சென்னையில் மெட்ராஸ் ஐ எனப்படும் கண்நோய் தீவிரமாகப் பரவி வருகிறது. ஆதலால், குடும்பத்தில் உள்ளவர்களில் யாருக்காவது ஒருவருக்கு இந்த கண்நோய் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் முடிந்தவரை தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.
நோய் பரவாமல் தடுக்க, 3 முதல் 4 நாட்கள் அலுவலகங்களுக்கு செல்வதையோ, பள்ளிகளுக்கு செல்வதையோத் தவிர்க்க வேண்டும். ஏன், வணிக வளாகங்களுக்கு செல்வதையோ, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதைக் கட்டாயம் தவிர்த்துக் கொள்வது நல்லது.
மெட்ராஸ் ஐ
சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து மெட்ராஸ் ஐ எனப்படும் கண் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையை பொறுத்தவரை கண் நோய்க்கான மருத்துவ மையங்கள் அரசின் சார்பில் 10 இடங்களில் இருக்கிறது.
கண் மருத்துவமனைகள்
எழும்பூர் கண்நோய் மருத்துவமனையைப் போன்று ஸ்டான்லி அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை என 10 இடங்களில் கண் மருத்துவம் பார்க்கும் மையங்கள் இருக்கிறது.
4500 பேர்
இதில் எழும்பூரில் இருக்கிற மண்டல கண் மருத்துவயியல் நிலையம் என்பது கண் மருத்துவத்தில் மிக சிறப்பான பங்களிப்பை செய்து வருகிறது. சென்னையில் 10 இடங்களிலும் நாள்தோறும் சராசரியாக 80 முதல் 100 பேர் வரை இந்த நோயினால் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் தினமும் 4000 முதல் 4500 பேர் வரை மெட்ராஸ் ஐ பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.
சென்னையில் 10 கண் நோய் மருத்துவ மையங்கள் இருப்பதை போலவே தமிழ்நாடு முழுவதிலும் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், சில வட்டார அரசு மருத்துவமனைகள் என 90 இடங்களில் அரசு கண் மருத்துவ மையங்கள் இயங்கி வருகிறது.
இவ்வாறு கூறினார்.
மேலும் படிக்க...