே 14-ஆவது தவணைத் தொகை விடுவிக்கப்படும். எனவே இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள பொது இ-சேவை மையம் அல்லது தபால் நிலையங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் புதிய பதிவு மேற்கொள்ள ஒப்புதல் வழங்கும் பணி செய்யப்பட்டு வருகிறது. இதில் பதிவு மேற்கொள்ளும்போது நில விவரங்கள் மற்றும் தேவையான முக்கிய விவரங்கள் அனைத்தையும் விடுபடாமல் முழுமையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு முழுமையான விவரங்களை பதிவேற்றம் செய்யாதவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அவ்வாறு நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் PM-KISAN வலைதளத்தில் "Updation of Self Registered Farmers" என்ற முகப்பில் சென்று பொது சேவை மையங்கள் மூலம் விடுபட்ட விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
இதில் கைரேகை பதிவு மேற்கொள்ள முடியாதவர்களும், OTP பெற இயலாத விவசாயிகளும் அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருக்கிற உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு PM KISAN செயலி மூலம் e-KYC பதிவு மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் (TNMSGCF) நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுக்குறித்த அறிவிப்பாணையின் விவரம்:
TNMSGCF திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடிக்கு போக மீதமுள்ள நிலங்களில் வனப்பரப்பினை அதிகரிக்கும் வகையில் வேளாண் காடுகள் உருவாக்கிட 100 சத மானியத்தில் வேம்பு, தேக்கு, செம்மரம், மகாகனி, ஈட்டி மரம், வேங்கை, சந்தனம், புங்கை மற்றும் மலை வேம்பு ஆகிய மரக்கன்றுகள் வனத்துறை நாற்றுப்பண்ணை மூலமாக இலவசமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு நபருக்கு ஒரு எக்டேருக்கு 400 மரக்கன்றுகள் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் "உழவன் செயலி" மூலமாக முன்பதிவு செய்து (அல்லது) வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
காவிரி விவகாரம்: விவசாயிகள் சார்பில் Bengaluru Bandh- முதல்வரின் படம் அவமதிப்பு
குறுவை நெல் விவசாயி மரணத்திற்கு திமுக தான் பொறுப்பு- EPS கண்டன அறிக்கை