சமச்சீர் உணவே ஆரோக்கிய வாழ்வுக்கு அடித்தளம். எனவே தான் எல்லா காலங்களிலும் ஆரோக்கியமான உணவு முறைகளை பின்பற்றுவது அவசியமாகிறது.
புரதம், மாவுப் பொருள், கொழுப்பு, வைட்டமின், தாதுஉப்பு முதலிய அனைத்தும் சீரான அளவில் இருக்க வேண்டும். அதைத்தான் சமச்சீர் உணவு என்று சொல்லுகிறோம். சமச்சீர் உணவுத் திட்டத்தின்படி தேவையான வைட்டமின் சத்துக்களையும் தாதுஉப்புக்களையும் பெற ஒருவர் தினசரி 125 கிராம் கீரைகளையும் 75 கிராம் காய்களையும் அரிசி, பருப்பு போன்ற மற்ற உணவோடும் சேர்த்துச் சாப்பிட வேண்டும்.
வைட்டமின்கள் நிறைந்த கீரைகள்
அரிசி, பருப்பு போன்ற உணவுகளில் நமக்குத் தேவையான மாவுப் பொருட்களும், புரதமும் மட்டுமே கிடைக்கின்றன. முக்கியமான வைட்டமின் சத்துக்களையும் தாதுஉப்புக்களையும் (Minarals) நாம் கீரையிலிருந்துதான் எளிதாகப் பெற முடியும்.
இன்றைய காலகட்டத்தில் வைட்டமின் குறைபாடு அதிகம் காணப்படுகிறது. குழந்தைகளிடமும் கர்ப்பிணிகளிடமும் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. நமது உணவில் தினந்தோறும் கீரையைச் சேர்த்துக் கொள்வதைப் பழக்கமாக்கிக் கொள்ளவதன் மூலம் இது போன்ற குறைபாடுகளை பெருமளவில் குறைக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
வைட்டமின் A-க்கு ஏற்ற கீரை வகைகள் (Vitamin A)
வைட்டமின் A நமது கண்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்குத் தேவைப்படுகின்றது.
அகத்தி, முளைக்கீரை, தண்டுக்கீரை, முருங்ககைக்கீரை, பாலக் அல்லது பீட்ரூட்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை முதலிய கீரைகளில் வைட்டமின் A அதிகமாகவுள்ளது.
வைட்டமின் B-க்கு ஏற்ற கீரை வகைகள் (Vitamin B)
வைட்டமின் B (Vitamin B)குறைந்தால் பசி ஏற்படாது. நரம்புகள் சக்தியிழந்து உடல் வலிவு குறைந்து காணப்படும். வாயிலும் உதட்டிலும் புண்கள் ஏற்படும். இரத்த சோகை உண்டாகும். பெரிபெரி என்ற நோயும் உண்டாகும்.
கறிவேப்பிலை, புளிச்சக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை உள்ளிட்டவற்றை சாப்பிடுவதால் இது போன்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்
வைட்டமின் C-க்கு ஏற்ற கீரை வகைகள் (Vitamin C)
வைட்டமின் C (Vitamin C)சத்து பல், எலும்பு முதலிய உறுப்புகள் வலிவுடன் வளர்ச்சியடைய உதவுகின்றது. வைட்டமின் சத்து நோய்களை எதிர்க்கம் சக்தியைக் கொடுக்கின்றது. வைட்டமின் C சத்துக் குறைவினால் ஸ்கர்வி என்ற நோய் ஏற்படுகின்றது.
வைட்டமின் C அகத்திக் கீரை, முருங்கைக் கீரை, முளைக்கீரை, முட்டைகோஸ், கொத்தமல்லி முதலிய கீரைகளில் அதிகமாக இருக்கிறது. வைட்டமின C சத்து கீரைகளை வேக வைக்கும்போது பெரிதும் அழிந்து விடுகிறது. சமைக்கும்போது அதிக நேரம் வேக வைக்காமலும் வேகவைத்த நீரை இறைத்து விடாமலும் இருக்க வேண்டும். சுமைக்காமல் சாப்பிடக்கூடிய பல கீரைகளையும் பச்சையாகச் சாப்பிடக் கற்றுக் கொள்ள வேண்டும்.
சுண்ணாம்பு சத்து (Calcium) அதிகம் இருக்கும் கீரைகள்
நமது இருதயம் சரியாகச் சுருங்கி விரிவதற்கும் சுண்ணாம்புச் சத்து அவசியம். சுண்ணாம்புச் சத்து வளரும் குழந்தைகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் மிக மிக அதிகமாகத் தேவைப்படுகின்றது.
சுண்ணாம்புச் சத்து அகத்தி, முருங்கை, தண்டுக்கீரை, அரைக்கீரை, வேளைக்கீரை, கறிவேப்பிலை, பொன்னாங்கண்ணி, நச்சுக் கொட்டைக் கீரை, மணத்தக்காளிக் கீரை, கரிசலாங்கண்ணி கீரை, பாலக்கீரை முதலியவற்றில் கிடைக்கின்றது.
இரும்புச் சத்து (Iron) குறைபாட்டிற்கு உதவும் கீரை வகைகள்
இரும்புச் சத்து நம் உடல் வளர்ச்சிக்கு இன்றியமையாதது. இரும்புச் சத்துக் குறைவினால் இரத்தசோகை உண்டாகிறது. கர்ப்பிணிகளுக்கு இரும்புச் சத்து நிறைய தேவைப்படும்.
இரும்புச்சத்து முளைக்கீரை, அரைக்கீரை, கொத்தமல்லி, மணத்தக்காளிக்கீரை, குப்பைக் கீரை, நச்சுக் கொட்டைக்கீரை, பசலைக்கீரை, வல்லாரைக் கீரை, புண்ணாக்குக் கீரை, வேளைக்கீரை முதலிய கீரைகளில் நிறைய கிடைக்கிறது.
மேற்கூறிய கீரைகளைவிட எல்லா வைட்டமின் (Vitamin) சத்துக்களும் தாதுஉப்புக்களும் (Minarals) ஒருங்கே கொண்ட கீரை தவசிக்கீரையாம். இக்கீரையைச் சமைக்காமல் பச்சையாகவும் சாப்பிடலாம்.
வைட்டமின்கள் மட்டுமின்றி நம் உடல் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ், மக்னீசியம், சோடியம், பொட்டாசியம் போன்ற தனிமங்களும் கீரை வகைகளில் போதிய அளவில் கிடைக்கின்றன. ஆகவே எளிதில் மலிவாகக் கிடைக்ககூடிய கீரைகளை நாள்தோறும் நமது உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு பெறுவோம்.
மேலும் படிக்க....
நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் - C உணவுகள்- FSSAI வழிகாட்டுதல்கள்!
LIC வழங்கும் குறைந்த EMI-யில் வீட்டுக்கடன் திட்டம்! 6.90% வட்டி மட்டுமே!!