
ஆரோக்கியமான வாழ்வு, அளவான ஆசை, மன பக்குவம், இத்தகைய பண்புகளைப் பின்பற்றியதால்தான் நம் மூதாதையர்கள் நீண்ட காலம் குடும்ப மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். ஆனால், இன்றைய தலைமுறையினரின் வாழ்வோ தலைகீழாக மாறியிருக்கிறது.
இளைஞர்கள், எதிர்காலத்திற்காக திட்டமிடுவதாக எண்ணி எண்ணற்ற ஆசைகளைக் கட்டாய இலக்காக கொண்டுள்ளனர். அதன் விளைவு அனைத்து வயதினருக்கும் தற்போது எல்லா வகையான நோய்களும் பதம்பார்க்கின்றன. இப்படி இயற்கையே தன் நிலையை மாற்றிக்கொள்ளும் அளவுக்கு நம் வாழ்க்கைமுறை மாறி வருகிறது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பார்கள். அந்த வகையில் இளம் வயதிலேயே நோயோடும், மாத்திரையோடும் வாழ வேண்டியது கட்டாயம் ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, உயர் ரத்த அழுத்தம் (High Blood Pressure) சர்க்கரை நோய் (Diabetics) உள்ளிட்டவை, பெயருக்கு பின்னால் போட்டுக்கொள்ளும் பட்டம் போல ஒட்டிக்கொள்கிறது.
இதற்காக நடுத்தர வயதிலேயே மாத்திரை எடுத்துக்கொள்வதால், அவை தனக்கே உரிய பக்கவிளைவுகளையும் தவறாமல் ஏற்படுத்திவிடுகின்றன. இதன் காரணமாக, சிறுநீரக பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு உள்ளிட்ட பெரும் பிரச்சனைகள் பூதாகரமாக வெடிக்கக்கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கின்றன மருத்துவ ஆய்வுகள்.
இருப்பினும், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றைக் நாம் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வீட்டில் இருக்கும் பொருட்களே போதும். இதனை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதான் மூலம் அவை நமக்கு நல்ல பலனை தருகிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
வெந்தயம் (Fenugreek seeds)
உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில், வெந்தயத்தின் பங்கு இன்றியமையாதது. இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி, இரும்புச்சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம் ஆகியவை அதிகளவில் உள்ளன. எனவே வறுத்து பொடி செய்த வெந்தயத்தை அனுதினமும், வெறும் வயிற்றில் சுடுதண்ணீரில் கலந்து குடிப்பது ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க பேருதவி புரிகிறது.
அட...! அகத்தி கீரையில் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கிறதா?
வாழைப்பழம் (Banana)
அனைத்து வைட்டமின்களையும் தன்னகத்தே கொண்டுள்ள வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகளவில் உள்ளது. எனவே வாழைப்பழம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. அதேநேரத்தில் உடலில் உள்ள சோடியத்தின் அளவையும் குறைக்க வாழைப்பழம் பயன்படுவதால், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும் 2 அல்லது 3 வாழைப்பழங்களை உட்கொண்டு வர ரத்த அழுத்தம் சீராகும்.
பூண்டு (Garlic)
வாயுத்தொல்லைக்கு சிறந்த நிவாரணியாகத் திகழும் பூண்டு, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. பத்து பல் உள்ள ஒரு கொத்து பூண்டை தினமும் சாப்பிட்டால், உடலில் பல்வேறு அதிசயங்கள் நிகழ்வதை உங்களால் நிச்சயம் உணரமுடியும். அதேநேரத்தில் கெட்டக் கொழுப்பைக் கரைக்கவும் பூண்டு உதவுகிறது.
தேன் (Honey)
உடல் எடையைக் குறைக்க மட்டுமல்லாமல், சளியைப் போக்கவும் பயன்படும் தேன், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், நாள்தோறும் பாலில், ஒரு ஸ்பூன் தேனைக் கலந்து குடித்து வர ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும்.
உங்கள் கிச்சனில் இருக்கும் கடுகு விதைகளில் உள்ள மருத்துவ குணங்கள்!
வெங்காயம் (Onion)
நாம் தினமும் உட்கொள்ளும், சாம்பார், பொறியல், வத்தக்குழம்பு போன்ற உணவில் வெங்காயத்தை சேர்த்துக்கொள்கிறோம். இருப்பினும் கோடை காலங்களில், வெங்காயத்தை சாலட்டாக (Onion Salad) சாப்பிடுவது நல்லது. ஏனெனில், வெங்காயத்தில் அதிகளவு உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் (Anti-Oxidents) ரத்த அழுத்தத்தை வெகுவாகக் கட்டுப்படுத்துகின்றன.
மேற்கண்ட பொருட்களை நம் அன்றாட உணவு வகைகளில் சேர்த்துவருவதுடன், மருத்துவர் அறிவுறுத்திய மாத்திரைகளையும் உட்கொண்டால், ரத்த அழுத்தம் கட்டுக்குள்ளேயே இருப்பது நம்மால் கண்கூடாகக் காணமுடியும். மேற்குறிப்பிடப்பட்டுள்ள வழிக்காட்டுதல் அனைத்தும் ஒரு பொதுவான தகவல்களை மட்டுமே. மேலும் விவரங்களுக்கு உங்கள் மருத்துவரை அணுகி தெளிவு பெற்றிடுங்கள்.
மேலும் படிக்க...