மாரடைப்பு என்பது மரணத்தை ஏற்படுத்தும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். மேலும் திங்கட்கிழமையன்று உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இதுதான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.
மான்செஸ்டரில் நடந்த பிரிட்டிஷ் கார்டியோவாஸ்குலர் சொசைட்டி (British Cardiovascular Society- BCS) மாநாட்டில் சமர்பிக்கப்பட்ட புதிய ஆய்வின்படி, திங்கட்கிழமைகளில் கடுமையான மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திங்கட்கிழமைகளில் மாரடைப்பு அதிகமாக வருவதற்கு என்ன காரணம் உள்ளது? அதுவும், வேலை வாரத்தின் தொடக்கத்தில் நம் இதயங்களை அதிக ஆபத்தில் வைப்பது போல் என்ன இருக்கிறது? திங்கள் மற்றும் மாரடைப்புக்கு இடையே உள்ள புதிரான உறவைப் பற்றி தான யோசிக்கிறீங்க? ஆய்வு குறித்து முழுமையா இப்பகுதியில் தெரிஞ்சுக்கலாம்.
பெல்ஃபாஸ்ட் ஹெல்த் அண்ட் சோஷியல் கேர் டிரஸ்ட் மற்றும் அயர்லாந்தில் உள்ள ராயல் காலேஜ் ஆப் சர்ஜன்ஸ் மருத்துவர்கள், 10,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளிடையே நடத்திய ஆய்வில் (ST-segment elevation myocardial infarction) (STEMI) என்கிற தீவிரமான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. இதயத்திற்கு இரத்தத்தை வழங்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கரோனரி தமனிகள் தடுக்கப்படும்போது இந்த வகையான மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. முறையான சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் மரணத்தை சந்திக்கும் நிலையும் ஏற்படும்.
ஆய்வின்படி, வாரத்தின் மற்ற நாட்களை விட திங்களன்று STEMI மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதன் பொருள் மற்ற நாளில் மாரடைப்பு ஏற்படாது என்பதில்லை. ஆய்வில் மற்ற நாட்களை விட 13 சதவீதம் திங்கள்கிழமை அதிகளவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துகள் பின்வருமாறு-
வார விடுமுறைக்குப் பிறகு, வேலைக்கு திரும்ப செல்லும் போது இயல்பாகவே மன அழுத்தம் இருக்கும். அலுவலகம் தொடர்பான பிரச்சினைகள் என மேலும் அழுத்தத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது.
மன அழுத்தம் உங்கள் கார்டிசோல் மற்றும் பிற ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்கிறது, இதையொட்டி உங்கள் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகள் அதிகரிக்க காரணமாகின்றன, இது மாரடைப்புக்கான ஆபத்து காரணியாகும் என்று நிபுணர் கூறுகிறார்.
நீடித்த மன அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தின் திடீர் அதிகரிப்பு இரண்டும் நம் இதயத்திற்கு சமமாக ஆபத்தானவை. மன அழுத்தத்தின் போது புகைப்பிடிப்பவர்களில் புகைக்கான தேவையை அதிகரிக்கச் செய்து, இதயத் துடிப்பு அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.
மாரடைப்பு மட்டுமல்ல, நிலையான மன அழுத்தம் மற்றும் வேலை-வாழ்க்கை சமநிலையின்மை (work life balance) ஆகியவை உங்களை பல நோய்களின் ஆபத்தில் தள்ளும் வாய்ப்பு கொண்டது. எனவே ஆரோக்கியமான உணவு உண்ணுவது, உடற்பயிற்சி மேற்கொள்ளுவது, உடல்நலனை பேணுவது ஆகியன மன அழுத்தம் மட்டுமின்றி மரணத்தை விளைவிக்கும் நோய்களில் இருந்தும் உங்களை காப்பாற்றலாம்.
மேலும் காண்க: