வைரஸ் தொற்றுக்கு ஆன்டி பயாடிக் மருந்துகளை சாப்பிடும் வழக்கம் அதிகமாக உள்ளது. 80 ஆண்டுகளாக ஆன்டி பயாடிக் மருந்துகள் பயன்பாட்டில் உள்ளன. எந்த மருந்தையும் தேவைக்கு அதிகமாக பயன்படுத்தும் போது, மருந்திற்கு எதிராக கிருமிகளின் வீரியம் அதிகரித்தபடியே போகும் என்பது தான், நாம் அனுபவத்தில் தெரிந்து கொண்டது.
ஆன்டிபயாடிக்
இதனால், ஒவ்வொரு முறை பாக்டீரியா தொற்று ஏற்படும் போதும், முன்னைக் காட்டிலும் வீரியம் மிக்க மருந்துகளைத் தர வேண்டியுள்ளது. கேன்சர், சர்க்கரைக் கோளாறு, உயர் ரத்த அழுத்தத்திற்கு பரிசோதனை செய்து, அவற்றை உறுதி செய்யாமல் எந்த டாக்டரும் மருந்து தருவது கிடையாது; தேவையில்லாத போதும் ஆன்டிபயாடிக் மருந்துகளை பரிந்துரைப்பதற்கு டாக்டர்கள் தயாராகவே உள்ளனர்.
காய்ச்சல், சளி என்று குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோர், 'டாக்டர் ஆன்டிபயாடிக் எழுதலையே...' என்று கேட்பது வழக்கமாகி விட்டது. 75 சதவீதம் குழந்தைகளுக்கு எதற்காக தருகிறோம் என்று தெரியாமலேயே, ஓராண்டில் நான்கு முறை ஆன்டிபயாடிக் தரப்படுகிறது. வைரஸ் தொற்றுக்கு, பாக்டீரியா தொற்றுக்கான மருந்து பயன்படுத்தக் கூடாது என்பதே புரிவதில்லை. மருந்து எழுதித் தருவதற்கு எனக்கு ஒரு நிமிடம் போதும்; 'இந்த மருந்து கெடுதல்' என்று புரிய வைப்பதற்கு 20 நிமிடங்கள் ஆகிறது.
ஆன்டிபயாடிக் மருந்துகளை வரைமுறை இல்லாமல் பயன்படுத்திய பாகிஸ்தான் மக்களுக்கு, 'டைபாய்டு' பாதிப்பு ஏற்பட்டு, தற்போது உள்ள எந்த மருந்தாலும் சரி செய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது. நம் நாட்டிலும் குறிப்பிட்ட சில ஆன்டிபயாடிக் மருந்துகள் மட்டுமே பலன் தருகின்றன. இன்னும் சில ஆண்டுகளில், எந்த ஆன்டிபயாடிக் மருந்தும் வேலை செய்யாது என்ற நிலை வரலாம்.
பாதிப்புகள்
ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக பயன்படுத்தினால், அலர்ஜி, வாந்தி, பேதி, சிறுநீரகக் கோளாறு, கல்லீரல், நரம்பு மண்டல கோளாறுகள் வரும் வாய்ப்புகள் உள்ளன. கால்நடைகள், கோழிகளுக்கு இந்த மருந்துகளை நேரடியாகவும், தீவனம், தண்ணீர் வழியாகவும் செலுத்துவதால், இவற்றை சாப்பிடும் நமக்கும் பாதிப்பு வரும்.
தவிர்க்க
பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். இருமல், சளி, காய்ச்சல், சாதாரண வாந்தி, பேதி, லேசான காயத்திற்கு ஆன்டிபயாடிக் பயன்படுத்த தேவையில்லை. டாக்டர்கள், மருத்துவமனைகள், தனி நபர்கள் அரசுடன் இணைந்து, இதன் பயன்பாட்டை குறைக்க முன்வர வேண்டும். பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், எதுவும் செய்ய முடியாது.
டாக்டர் சுப்ரமணியம் சுவாமிநாதன்,
தொற்று நோய் மருத்துவ ஆலோசகர்,
சென்னை
மேலும் படிக்க