உலக சுகாதார தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு சுகாதார பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் தொடர்ச்சியாக உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. எப்போது இந்த தினம் தொடங்கப்பட்டது? இந்த வருடத்திற்கான கருப்பொருள் என்ன போன்ற தகவல்கள் பின்வருமாறு-
ஆரோக்கியம், நமது நீண்ட ஆயுளுக்கு அடிப்படையாக விளங்கும் நிலையில் அதன் மீதான விழிப்புணர்வு பொது மக்களிடையே குறைவாகவே காணப்பட்டு வந்தது. தொற்று நோய்க்கு பிறகு, பொதுமக்களின் எண்ணம் ஆரோக்கியத்திற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என சிந்திக்கத் தொடங்கியுள்ளது.
உலக சுகாதார தினம்:
இந்நிலையில், சர்வதேச பொது சுகாதாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனமான உலக சுகாதார அமைப்பு ஏப்ரல் 7 ஆம் தேதி நிறுவப்பட்டது. அதனை நினைக்கூறும் வகையில் தான், 1950 ஆண்டு முதல் உலக சுகாதார தினமானது ஏப்ரல் 7 ஆம் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலகளாவிய சுகாதார பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும், ஆரோக்கியமாக வாழ மக்களை ஊக்குவிப்பதையும் உலக சுகாதார தினம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2024 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்:
நடப்பாண்டிற்கான உலக சுகாதார தினம் இன்று உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. இன்றைய ஆண்டிற்கான கருப்பொருள்- 'எனது ஆரோக்கியம், எனது உரிமை' என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய சுகாதார சேவைகளை அணுகுவது இனி ஒரு சலுகையாக இருக்கக்கூடாது, அவை ஒருவரின் உரிமை என்பதை எடுத்துக்காட்டும் நோக்கத்தோடு இந்த கருப்பொருள் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஆரோக்கியத்திற்கான பொருளாதாரம் பற்றிய WHO கவுன்சிலின்படி, குறைந்தபட்சம் 140 நாடுகள் தங்கள் அரசியலமைப்பில் ஆரோக்கியத்தை மனித உரிமையாக அங்கீகரித்துள்ளன, இருப்பினும் நாடுகள் தங்கள் மக்களுக்கு சுகாதார சேவைகளை அணுகுவதற்கான உரிமையை உறுதிப்படுத்த சட்டங்களை நிறைவேற்றவில்லை என குறிப்பிட்டுள்ளது.
"இந்த ஆண்டின் கருப்பொருள் படி, அனைவருக்கும், எல்லா இடங்களிலும் தரமான சுகாதார சேவைகள், கல்வி மற்றும் தகவல், அத்துடன் பாதுகாப்பான குடிநீர், சுத்தமான காற்று, நல்ல ஊட்டச்சத்து, தரமான வீடுகள், வேலை மற்றும் சுற்றுச்சூழல் நிலைமைகள், மற்றும் பாகுபாடு வேறுபாடுகளிலிருந்து சுதந்திரம்" என்று WHO அறிவித்துள்ளது.
இன்றைய தினத்தில், நமக்கும் மற்றவர்களுக்கும் சிறந்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய முடியும் என்பதைப் பற்றி சிந்திக்க வேண்டியது அவசியம். தனிப்பட்ட முறையில், சுகாதார பரிசோதனைகள் மேற்கொள்வதோடு, ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ள உறுதிக்கொள்ளுங்கள்.
வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபடுவதோடு, மன ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் வழங்குங்கள். மது, புகைப்பிடித்தல் போன்றவதை பல்வேறு உடல்நலப்பிரச்சினைகளுக்கு அடிப்படையாக விளங்கும் நிலையில் அவற்றினை கைவிட்டு ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்.
Read more:
உடலுறவுக்குப் பின் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகள் என்ன?
வல்வோடினியா- பிறப்புறுப்பு பகுதியில் தாங்க முடியாத வலிக்கு காரணம் இதுதானா?