கோவையில் மார்ச் மாதம் 4 ஆம் தேதி தொடங்க உள்ள மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சியில் பங்கேற்று தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய விருப்பமுள்ள சுய உதவிக் குழுவினர் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருட்களைச் சந்தைப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தேசிய, மண்டல, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கண்காட்சி நிகழ்வுகளை ஏற்பாடு செய்து அவற்றில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது உற்பத்திப் பொருட்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்யவும் வாய்ப்புகள் வழங்கி வருகிறது.
ஆனால் இது போன்ற கண்காட்சிகள் நடைபெறும் தகவல் மற்றும் கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு ஒரு சில மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு தற்போதும் சென்றடையா சூழ்நிலை இருந்து வருகிறது. இந்நிலையை போக்க ஏதுவாக கண்காட்சிகள் நடைபெறும் விவரம் மற்றும் கண்காட்சியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து பதிவு செய்ய ஏதுவாக இணைய வழிப் பதிவு (Online Registration) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூரில் 04.03.2023 முதல் 12.03.2023 வரை நடைபெற உள்ள மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மகளிர் சுய உதவிக் குழு சகோதரிகள் https://exhibition.mathibazaar.com/login என்கிற இணையத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து பயன்பெறுமாறு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்ககத்தின் மேலாண்மை இயக்குநர்/ முதன்மை செயல் அலுவலர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர்கள் பொருளதார வகையில் மேம்பட கிராம, நகர்ப்புறங்களிலுள்ள பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டன. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் மாவட்டந்தோறும் கண்காட்சி நிகழ்வினை நடத்தி வருகிறது. முன்னதாக மாநில அளவிலான மகளிர் சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையினை முன்னிட்டு சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற கண்காட்சிகளில் பங்கேற்கும் மகளிர் சுய உதவிக்குழுவினர் தங்களது உற்பத்தி பொருட்களான துணி வகைகள், சணல் பொருட்கள், மூலிகை தொடர்பான உற்பத்தி பொருட்கள், குளியல் பவுடர், வலி நிவாரணி, பூஜை பொருட்கள், மசாலா மற்றும் சிறுதானிய உணவு பொருட்கள், இயற்கை உணவு பொருட்கள், கைவினை பொருட்களை ஆகியவற்றை காட்சிப்படுத்தி விற்பனையில் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர்,பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின்
உலை கொதிக்குமா இனி? வீட்டு, வணிக சிலிண்டரின் விலை கிடுகிடு உயர்வு