வெயிலில் வெந்துபோன மக்களுக்கு, மனதை மட்டுமல்லாமல், மண்ணையும் குளிர்விக்கும் மழைக்காலம் தொடங்கிவிட்டால், மகிழ்ச்சி அருவிபோலக் கொட்ட ஆரம்பிக்கும்.
மழைக்காலம் (Rainy season)
ஆனால் மழைக்காலம் என்பது நோய்களை நமக்குக் கொண்டுவரும் காலம் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.எனவே ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவதற்கு என்ன செய்யலாம் என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.
மழைக்கு ஏற்ப மனமும், உடலும் கதகதப்பைத் தேடக்கூடும். சூடாகச் சாப்பிட மனம் ஏங்கும். ஆனால் நல்ல உணவு தான் மருந்து என்று கவனித்து சரியானதை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் இயல்பாகவே செரிமானம் குறைவாக இருக்கும். அதிக தொற்று ஆரம்பிக்கும் காலமும், அதிகம் சந்திக்கும் காலமும் இந்த மழைக்காலம் தான். வாய் முதல் மலக்குடல் வரை செரிமானப் பாதையில் சிரமமில்லாமல் உணவு முறையைப் பார்த்துக்கொண்டால் பாதிப்பில்லாமல் குளிர்காலத்துக்குப் பயணிக்கலாம்.
சூடான பானங்கள் (Hot drinks)
-
மழைக்காலத்தில் சூடாகச் சாப்பிடுவதும் குடிப்பதும் எல்லோருக்கும் பிடித்தமானது.
-
தண்ணீரைச் சூடாக வெதுவெதுப்பாக அல்லது இளஞ்சூட்டில் குடிப்பது மிக நல்லது.
-
நீரைக் காய்ச்சி வெதுவெதுப்பாக அல்லது சீரகம் சேர்த்துக் குடிக்கலாம். இது சிறந்த ஆகாரமாகவும் இருக்கும்.
-
தண்ணீரைத் தவிர்த்து காஃபி, டீக்கு மாற்றாக ஆரோக்கியமாக குடிக்க வேண்டியப் பானங்களும் உள்ளன.அவற்றின் பட்டியல் இதோ!
மசாலா பானங்கள் (Spicy drinks)
டீ, காஃபி என்று சாதாரணமாக இல்லாமல் இஞ்சி தேநீர், ஏலக்காய் தேநீர், துளசி தேநீர், மசாலா பால், அதிமதுரம், சித்தரத்தை, சுக்கு காஃபி, பில்டர் காஃபி, இன்ஸ்டண்ட் காஃபியும் கூட குடிக்கலாம். க்ரீன் டீ, ப்ளாக் டீ போன்றவையும் நல்ல தேர்வாக இருக்கும்.
எப்போதும் ஒன்றையே எடுக்காமல் தினம் ஒன்றாக அல்லது வேளைக்கு ஒன்றாக மாற்றி மாற்றி எடுக்கலாம். மசாலக்கள் சேர்த்தவை பெரும்பாலும் மழைக்கு ஏற்ற பானங்களாக இருக்கும்.
ரசம் வகைகள்
பொதுவாகவே மிளகும், சீரகமும் சேர்ந்து எதிர்ப்பு சக்தி வலுவூட்டக்கூடியவை என்றாலும் தினம் ஒரு ரசமாக வைக்கலாம். பாரம்பரியமாகவே தக்காளி ரசம், தூதுவளை ரசம், மிளகு ரசம், கொள்ளு ரசம் போன்றவை ஆரோக்கியமானவை, எதிர்ப்பு சக்தி அளிக்க கூடியவை. தொற்றுக்கள் அண்டாமல் பாதுகாக்க கூடியவை.
சூப் வகைகள் (Soup varieties)
சூப் வகைகளில் தக்காளி சூப், முருங்கைக்கீரை சூப், பூசணிக்காய் சூப் அகியவற்றில், வைட்டமின் சி, பீட்டா கரோட்டினாய்டு, பொட்டாசியம் போன்றவை நிறைந்துள்ளன.
இவையும் எதிர்ப்பு சக்தி அளிக்க கூடியவை. உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்க செய்யும். இதனோடு காய்கறி சூப், பருப்பு சூப் போன்றவையும் சேர்க்கலாம்.
இதில் இஞ்சி பூண்டு, கொத்துமல்லி, மிளகு சேர்க்கும் போது அற்புதமான உணவாகவும் இருக்கும். அசிட்டி பிரச்சனை இருப்பவர்கள் மிளகு குறைவாக சேர்க்க வேண்டும். அசிடிட்டி தீவிரமாக இருப்பவர்கள் மிளகை தவிர்க்க வேண்டும்.
அசைவ உணவுகள் (Non-vegetarian foods)
அசைவ உணவு பிரியர்கள் நண்டு ரசம், நண்டு சூப், சிக்கன் வறுவலாக இல்லாமல் சூப் ஆக்கி குடிக்கலாம். மசாலாக்கள் சேர்த்து எடுக்கும் போது இரவு உணவாக இதனை எடுத்துகொள்வது, ஆரோக்கியமானதும் கூட.
மஞ்சள், சீரகம், பட்டை, கிராம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு சேர்ப்பதால் உடல் வெதுவெதுப்பாக இருக்கும். உடலுக்கு எதிர்ப்பு சக்தியும் அளிக்கும். அசைவ உணவுகளை எண்ணெயில் பொரிக்காமல் சேர்க்க வேண்டும். தானிய வகைகளும் சேர்க்கலாம்.
நட்ஸ் வகைகள் (Types of Nuts)
தினசரி ஒரு கைப்பிடி அனைத்து நட்ஸ் வகைகளும் சேர்த்து எடுக்க வேண்டும். பாதாம், முந்திரி, உலர் அத்திப்பழம், பிஸ்தா, வால்நட், உலர் திராட்சை என சேர்த்து எடுக்கலாம். இரவு தூங்கும் போது மசாலா பால் அல்லது வாழைப்பழமும் சேர்க்கலாம். சீஸனல் ஃப்ரூட்ஸ் என்று சொல்லகூடிய பழங்களையும் தவிர்க்காமல் சேர்க்கலாம்.
மோர் (Butter Milk)
கொழுப்பு நீக்கிய மோரில் கொத்துமல்லி, சீரகம்,பெருங்காயம் தாளித்து சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். அதோடு வெதுவெதுப்பான நீரை சேர்த்து காலை 11 மணிக்கு ஒரு டம்ளர் குடித்துவந்தால் செரிமானப் பிரச்சனை இருக்காது.
தகவல்
பரிமளாதேவி குமாரசாமி
உணவியல் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்.
மேலும் படிக்க...