State

Wednesday, 26 June 2024 06:42 PM , by: Muthukrishnan Murugan

TN CM MK stalin meeting with agri minister (TNDIPR)

தமிழ்நாட்டு விவசாயிகளின் நலன் கருதி 2024-25 ஆம் ஆண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்திற்கு சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் காரீப் 2024-25 ஆம் ஆண்டிற்கான நெல் கொள்முதல் பருவத்திற்கு ஆதார விலையுடன் ஊக்கத்தொகையும் சேர்த்து விவசாயிகளுக்கு வழங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (26.06.2024) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

இக்கூட்டத்தில், கடந்த 2023-2024 காரீப் கொள்முதல் பருவத்தில் 25.06.2024 வரையில் 3,175 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3,72,310 விவசாயிகளிடமிருந்து 29,91,954 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.6,442.80 கோடி விற்பனை தொகையாக வழங்கப்பட்டது தொடர்பான விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் அதே அடிப்படையில், இந்த ஆண்டும் காரீப் கொள்முதல் 2024-2025 பருவத்தில் தேவையான அளவு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து ஒன்றிய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது.

செப்டம்பர் 1 முதல் கொள்முதல்:

அத்துடன் விவசாயிகளின் நலன் கருதி காரீப் 2024-2025பருவத்திற்கான நெல் கொள்முதலினை 01.09.2024 முதல் மேற்கொள்ள ஒன்றிய அரசை, இவ்வரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க ஒன்றிய அரசு தமிழ்நாட்டில் காரீப் 2024-2025 பருவத்திற்கான நெல் கொள்முதலினை 01.09.2024 முதல் மேற்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளது.

ஊக்கத்தொகை விவரம்:

ஒன்றிய அரசு அண்மையில் காரீப் 2024-2025 பருவத்திற்கு குறைந்தபட்ச ஆதாரவிலையாக சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,300/-என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,320/- என்றும் நிர்ணயித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் நெல் உற்பத்தியினைப் பெருக்கும் வகையிலும், விவசாயிகளின் வாழ்வை வளப்படுத்தி அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு, 2024-2025 காரீப் கொள்முதல் பருவத்திற்கு (Kharif Marketing Season) சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.105/-ம், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.130/-ம் கூடுதல் ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசின் நிதியிலிருந்து வழங்கிடவும், அதன்படி விவசாயிகளிடமிருந்து சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,405/- என்றும், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2.450/- என்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்திட தமிழ்நாடு முதலமைச்சர் உத்தவிட்டுள்ளார்.

இந்த புதிய குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் மாநில அரசின் ஊக்கத் தொகை 01.09.2024 முதல் நடைமுறைக்கு வரும். அத்துடன், தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு, அடுத்துவரும் 2025-26 நிதியாண்டில், சன்னரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.2,500/- என்ற வீதத்தில், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளுக்கு வழங்கிடவும் தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு 12.06.2024 அன்று மேட்டூர் அணை திறக்கப்பட இயலாத சூழ்நிலையில், டெல்டா மாவட்ட விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ.78.67 கோடி மதிப்பீட்டில் குறுவைத் தொகுப்பு திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்திட உத்தரவிட்டார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு விவசாயிகளுக்கு தேவையான இடுபொருட்கள் தற்போது வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more:

நெற்பயிர் வரப்புகளில் பயறு வகை- விதைப்பது எப்படி? என்ன நன்மை?

ஏக்கருக்கு ரூ.730- பயிர் காப்பீடு தொடர்பாக விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)