தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சில தினங்களுக்கு முன்பு விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைப்பெற்றது. அப்போது, பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம் மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பில் வழங்கப்படும் மானியத் திட்டங்களின் நிலவரம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
சோலார் பம்புசெட், இல்லம் தேடிஉழவர் கடன் அட்டை பிரச்சாரத்தின் தற்போதைய நிலை மற்றும் வேளாண் காடுகள் தொடர்பான திட்டம் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டு தகுதியான விவசாயிகள் இத்திட்டங்களில் இணைந்து பயனடையுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கான திட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் பின்வருமாறு-
பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத் திட்டம்: (PMKSY 2023-24)
வேளாண்மைத்துறை: (2023-24) ஆம் ஆண்டிற்கு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மூலம் நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவிட 400 எக்டர் பரப்பளவிற்கு ரூ.473 இலட்சம் இலக்கு பெறப்பட்டு திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுவரை நுண்ணீர் பாசனம் அமைக்க பதிவு செய்யப்பட்ட 505 எக்டரில் 415 எக்டர் பரப்பளவிற்கு பணி ஆணை வழங்கப்பட்டு 308 எக்டர் பரப்பளவிற்கு பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன. இத்திட்டத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்க சிறு/குறு விவசாயிகளுக்கு 100% மானியமும் ஏனையோருக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி விண்ணப்பித்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தோட்டக்கலைத்துறை:- இதே 2023-24-ம் ஆண்டில் தோட்டக்கலைத்துறைக்கு 1500 எக்டர் பரப்பளவில் ரூ.1141 இலட்சத்திற்கு நுண்ணீர்ப் பாசன இலக்கு பெறப்பட்டுள்ளது. இதுவரை 843 எக்டர் பரப்பளவில் நுண்ணீர் பாசனம் அமைக்க 792 விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பித்த 592 பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 612 எக்டர் பரப்பளவிற்கு பணி ஆணை வழங்கப்பட்டு 463 எக்டர் பரப்பளவிற்கு பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன.
வேளாண் பொறியியல் துறை: (2023-24 ஆம் நிதியாண்டில் வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம்)
முதல் தவணையில் மொத்தம் 126 எண்கள் பவர்டில்லர் மற்றும் பவர் வீடர்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு வழங்குவதற்கு ரூ.105.22 இலட்சம் மானியம் ஒதுக்கீடு வரப்பெற்று, 126 எண்களும் வழங்கப்பட்டு ரூ.102.41 இலட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் தவணையில் 14 எண்கள் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்குவதற்கு ரூ.39.35 இலட்சம் மானியம் ஒதுக்கீடு வரப்பெற்று, 12 எண்கள் வழங்கப்பட்டு 8 எண்களுக்கு ரூ.18.88 இலட்சம் மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது.
சோலார் பம்புசெட்: தமிழக முதலமைச்சரின் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட் அமைத்துக் கொடுக்கும் திட்டத்தில் 160 எண்கள் இலக்கு வரப்பெற்று, விவசாய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது.
மானியத்தில் மின்மோட்டார் பம்புசெட் வழங்கும் திட்டம் 2022-23: 220 எண்கள் ரூ.33.00 இலட்சம் மானியம் ஒதுக்கீடு வரப்பெற்று, 24 எண்களுக்கு வேலை உத்தரவு வழங்கப்பட்டு 3 எண்களுக்கு ரூ. 42,576/- மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் காண்க:
வேளாண் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் காலிப்பணியிடம்- முழு விவரம் காண்க
நெற்பயிர் பால் பிடிக்கும் பருவத்தில் இதை பண்ணுங்க- ஆட்சியர் அறிவுறுத்தல்