விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மரக்கன்றுகளை நடுவதன் மூலம் கணிசமானக் கூடுதல் வருமானத்தை ஈட்டலாம் என வேளாண்துறையினர் யோசனைத் தெரிவித்துள்ளனர்.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், பிரதானமாக உள்ள விவசாய சாகுபடியில், பல்வேறு திட்டங்கள் வாயிலாக, வருவாயை அதிகரிக்கவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், வேளாண்துறை சார்பில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
புதிய மானியத் திட்டம்
இதன் ஒரு பகுதியாக விளைநிலங்களின் வரப்புகளில், மரங்களை நட்டுப் பராமரித்து, வருவாய் பெறவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், நடப்பு சீசனில், புதிய மானியத்திட்டம் வேளாண்துறையால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வட்டார வேளாண்துறை உதவி இயக்குனர் தேவி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம்,' என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ், உடுமலை வட்டாரத்துக்கு, 12 ஆயிரம் தேக்கு, 3,500 மகாகனி, 1,000 நெல்லி, 3,500 செம்மரம்,500 புளி, 300 புங்கன் உள்ளிட்ட மரக்கன்றுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இலவசம் (Free)
-
மொத்தம், 20 ஆயிரத்து 800 மரக்கன்றுகள், வனத்துறையிடமிருந்து பெறப்பட்டு, விவசாயிகளுக்கு இலவசமாக வினியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
-
வரப்பு நடவு முறைக்கு, ஏக்கருக்கு, 50 மரக்கன்றுகளும், விளைநிலங்களில் நடவு செய்ய, ஏக்கருக்கு, 160 மரக்கன்றுகளும் வழங்கப்படும்.
-
நாற்றுகளை எடுத்து வந்து, நடவு செய்யும் செலவை விவசாயிகளே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஊக்கத்தொகை
மரக்கன்றுகள் பராமரிப்புக்கு, மூன்று ஆண்டுகளுக்கு, 21 ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். மரக்கன்றுகள் அனைத்தும், வரும், டிசம்பர் மாதத்துக்குள் நடவு செய்து, மரக்கன்றுகள், வருவாய்த் துறையின் அடங்கல் பதிவேட்டில் பதிவு செய்யப்படும்.
முன்னுரிமை
சிறு, குறு விவசாயிகள், பெண் விவசாயிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள், சம்மந்தப்பட்ட உதவி வேளாண் அலுவலர்களைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
நெற்பயிர் வயல் வரப்பில் பயறு வகை: மகசூலை அதிகரித்து, மன்வளத்தை கூட்டும்