பொதுவாக நோய் வந்தபிறகு, சிகிச்சை பெறுவதைவிட, வரும்முன் காப்பதே சாலச் சிறந்தது. அந்த வகையில், நோய் வராமல் பாதுகாக்க வேண்டுமானால், ஆரோக்கியத்தைத் தக்கவைத்துக்கொள்ள முன்வரவேண்டும். அந்த வரிசையில், செரிமானக் கோளாறுதான், பல்வேறு பிரச்னைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது. எனவே செரிமானத்தை மேம்படுத்திவிட்டால் போதும், பல நோய்களில் இருந்து நாம் தப்பித்துக்கொள்ள முடியும்.
இதற்கு நம் உணவுமுறையில் உள்ள குறைபாட்டைத் தீர்க்க வேண்டியது முதல் பணி. ஏனெனில், நார்ச்சத்து குறைவான, பதப்படுத்தப்பட்ட, எண்ணெய் வகை உணவுகளின் மீது அதிக ஆர்வம் காட்டுவதால் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. அமிலத்தன்மை, மலச்சிக்கல், குமட்டல் போன்றவை சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆரோக்கியமான குடல் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் அவசியமானதாகும். வீட்டில் இருக்கக்கூடிய சில உணவுப்பொருட்களை அடிக்கடி பயன்படுத்தினாலே ஆரோக்கியத்தை மீட்டெடுக்கலாம்.
வாழைப்பழம்
இரைப்பை தொடர்பான பிரச்னைகளுக்கு வாழைப்பழங்கள் தீர்வாக உள்ளன. குடல் செயல்பாட்டை மீட்டெடுப்பதில் முக்கிய பங்கு இதற்கு உள்ளது. இதிலுள்ள ப்ரீபயாடிக் பண்புகள் கரையக்கூடிய நார்ச்சத்தின் சிறப்பம்சமாகும். இதிலுள்ள எலக்ட்ரோலைட்டுகள், பொட்டாசியம் போன்றவை செரிமான ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
தயிர்
குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் தயிரில் நிறைந்துள்ளன. இது செரிமான அமைப்பை வலுப்படுத்த உதவும் புரோபயாடிக் உணவுகளில் ஒன்றாகும். எனவே, உங்களின் அன்றாட உணவில் சேர்க்கபட வேண்டியவைகளில் இது முக்கியமானதாகும்.
இஞ்சி
செரிமான ஆரோக்கியத்துக்கு ஏராளமான நன்மைகளை கொண்ட மசாலா உணவுப்பொருள் இது. இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமானத்தை எளிதாக்கவும், அது தொடர்பான குமட்டல், வாந்தி, வாயு மற்றும் பசியின்மை உட்பட பல்வேறு பிரச்னைகளை தீர்க்கவும் உதவுகிறது. இருப்பினும், அளவாக பயன்படுத்தாவிட்டால் நெஞ்செரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆப்பிள்
தயிரைப் போன்றே ஆப்பிள்களிலும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் உள்ளன. இதில் வைட்டமின்கள் சி மற்றும் ஏ, ஃபோலேட், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை செரிமான ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும், குடல் இயக்கத்தை சீராக்கவும் உதவுகின்றன.
உலர் விதைகள் மற்றும் கொட்டைகள்
இவற்றிலுள்ள நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 ஆகியவை குடல் ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது. அதிகளவில் சேர்த்தால் உடல் எடை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது. அதேவேளையில், சர்க்கரை மற்றும் சாக்லேட்கள் சேர்க்கப்பட்ட உலர் விதைகளை தவிர்க்க வேண்டும் என்பது டயட்டீசியன்களின் அட்வைஸாக உள்ளது.
மேலும் படிக்க...