சூரிய காந்தி பூ என்றதும், நீண்ட தண்டு அதில் பச்சை நிற இலைகள் சூழ்ந்திருக்க, அடர் மஞ்சள் மற்றும் வெளிர் மஞ்சள் வண்ணங்களில் மெல்லிய இதழ்கள் கொண்டு பூத்துக்குலுங்குவது தான், நம் நினைவுக்கு வரும். சூரியன் உள்ள திசையை நோக்கியவாறு, இந்த மலர்கள் காற்றில் அசைந்தாடுவது, பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் ரம்மியமான காட்சி. இயற்கையின் அழகுக்கு அப்பாற்பட்டு இந்த மலரின் விதைகள் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டுள்ளன. இவ்விதையின் மருத்துவப் பயன்கள், அதை சாப்பிடும் விதம் போன்றவற்றைக் இனி காண்போம்.
சூரிய காந்தி - தகவல்கள்:
அஸ்டெராசியே (Asteraceae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த சூரிய காந்தி தாவரத்தின் அறிவியல் பெயர் ஹீலியான்தஸ் (Helianthus). இந்த மலர்களில் சூரிய காந்தி (Common Sunflower), மேக்சிமிலான்(Maximilan Sunflower), ஹீலியான்தஸ் (Helianthus), ஜிகான்டியஸ்(Giganteus), முள்சூரியகாந்தி(Jerusalem Antichoke) எனப் பல வகைகள் காணப்படுகின்றன.
விதையின் மருத்துவ பயன்கள்:
- சூரிய காந்தி விதையின் மேற்புறத்தில் மெல்லிய ஓடு அமைந்து இருக்கும். இதனை உமி என்று குறிப்பிடுவார்கள். உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை ஏராளமாக கொண்டுள்ள இவ்விதையில், வைட்டமின் ஈ, பி, மாங்கனீசு, மக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், துத்தநாகம், செலீனியம் போன்றவை கணிசமான அளவில் உள்ளன.
- இவைதவிர, இரும்பு மற்றும் நார்ச்சத்தும் இருக்கின்றன.
களைப்பை நீக்கி, உடலுக்குப் புத்துணர்வையும், தேவைப்படும் ஆற்றலையும் தரக்கூடியது.
குடல் எரிச்சல், மலச்சிக்கல் போன்ற பாதிப்புகளைக் கட்டுப்படுத்த உதவும். - சூரிய காந்தி செடியின் விதைகளில் உள்ள வைட்டமின் - ஈ (Vitamin E) செலீனியம் முதலான ஆன்டிஆக்ஸிடன்ட் (Anti-Oxidants) சாதாரண காய்ச்சல், மலேரியா, டெங்கு போன்ற பல நோய்களை எதிர்த்து அழிக்கும் ஆற்றல் கொண்டது.
- இந்த விதையில் உள்ள நார்சத்து, உடலிலுள்ள தேவையற்ற நச்சுப்பொருட்களை (Toxins) வெளியேற்ற உதவுகிறது.
- இதில் உள்ள லினோலெனிக், ஓலிக் ஆகிய அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகின்றன.
- எண்ணெய் சேர்க்காமல் வறுத்த சூரியகாந்தி விதையிலிருந்து சராசரியாக 165 கலோரி, கொழுப்பு 14 கிராம், புரதம் 5 கிராம் ஆகியவை நமக்குக் கிடைக்கின்றன.
உண்ணும் முறை இவ்விதை எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது என்பதற்காக, வரைமுறை இல்லாமல் சாப்பிடக்கூடாது. பாதாம், பிஸ்தா, வேர்க்கடலை, எள், பூசணி மற்றும் ஆளி விதைகளுடன் சூரிய காந்தி விதையையும் கலந்து ஒரு நாளைக்கு 30 கிராம் சாப்பிடலாம். முடிந்தவரை, உப்பு சேர்க்காமல் வறுப்பது நல்லது. அன்றாட சரிவிகித உணவின் ஒரு பாகமாக இந்த விதைகளும், நட்ஸும் இருப்பது அவசியம். இதை சாப்பிட்ட பின்னர், தேவையான தண்ணீர் அருந்துவது மிகவும் முக்கியமாகும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க...
ஆப்பிளை தோலோடு சாப்பிடுவது ஆபத்தா? ஆப்பிள் மீது பூசப்படும் மெழுகை நீக்கும் வழிகள்!