திருப்பத்தூர் மாவட்டம் கேத்தாண்டபட்டி கிராமத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையானது தமிழகத்தில் அதிக சர்க்கரை கட்டுமானம் கிடைக்கப்பெறும் ஆலையாக உள்ளதால் கரும்பிற்கு தமிழகத்திலேயே அதிக விலை கொடுக்கும் ஆலையாக கடந்த 46 ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டு வருகின்றது.
மற்ற விலைப்பொருட்களின் விலை ஆண்டு முழுவதும் ஏற்றதாழ்வாக இருக்கும் நிலையில் கரும்பிற்கான கிரயம் ஒவ்வொரு ஆண்டும் ஏறுமுகமாகவே உள்ளது என்பதாலும் அகலபார் அமைத்து கரும்பு நடவுசெய்து நடவு முதல் அறுவடை வரை இயந்திரங்களை கொண்டு கரும்பு சாகுபடி செய்ய முடியும் என்பதாலும் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு நடவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க தமிழக அரசால் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நிறைவேற்றப்படும் அரசு மானியதிட்டங்கள் பின்வருமாறு:
- கரும்பிற்கான சிறப்பு ஊக்கத்தொகை அங்கத்தினர்கள் சப்ளைசெய்யும் ஒவ்வொரு டன்னுக்கும் சிறப்பு ஊக்கத்தொகையாக ரூ.195 வழங்கப்படுகிறது.
- சொட்டு நீர்பாசனம் அமைத்து கரும்பு சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது.
தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மானிய திட்டங்கள் பின் வருமாறு:
அ) வல்லுநர் விதை கரும்பை கொண்டு நாற்றங்கால் நடவு செய்யும் அங்கத்தினர்களுக்கு ஏக்கர் 1-க்கு ரூ.5000/-மானியம் வழங்கப்படுகிறது.
ஆ) கரும்பு பருசீவல் நாற்று கொண்டு நடவு செய்யும் அங்கத்தினர்களுக்கு ஏக்கர் 1-க்கு ரூ.5000/-மானியம் வழங்கப்படுகிறது.
இ) ஒரு பரு கரணை கொண்டு நடவு செய்யும் அங்கத்தினர்களுக்கு ஏக்கர் 1-க்கு ரூ.1500/- மானியம் வழங்கப்படுகிறது.
ஈ) சோகை தூளாக்கும் இயந்திரம் கொண்டு அறுவடைக்கு பிறகு கிடைக்கும் சோகையை தூளாக்க ஏக்கர் 1-க்கு ரூ 710/-. மானியம் வழங்கப்படுகிறது.
அகல பார் மூலம் நடவு செய்வதால் ஏற்படும் நன்மைகள்:
- களை எடுத்தல், மண் அனைத்தல் மற்றும் கரும்பு அறுவடை போன்ற பணிகளை மினி டிராக்டர், பவர் டில்லர் மற்றும் அறுவடை இயந்திரம் மூலம் செய்ய முடியும் என்பதால் சாகுபடிசெலவு பாதியாக குறையும்.
- போதிய இடைவெளி இருக்கின்ற காரணத்தால் தனி கரும்பின் எடையும் அதிகரிக்கும் என்பதோடு கரும்பு வயலில் உள்நுழைந்து பூச்சி, நோய் மற்றும் எலி தாக்குதலை எளிதாக கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை சுலபமாகவும், விரைவாகவும் எடுக்க முடியும்.
- அறுவடை இயந்திரம் மூலம் அறுவடை செய்யும் போது சோகைதூள் ஆக்கப்படுவதோடு களைகள் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு கரும்புகட்டையும் பூமி மட்டத்திற்கு சீவப்படுவதால் மறுதாம்பு நன்கு துளிர்ந்து வளரும்.
எனவே, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பல்வேறு மானிய திட்டத்தின் கீழ் விவசாயிகள் அதிக அளவில் கரும்பு நடவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கரபாண்டியன்,இ,ஆ,ப., தெரிவித்துள்ளார்.
pic courtesy: bizz buzz
மேலும் காண்க:
குடும்பத் தலைவிகளுக்கான 1000 ரூபாய் திட்டம்- தன்னார்வலர்களை நியமிப்பதில் கடும் கட்டுப்பாடு