உயிர்வாழ உணவு அவசியம் என்பதைப் போல, அந்த உணவை நாம் சாப்பிட நிச்சயம் உப்பு தேவை. ஏனெனில் உணவின் சுவையை நிர்ணயிப்பதில் உப்பின் பங்கு இன்றியமையாதது. இது ஒருபுறம் என்றால், உடலின் இயக்கத்திற்கும் உப்பு தேவைதான். இருப்பினும் கொஞ்சம் கூடுதலாக உப்பைச் சேர்த்துச் சாப்பிடுபவராக இருந்தால், உங்களை அலேர்ட் செய்யவே இந்தத் தகவல்.
உப்பு ஏன் தேவை?
உப்பை (Salt) உட்கொள்வதால் உடலுக்குத் தேவையான சோடியம் மற்றும் குளோரைடு தாதுக்களைப் பெறுகிறோம். நமது உடல் செயல்பாடுகளுக்கு சோடியம் முக்கியமானது. மேலும் உடலில் திரவ சமநிலையை பராமரிக்க குளோரைடு முக்கியமானது. ஆனால் உப்பை அதிகமாக உட்கொள்வது இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.
அதேநேரத்தில் உப்பை அதிகமாக உட்கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்திக்கு, பெரும் ஆபத்தாகிவிடும் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவுகள்.
உப்பு இல்லாத உணவை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. உப்பு உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், ஆரோக்கியத்துக்கும் பல நன்மைகளை அளிக்கின்றது. எனினும், உப்பை அதிகமாக உட்கொள்வதும் நோய் எதிர்ப்பு சக்திக்கு, ஆபத்தாகிறது என்பதும் தெரிய வந்துள்ளது.
சிறுநீரகத் தொற்று
சயின்ஸ் டிரான்சேஷனல் மெடிசின் குறித்து வெளியிடப்பட்ட புதிய ஆய்வின்படி, ஜெர்மனியில் உள்ள பான் பல்கலைக்கழக மருத்துவமனையின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில், உணவில் அதிக உப்பை சேர்ப்பது, நோய் எதிர்ப்பு மண்டலத்தின் (Immunity System) உயிரணுக்களின் பாக்டீரியா எதிர்ப்பு செயல்பாட்டை பாதிக்கும் என்று கண்டறியப்பட்டது. இதன் காரணமாக உடலுக்கு ஆபத்தான பாக்டீரியாக்களை நோய் எதிர்ப்பு மண்டலத்தால் அழிக்க முடிவதில்லை. ஈ.கோலை (E.Coli) பாக்டீரியாவால் சிறுநீரக நோய்த்தொற்றுகளும் ஏற்படலாம்.
அதிகப்படியான உப்பை உட்கொள்வதால் உடலின் நியூட்ரோபில்ஸ் எனப்படும் நோயெதிர்ப்பு உயிரணுக்கள் பலவீனமடைகின்றன. இந்த உயிரணுக்கள், முக்கியமாக பாக்டீரிய சிறுநீரக (Kidney) நோய்த்தொற்றுக்கு எதிராக போராட உதவுபவை.
எவ்வளவு சாப்பிட வேண்டும்?
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, பெரியவர்கள் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் அல்லது 5 கிராமை விட குறைவான உப்பை உட்கொள்ள வேண்டும். இது ஒரு நிலையான அளவாகும். குழந்தைகளில் இந்த அளவு குறைக்கப்பட வேண்டும். இது தவிர, ஒரு நாளைக்கு உங்களுக்கு தேவையான உப்பின் அளவு உங்கள் உடல் செயல்பாடுகளின் அளவையும் பொறுத்தே மாறுபடுகிறது.
மேலும் படிக்க...