புரதத்திற்காக சிக்கன், மட்டனை தங்களது உணவுகளில் எடுத்துக் கொள்வது போல், ஸ்பைருலினாவினையும் தாரளமாக நீங்கள் எடுக்கலாம் என்கிறார், ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையம் தாலுகாவிலுள்ள அயலூர் பகுதியில் ஸ்பைருலினா எனப்படும் சுருள் பாசி வளர்ப்பில் ஈடுபட்டு வருகிறார் பொன்னுச்சாமி.
2010 ஆம் ஆண்டு M.CA பட்டம் பெற்று சுமார் 3 ஆண்டுகள் ஐடி துறையில் வேலை செய்து வந்துள்ளார். வேளாண் தொடர்பான ஏதேனும் தொழிலில் ஈடுபடலாம் என பொன்னுச்சாமி முடிவெடுத்த காலத்தில், அதுத்தொடர்பான முறையான பயிற்சிகளை பெற்று சுருள்பாசி வளர்ப்பில் தற்போது ஈடுபட்டு வருகிறார். இவர் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்து கிரிஷி ஜாக்ரன் அவருடன் கலந்துரையாடியது.
60 சதவீத புரதச்சத்து:
சுருள்பாசி சாப்பிடுவதால் என்ன நன்மை இருக்கு என நாம் எழுப்பிய கேள்விக்கு, ”மனிதர்களாகிய நமக்கு புரதச்சத்து என்பது ரொம்ப அவசியம். 100 கிராமில் 60 சதவீதத்திற்கும் அதிகமான புரதச்சத்து ஸ்பைருலினாவில் உள்ளது. கோழி, மீன், ஆட்டுக்கறி, முட்டை, காளான் போன்றவற்றை புரதத்திற்காக நாம் எடுத்து வருகிறோம். அந்த வகையில் ஸ்பைருலினாவையும் நீங்கள் தாரளாமாக எடுத்துக்கொள்ளலாம். அதற்காக மற்றவற்றை சாப்பிடக்கூடாது என்று சொல்லவில்லை. உதாரணத்திற்கு, சிக்கன், மட்டன் போன்ற கறியினை உண்டால் அவை செரிமானம் ஆக பல மணி நேரம் ஆகும். ஸ்பைருலினா எளிதில் செரிமானம் அடையும் தன்மைக் கொண்டது.
ஸ்பைருலினாவினை பொடியாக ஜூஸ், கேக், முறுக்கு , தோசை, ஆம்லெட் போன்ற உணவுப்பொருட்களிலும் பயன்படுத்தலாம். WHO பரிந்துரையின் படி, ஒரு நாளைக்கு 5 கிராம் வரை எடுக்கலாம். நாங்கள் தயாரிக்கும் மாத்திரை வடிவிலான ஸ்பைருலினா என்பது வெறும் அரை கிராம் தான். நீங்கள் நடைப்பயிற்சி மேற்கொண்டு ஒரு மாத்திரை சாப்பிட்டாலே அது உடலுக்கு நன்மை தரும். மொத்த விற்பனை, சில்லறை விற்பனை, மதிப்பு கூட்டு முறை என 360 டிகிரியிலும் தான் ஸ்பைருலினா தொழிலை மேற்கொண்டு வருகிறேன்.
”காரணம் இவை கால்நடைகளுக்கான தீவனம், காஸ்மெட்டிக் என இவற்றின் பயன்பாடு பரந்து விரிந்துள்ளது. அதற்கேற்ப நாங்கள் இத்தொழிலை மேற்கொண்டு வருகிறோம். புதிதாக ஸ்பைருலினா வளர்ப்பில் ஈடுபட ஒருத்தர் விரும்பினால், அவர்களுக்கு என் அனுபவத்திலிருந்து சொல்ல விரும்புவது- நம்ம எவ்வளவு தூரம் மார்க்கெட் பண்ண முடியும் என்பது தெரிந்து நீங்கள் சொந்தமாக ஸ்பைருலினா வளர்ப்பில் ஈடுபடலாம் என்று தான் கூறுவேன்”.
தொழில் ரீதியாக சரிவும் ஏற்றமும்:
”2023- ஆம் ஆண்டு, எதிர்ப்பாராத வகையில் தொழில் ரீதியாக சில சரிவை சந்தித்தேன். அதற்கு மேற்கத்திய நாடுகளில் ஏற்பட்ட போர் தொடர்பான பிரச்சினைகள் போன்றவையும் ஒரு காரணம். சட்டென்று ஸ்பைருலினா நுகர்வு குறைந்தது, தற்போது மீண்டும் அவற்றின் தன்மை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால், மீண்டும் வழக்கம் போல் ஸ்பைருலினா தொழில் சூடுபிடிக்கும் என்று நம்புகிறேன். நானும் தொடர்ச்சியாக ஸ்பைருலினா குறித்து பல்வேறு தளங்களின் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்க திட்டமிட்டுள்ளேன்” என நம்மிடம் தெரிவித்தார் பொன்னுச்சாமி.
ஸ்பைருலினா வளர்ப்பில் ஈடுபட விரும்புவோர், சந்தை மற்றும் தொழில் ரீதியாக பொன்னுச்சாமி அவர்களை கீழ்காணும் எண் மூலம் தொடர்புக் கொள்ளலாம். ( தொடர்பு எண்: பொன்னுசாமி- 99425 72618)
Read more:
விவசாயத்தை புரட்டிப் போட்ட டாப் 5 கண்டுபிடிப்புகள்- முழு விவரம் அறிக