இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள் தொழில் முனைவோராகவே இருக்க விரும்புகின்றனர். இத்தகைய பெண்களை ஊக்குவிக்கும் நோக்கில் எஸ்பிஐ, ஓரியன்டல், தேனா, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளிட்ட 5 வங்கிகள் அற்புதமான எளிய முறையிலான கடன் திட்டங்களை வழங்கி வருகிறது. இதன் மூலம் தொழில் தொடங்க விரும்பும் பெண்கள் எந்த பிணைப் பத்திரம் இல்லாமலும் எளிதில் கடன் பெறலாம். அத்தகைய திட்டங்கள் குறித்து நாம் பார்ப்போம்.
ஓரியண்ட் மகிளா விகாஸ் யோஜனா திட்டம் (Oriental Mahila Vikas Yojana Scheme)
ஓரியண்ட் மகிளா விகாஸ் திட்டத்தின் கீழ், ஓரியண்டல் வங்கிகளில் கடன் பெற விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 10 லட்சம் ரூபாய் முதல் 25 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படுகிறது. பார்ட்னர்ஷிப் வணிகம் என்றால் 51 சதவீத பங்குகள் பெண் விண்ணப்பதாரர் வசம் இருக்க வேண்டும். இந்த கடனைப் பெறுவதற்கு எந்த வகையான உத்தரவாதமும் தேவையில்லை. பெண் தொழில்முனைவோர் 7 வருட காலத்திற்குள் தங்கள் கடன்களைத் திருப்பிச் செலுத்தலாம். இதன் கீழ், 2 சதவீதம் வரை வட்டியில் சலுகைகளும் அளிக்கப்படுகிறது.
தேனா சக்தி திட்டம் (Dena Shakti Scheme)
பெண் தொழில்முனைவோர் விவசாயம், உற்பத்தி, நுண் கடன்கள், சில்லறைக் கடைகள் அல்லது மைக்ரோ நிறுவனங்கள் ஆகியவற்றில் தங்கள் தொழிலை வளர்க்க விரும்பினால், அதற்கான நிதி உதவி தேவைப்பட்டால், தேனா வங்கியின் இத்திட்டம் எல்லாவற்றிலும் சிறந்தது.
சில்லறை வர்த்தகத்திற்கான இந்த திட்டத்தின் கீழ் பெண் தொழில்முனைவோருக்கு அதிகபட்சமாக ரூ .20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது, இதில் வட்டி விகிதம் 0.25% ஆகும். இந்த தொகையைப் பெண் தொழில்முனைவோர் மாதந்தோறும் செலுத்துவதன் மூலம் கடனை எளிதாக அடைக்க முடியும்.
மகிளா உத்யம் நிதி திட்டம் (Mahila Udyam Nidhi Scheme)
மகிளா உத்யோக் நிதி யோஜனா பஞ்சாப் நேஷனல் வங்கியால் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், சிறிய அளவிலான தொழில்களில் ஈடுபட்டுள்ள மகளிர் நிறுவனங்களுக்கு கடன்களை வழங்குவதே இதன் நோக்கம். கடன் தொகையை 10 வருட காலத்திற்குள் பெண் தொழில்முனைவோர் எளிதில் திருப்பிச் செலுத்த முடியும். மகிளா நிதி திட்டம் பியூட்டி பார்லர், பகல்நேர பராமரிப்பு மையம், ஆட்டோ ரிக்ஷா ஆகியவற்றின் கீழ் வெவ்வேறு கடன் திட்டங்களும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை ரூ .10 லட்சம்.
ஸ்ரீ சக்தி பேக்கேஜ் (Sree Shakti Packages)
பெண் தொழில் முனைவோர்கள் எஸ்பிஐ வங்கியில் (SBI BANK) 2 லட்சம் ரூபாய் வரையில் கடன் பெறும்போது 0.50 சதவீத வட்டி சலுகையும், 5 லட்சம் ரூபாய் வரையிலான கடனுக்கு எந்த ஒரு பிணையும் இல்லாமலும் கடன் அளிக்கப்படுகிறது.
செண்ட் கல்யாணி திட்டம் (Cent Kalyani Scheme)
சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவின் (CBI - Central Bank of India) இத்திட்டத்தின் கீழ், பெண்கள் புதிய தொழில் துவங்க அல்லது ஏற்கனவே செய்து வரும் தொழிலை மேம்படுத்தக் கடன் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் கீழ் கிராமம், சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், சுயதொழில், விவசாய சில்லறை வர்த்தகம் போன்ற வணிக முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பெண் தொழில்முனைவோர்களால் இந்த கடனைப் பெற முடியும். இதில், 100 லட்சம் ரூபாய் வரை கடன் அளிக்கப்படுகிறது. மேலும் கடனின் அளவைப் பொருத்து 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரை வட்டி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், பெண் தொழில்முனைவோருக்குக் கடன் எடுக்கும்போது எந்த உத்தரவாதமும் தேவையில்லை
மேலும் படிக்க...
குறைந்த முதலீடு - நிறைந்த வருமானம் - சிறு சிறு தொழில் செய்யலாம் வாங்க!!
PMSMY: ஏழை விவசாயி குடும்பத்திற்கு 2-வது வருமானம்! மத்திய அரசின் திட்டம்!