பிரதம மந்திரியின் விவசாய பாசனத்திட்டத்தின் கீழ் விசைத்தெளிப்பான், கைத்தெளிப்பான், பேட்டரி தெளிப்பான் வாங்க மானியம் வழங்கப்படுவதாக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உழவன் செயலி மூலமாக சுலபமாக திட்டத்தில் பயன்பெற முன்பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போதே வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. இன்னும் ஒரிரு மாதத்தில் அக்னி நட்சத்திரம் என்கிற கத்திரி வெயில் தொடங்க உள்ள நிலையில் நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பில் விவசாயிகள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் நல்ல விளைச்சலைப் பெறுவதற்கு விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை நீக்கும் வகையில் ஒன்றிய மற்றும் மாநில அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பிரதம மந்திரி கிருஷி சின்சாயி திட்டம்:
விவசாயத்திற்கு நல்ல மண்வளம், உரம் மற்றும் மிக முக்கியமாக சாகுபடிக்கு போதுமான அளவு தண்ணீர் ஆகியவை தேவை. கோடைக்காலம் துவங்க உள்ள நிலையில் விவசாயத்திற்கு நீரினை முழுமையாக பயன்படுத்த வேண்டிய நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இதனிடையே ”பிரதம மந்திரி கிருஷி சின்சாயி” திட்டமானது சொட்டுநீர்ப் பாசனத்தின் மூலம் தண்ணீரைச் சரியான அளவில் பயன்படுத்த வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடந்த 2015 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் தொடங்கப்பட்டது. இதன் குறிக்கோள் ஒரு துளி நீரில் அதிக விளைச்சல் என்பதாகும். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமானது, பாசனத்திற்கு நீர் ஆதாரத்தை உறுதி செய்தல் மற்றும் ஒவ்வொரு வயலுக்கும் நீரினை கொண்டு செல்ல வேண்டும் என்பதாகும். சொட்டு நீர் பாசன முறையை சிறப்பான வகையில் கையாண்டால் தரிசு நிலங்களை குறைத்து, வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதோடு சிறு, குறு விவசாயிகளின் பொருளாதாரத்தினையும் மேம்படுத்த இயலும்.
ஒன்றிய அரசின் செயல்முறை வழிகாட்டுதலில் நிர்ணயித்துள்ள உச்சவரம்பு தொகைக்கு மிகாமல் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, இராமநாதபுரம், தர்மபுரி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகளுக்கும் 80 சதவீதம் மானியத்தில் விசைத்தெளிப்பான், கைத்தெளிப்பான், பேட்டரி தெளிப்பான் வழங்கப்படுகிறது.மானியம் மற்றும் விவசாயிகள் செலுத்த வேண்டிய தொகையின் விவரம் பின்வருமாறு-
இதனைப்போ ஆதி திராவிட மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்த விவசாயிகளுக்கு இதே திட்டத்தின் கீழ் 90 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. அவற்றின் விவரம் பின்வருமாறு-
இந்த திட்டத்தினை செயல்படுத்த ஒன்றிய அரசு 60 சதவீதமும், மாநில அரசின் சார்பில் 40 சதவீதமும் நிதியுதவி வழங்குகிறது.
நலத்திட்டத்தினை பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் சுலபமாக முன்பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் தகவலுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும் என தமிழக வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண்க:
கடந்த ஒரு மாதத்தில் இது மூன்றாவது முறை.. மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்