காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார் வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
இதுத்தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு-
காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகளின் நிலத்தடி நீர்பாசனத்துக்கு உதவிடும் வகையில் 150 விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்கு பதிலாக, புதிய மின் மோட்டார் பம்பு செட் வாங்குவதற்கு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் தலா ரூ.15000/-வீதம் ரூ.22.50 இலட்சம் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே மின் இணைப்பு பெற்றுள்ள, 5 ஏக்கருக்கு குறைவாக உள்ள விவசாயிகள், பழைய திறனற்ற மின் மோட்டார் பம்பு செட்டுகளை மாற்ற விரும்பம் உள்ளவர்கள், புதிய ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளி கிணறு அமைத்து புதிய மின் மோட்டார் பம்பு செட்டு வாங்க விரும்புபவர்கள் பட்டா, சிட்டா அடங்கல், நிலவரைபடம், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்று ஆகிய விவரங்களுடன் அருகில் உள்ள வேளாண்மைப் பொறியியல்துறை அலுவலகங்களை அணுகலாம்.
இத்திட்டத்தில் மானியம் பெற விண்ணப்பிக்கும் விவசாயிகள் தங்களது நிலத்தில் நுண்ணீர் பாசன அமைப்பினை நிறுவியிருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் http://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கவேண்டும்.
மின் மோட்டார்களை வாங்க விவசாயிகளுக்கு ரூ.15000/- அல்லது மின் மோட்டார் பம்பு செட்டின் மொத்த விலையில் (GST தொகையையும் சேர்த்து) 50%. இவற்றில் எது குறைவோ அத்தொகை பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
- செயற்பொறியாளர்(வே.பொ.), 487, அண்ணாசாலை, நந்தனம், சென்னை-35. கைபேசிஎண் 99529 52253.
- உதவி செயற்பொறியாளர்(வே.பொ), வேளாண்மைப் பொறியியல் விரிவாக்க மையம், பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம் - 631 502. அலைபேசி எண் 044- 24352356. கைபேசி எண்: 90030 90440.
மேலும், கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 55 கிராமங்களில் நடப்பு நிதியாண்டில் (2023-24) காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் 106 பவர்டில்லர்கள் மற்றும் 4 களையெடுக்கும் விசை கருவிகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமத்திற்கு தலா 2 வீதம் அரசு மானியத்தில் பவர்டில்லர்கள், களையெடுக்கும் விசை கருவிகள் வழங்கப்பட உள்ளது. பவர்டில்லர்களுக்கு சிறு, குறு, பெண், ஆதிதிராவிட விவசாயிகளுக்கு அதிக பட்சமாக மானியத்தில் ரூ.85000/-மும் களையெடுக்கும் விசை கருவிகளுக்கு ரூ.63000/- மற்றும் ரூ.35,000/- மும் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
அரிசி ஏற்றுமதியில் கட்டுப்பாடு- அமெரிக்காவை திணறடித்த இந்தியர்கள்