1. செய்திகள்

குறுவை நெல் விவசாயி மரணத்திற்கு திமுக தான் பொறுப்பு- EPS கண்டன அறிக்கை

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
EPS says DMK is responsible for Kuruvai paddy farmer's death

குறுவை சாகுபடி மேற்கொண்ட விவசாயி, போதிய நீர் கிடைக்காமல் பயிர்கள் கருகியதால் மனமுடைந்து மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்தார் என்கிற வெளியான செய்தியினையடுத்து அக்குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்க தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம் பின்வருமாறு-

திருக்குவளை அடுத்த திருவாய்மூர் பகுதியைச் சேர்ந்த முன்னோடி விவசாயி எம்.கே. ராஜ்குமார், சுமார் 15 ஏக்கரில் குறுவை சாகுபடி செய்திருந்தார். குறுவை நெற்பயிர்கள் நீரின்றி கருகியதால், விவசாயக் கடனை எப்படி அடைப்பது என்ற கவலையில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், 'தான் பெற்ற பிள்ளையை தானே அழிப்பது போல்", காய்ந்த குறுவை நெற்பயிர்களை விவசாயி ராஜ்குமார் அவர்களே டிராக்டர் மூலம் அழிக்கும்போது ஏற்பட்ட மனவேதனையில், தன்னுடைய நிலத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

ராஜ்குமார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தன்னுடைய ஆட்சியின் கெத்தை காட்டிக்கொள்ளும் எண்ணத்துடன், கடந்த ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீரைத் திறந்துவிட்ட திரு.ஸ்டாலின், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களிலேயே பாசனத்திற்கு தண்ணீர் தேவையை அறிந்து, நம்முடைய காவிரியில் நமக்குக் கிடைக்க வேண்டிய தண்ணீரை கேட்டுப் பெறாமல், குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இன்றி, பயிர்கள் கருகிய பிறகு, 'கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல்', நாங்கள் பலமுறை எச்சரித்த பிறகு, காலம் கடந்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது; மத்திய அமைச்சரைப் பார்ப்பது; காவிரி மேலாண்மை ஆணையத்திடம் முறையீடு மற்றும் உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது என்று காலதாமதமாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் திரு.ஸ்டாலின்.

குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்யாததால், இன்று டெல்டா மாவட்டத்தில், திரு. ஸ்டாலினின் சொந்த ஊரான திருக்குவளைக்கு அருகில் உள்ள கிராமத்தில் வசிக்கும் விவசாயி ராஜ்குமார், கருகிய தன்னுடைய நெற்பயிருக்கு காப்பீட்டு நிவாரணமும், அரசின் நிவாரணமும் பெறமுடியாத நிலையில், மனவேதனையில், தன்னுடைய இன்னுயிரை இழந்துள்ளார். இன்னும் எத்தனை விவசாயிகள் தங்களது இன்னுயிரை இழக்கும் சூழ்நிலை ஏற்படுமோ என்று, மக்கள் அஞ்சும் அவலம் தமிழகத்தில் ஏற்பட்டுள்ளது.

விவசாயி ராஜ்குமார் அவர்களின் மரணத்திற்கான முழு பொறுப்பை இந்த விடியா திமுக அரசும், நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் திரு. ஸ்டாலினும் ஏற்க வேண்டும். உயிரிழந்த ராஜ்குமார் அவர்களின் குடும்பத்திற்கு, உடனடியாக 25 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ”குறுவை சாகுபடி செய்து பாதிப்படைந்த அனைத்து விவசாய நிலங்களையும் கணக்கிட்டு, ஏக்கர் ஒன்றுக்கு நிவாரணத் தொகையாக 35 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இந்த விடியா அரசின் முதலமைச்சர் திரு.ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்” என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் காண்க:

Gold Rate Today: ஆஹா.. நகை பிரியர்களுக்கு நல்ல செய்தி

காவிரி விவகாரம்: விவசாயிகள் சார்பில் முதல்வரின் படத்திற்கு இறுதிச்சடங்கு

English Summary: Edappadi K Palaniswami says DMK is responsible for Kuruvai paddy farmer's death Published on: 26 September 2023, 12:10 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.