1. செய்திகள்

விவசாயத்தை புரட்டிப் போட்ட டாப் 5 கண்டுபிடிப்புகள்- முழு விவரம் அறிக

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
Top 5 Inventions in agri field

வேட்டையாடி வாழத் தொடங்கிய மனிதச் சமூகம் பரிணாம வளர்ச்சியில் விவசாயத்தில் இறங்கியது தான் மனிதக்குலம் மேம்படத் தொடங்கியதற்கு அடித்தளம் எனலாம். பல ஆயிரம் ஆண்டுகளாக வேளாண் தொழிலில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அவற்றில் சொல்லிக்கொள்ளும்படி வேளாண் துறையினை புரட்டிப் போட்ட கண்டுபிடிப்புகள் குறித்துத் தான் இப்பகுதியில் காண இருக்கிறோம்.

விவசாயத்துறை சார்ந்த கண்டுபிடிப்புகள் உண்மையிலேயே மனித ஆற்றலை மிச்சப்படுத்தியுள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்காது. யுஎஸ்டிஏ ஃபார்ம் சர்வீஸ் ஏஜென்சியின் கூற்றுப்படி, 1960-காலக்கட்டங்களில் ஒரு விவசாயி சராசரியாக 25 பேருக்கு உணவை வழங்குகிறார். அதே நேரத்தில் ஒரு நவீன அமெரிக்க விவசாயி உலகம் முழுவதும் 155 பேருக்கு உணவளிக்கிறார். கொஞ்சம் யோசித்துப் பார்த்தாலே புரியும், இன்று உலக மக்கள் தொகை 8 பில்லியனைத் தாண்டும் நிலையில் அனைவருக்குமான உணவின் தேவையினை கடந்த கால வேளாண் நடைமுறை கொண்டு பூர்த்தி செய்ய முடியுமா என்றால் கேள்விக் குறிதான்? அந்த வகையில் எந்த விவசாய கண்டுபிடிப்புகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியது? என்பதனை ஆராயலாம்.

1.கலப்பை:

விவசாய வரலாற்றில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்திய கண்டுபிடிப்புகளில் ஒன்றாக கலப்பை அறியப்படுகிறது. விதைகளை நடுவதற்கு அல்லது விதைப்பதற்கு முன் மண்ணை உழுவதற்கு பயன்படுகிறது. வரலாற்று ரீதியாக, கலப்பை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தையது. கலப்பைக்கு முன், கையால் பிடிக்கப்பட்ட தோண்டும் குச்சிகள் மற்றும் மண்வெட்டிகளைப் பயன்படுத்தி மண்ணை உழுது உள்ளார்கள். 3500-3800 BCE க்கு முந்தைய செக் குடியரசின் புபெனெக்கில் உள்ள ஒரு தளத்தில் உழுவதற்கான ஆரம்ப சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பண்டைய எகிப்தியர்கள் "ஆர்ட்" என்று அழைக்கப்படும் ஒரு பெரிய விலங்கு இழுக்கும் கலப்பை முன்மாதிரியை உருவாக்கினர். இது இரும்பு முனை கொண்ட ஆப்பு வடிவ மர சாதனமாக உள்ளது.

2.உரம் :

உரம் என்பது மண்ணின் மூலம் ஊட்டச்சத்துக்களை தாவரங்களுக்கு நேரடியாக வழங்க பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். உரங்களின் வரலாறு கலப்பையை விட பின்னோக்கிச் செல்லும். சுமார் 8,000 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு உரமிட்டு வந்தனர். மர சாம்பல் வரலாற்று ரீதியாக ஒரு பிரபலமான உரமிடுதல் பொருளாக இருந்தது. அதே சமயம் ஆண்டிஸில், குவானோ எனப்படும் கடல் பறவைகள் அல்லது வெளவால்களின் கழிவுகள் உரமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இயற்கை உரங்களுக்கு அப்பாற்பட்டி இன்று பெரிதும் பயன்படுத்தப்படும் செயற்கை உரங்களானது- நைட்ரஜன், பாஸ்பேட் மற்றும் பொட்டாஷ் ஆகியவற்றின் கலவையாக உள்ளது. 1880 களின் பிற்பகுதியில் நடைமுறைக்கு வந்த செயற்கை உரங்கள் இன்று உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. செயற்கை உரத்தினால் கெடுதல் அதிகம் என கூறப்படும் அதே வேளையின் உணவுத்தேவையினை சமாளிக்க இவை கைக்கொடுக்கிறது.

செயற்கை நைட்ரஜன் உரத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய சாதனை ஹேபர்-போஷ் செயல்முறை ஆகும். இது தற்போதைய உலக மக்கள்தொகையில் பாதி பேருக்கு உணவளித்ததாகக் கருதப்படுகிறது. ஜெர்மன் வேதியியலாளர்கள் ஃபிரிட்ஸ் ஹேபர் மற்றும் கார்ல் போஷ் ஆகியோர் தங்கள் கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு பெற்றனர். நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜனை ஒருங்கிணைத்து அம்மோனியாவை உருவாக்குவதில் வெற்றி கண்டனர். நைட்ரஜன் அடிப்படையிலான உரங்களின் முக்கிய மூலப்பொருளாக கருதப்படுகிறது.

2020-ல் உலகளவில் 200 மில்லியன் மெட்ரிக் டன் உரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. நைட்ரேட்டுகள் அடிக்கடி நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றன, சுற்றுச்சூழலை சேதப்படுத்துகின்றன மற்றும் சுகாதார அபாயங்களை உண்டாக்குகிறது. இதற்கு தீர்வு என்ன? என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், வேளாண் துறையினை புரட்டிப்போட்ட கண்டுபிடிப்புகளில் செயற்கை உரத்திற்கு முக்கிய இடமுண்டு.

3. கதிரடிக்கும் இயந்திரம்:

இயந்திர த்ரெஷர் தானியங்களை வைக்கோலில் இருந்து பிரிப்பதை மிகவும் எளிதாகவும் விரைவாகவும் செய்தது. முதல் கதிரடிக்கும் இயந்திரம் 1778-ல் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் ஆண்ட்ரூ மெய்க்லே என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. (1734 இல் மைக்கேல் மென்சீஸ் காப்புரிமை பெற்ற முந்தைய சாதனத்தின் அடிப்படையில்). காலப்போக்கில் பல மாற்றங்களை கண்டு, இன்று மனித ஆற்றலை அதிகம் மிச்சப்படுத்திய கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக திகழ்கிறது.

Read also: மாடுகளுக்கு வரிக்குதிரை மாடல் பெயிண்டிங்- பூச்சி தாக்குதலுக்கு தீர்வா?

4. பருத்தி ஜின்:

தொழில்துறை புரட்சி விவசாயத்திற்கு பெரும் ஊக்கத்தை அளித்தது. 1793 மற்றும் 1794 க்கு இடையில் அமெரிக்கன் எலி விட்னி என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பருத்தி ஜின், பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வழி வகுத்தது. பருத்தியினை இழைகளிலிருந்து பிரிக்கும் உழைப்பு மிகுந்த பணிச்சுமை கொண்டது. மரக்கட்டை போன்ற பற்கள் கொண்ட சக்கரங்களின் வரிசையைப் பயன்படுத்தி, காட்டன் ஜின் 1,000 பவுண்டுகள் பருத்தியை பிரித்தெடுக்க முடியும். அதே நேரத்தில் ஒரு நபர் தன் கைகளால் வெறும் 5 பவுண்டுகள் அளவிலேயே பிரித்தெடுக்க முடிந்தது. 

5. டிராக்டர்:

டிராக்டரின் கண்டுபிடிப்பு விவசாய பணிகளை மிகவும் எளிமைப்படுத்தியது. டிராக்டர்களுக்கு முன்பு, விவசாயிகள் தங்கள் சொந்த பலத்தையோ அல்லது எருதுகள், கோவேறு கழுதைகள் மற்றும் குதிரைகள் போன்ற விலங்குகளின் சக்தியையோ நம்பி வயல்களில் வேலை செய்ய வேண்டியிருந்தது.

பிரிட்டிஷ் கண்டுபிடிப்பாளர் ரிச்சர்ட் ட்ரெவிதிக் 1812-ஆம் ஆண்டிலேயே நீராவி மூலம் இயக்கப்படும் டிராக்டர்களைக் கண்டுபிடித்தார். பெட்ரோலினால் இயக்கப்படும் டிராக்டர்கள் 1890 களின் நடுப்பகுதி முதல் இறுதி வரை உருவாக்கப்பட்டன. அமெரிக்க கண்டுபிடிப்பாளர் ஜான் ஃப்ரோஹ்லிச்சின் 1892-ல் internal combustion engine மூலம் இயக்கப்படும் டிராக்டரினை உருவாக்கி அனைவரின் பாராட்டினையும் பெற்றார்.

அதன் தொடர்ச்சியாக் இன்டர்நேஷனல் ஹார்வெஸ்டர் (IH) வடிவமைத்த 1924 ஃபார்மால் டிராக்டரானது பல்நோக்குத் தன்மையுடையதாக கண்டறியப்பட்டது. பயிர்களை நடவு செய்வதற்கும், பயிரிடுவதற்கும், அறுவடை இயந்திரங்கள் மற்றும் பிற உபகரணங்களை இழுக்கக்கூடிய முதல் டிராக்டர் இதுவே. இதன்பின்னர், டிராக்டரில் இன்றளவும் பல்வேறு தொழில்நுட்ப புரட்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Farmall Tractor

மேலே குறிப்பிட்ட அத்தனை கண்டுபிடிப்புகளும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்கிற விதம் தான். மனித உழைப்பை பெருமளவில் விவசாயத்திற்கு வழங்க வேண்டிய நிலை தொடர்ச்சியாக புதிய கண்டுபிடிப்புக்களாலும், தொழில் நுட்ப புரட்சிகளாலும் குறைந்து வருகிறது என்பதே நிதர்சனமான உண்மை.

Read more:

தீவனச் செலவில்லாமல் பன்றி வளர்ப்பு- அசத்தும் சிங்கம்புணரி யுவராஜ்!

நிலையான விவசாயத்திற்கு முள்ளங்கி சரி வருமா?

English Summary: Top 5 Inventions That Revolutionized Agriculture full details here Published on: 11 April 2024, 12:31 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.