திண்டுக்கல் மாநகரிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் இயந்திரவியல் துறையின் (MECHANICAL ENGG) இணை பேராசிரியராக பணியாற்றி வருபவர் விவேகானந்தன். ME பட்டம் பெற்ற நிலையில், 5 வருடக்காலம் துறை ரீதியான நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். தொடர்ந்து புதிதாக கற்றுக்கொள்வது, மாணவர்களுடன் கலந்துரையாடுவது போன்றவற்றில் ஆர்வமிருந்த நிலையில் ஆசிரியர் பணிக்கு மாறியுள்ளார்.
2010 முதல் இணை பேராசிரியராக பணியாற்றி வரும் நிலையில், வீடு/மாடித்தோட்டத்தில் தனது ஓய்வு நேரத்தை செலவழித்து வருவதோடு, சோதனை முயற்சியாக வீட்டுத்தோட்டத்தில் சில புதிய நடவடிக்கையினையும் மேற்கொண்டு வருகிறார். இதுக்குறித்து விவேகானந்தன் அவர்களிடம் கலந்துரையாடினோம்.
கவனத்தை ஈர்த்த ஒற்றை வைக்கோல் புரட்சி:
ஒருப்புறம் ஆசிரியர் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், தோட்டம் அமைத்து பராமரிப்பதற்கு ஆர்வம் எதனால் வந்தது? என்று கேட்டதற்கு, “பொதுவாகவே சுற்றுச்சூழல் மீது மிகுதியான ஆர்வம் உண்டு. புத்தக வாசிப்பு பழக்கமும் இருக்கும் நிலையில், ஜப்பானிய வேளாண் அறிஞர் மசானபு ஃபுகோகா எழுதிய ”ஒற்றை வைக்கோல் புரட்சி” புத்தகத்தினை ஒருமுறை வாசிக்க நேர்ந்தது. அந்த புத்தகம் இயற்கை பற்றியும், விவசாயம் மேற்கொள்ளும் முறைகள் பற்றியும் புதிய கண்ணோட்டத்தை வழங்கியது. இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் ஐயா அவர்களின் உரை தொடர்பான சில புத்தகங்களும் தோட்டம் அமைப்பது குறித்த எண்ணத்தை அதிகரித்தது.”
”முன்னர் நாங்கள் வாடகை வீட்டிலிருந்த வரைக்கும் எங்களால் வீட்டுத்தோட்டம் பற்றி பெரியதாக யோசிக்க முடியவில்லை. பின், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பித்தளைப்பட்டி என்கிற பகுதியில் சொந்தமாக வீடு கட்டி குடியேறிய போது தான் வீட்டுத்தோட்டத்தில் இறங்கலாமென முடிவெடுத்தோம்” என்றார்.
தோட்டப் பராமரிப்பில் இணையரின் பங்கு:
விவேகானந்தன் அவர்களின் இணையரான திவ்யாவும் முன்னர் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். தற்போது மாலை வேளைகளில் டியூஷன் எடுத்து வருவதோடு, வீட்டினை பராமரித்து வருகிறார்.
இதுக்குறித்து தெரிவிக்கையில் “ என் மனைவியும் இயல்பிலேயே சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் ஆர்வம் கொண்டவர். தோட்டத்தை நல்ல முறையில் பராமரித்து வருவதற்கு அவரின் பங்கு அளப்பரியது. இந்த தோட்டம் போகிறப் போக்கில் ஆரம்பித்த ஒன்று தான். நம்ம கண்ணு முன்னாடி ஒரு செடி வளர்ந்து, அதோட காய்கறிகளை அறுவடை செய்து, நம்மளே சமைத்து சாப்பிடும் போது பெரிய மகிழ்ச்சியை தருதுல என்று, என் மனைவி அவ்வப்போது என்னிடம் சொல்வது உண்டு. அவர் சொன்ன வார்த்தையினை முழு மனதோடு நானும் ஏற்கிறேன். அது தருகிற உணர்வு உண்மையிலேயே வித்தியாசமான ஒன்று தான்” என்றார்.
விவேகானந்தன் விவசாய பின்னணி தொடர்பான குடும்பத்தைச் சார்ந்தவர். அவரது தாத்தா, அப்பா, சகோதரர் விவசாய பணியினை தான் முதன்மை தொழிலாக கொண்டுள்ளார்கள். சிறுவயது முதலே விவசாயம் தொடர்பான எண்ணோட்டம் இருந்தாலும், முழுமையாக அதில் இறங்கி செயல்பட வேண்டும் என்கிற உணர்வு விவேகானந்தன் அவரிடம் இருந்ததில்லை. தற்போது தான் வீடு/மாடித்தோட்டம் மூலம் பல்வேறு பரிசோதனை முயற்சிகளையும் மேற்கொண்டு விவசாயப் பணியில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். தோட்டத்தில் என்ன மாதிரியான செடிகள் உள்ளது? அதனை பராமரிக்க எவ்வளவு செலவாகிறது? போன்ற கேள்விகளையும் நாம் எழுப்பியிருந்தோம்.
வீட்டுத்தோட்டத்தில் சோதனை முயற்சி:
அதற்கு,”எங்க பகுதியில் அவரை, பாகற்காய், பீர்க்கங்காய், பூசணி போன்ற கொடி வகை காய்கறிகள் நன்றாக வளருது. இதுப்போக மிளகாய், கத்தரி, வெண்டைக்காய், புதினா போன்றவற்றையும் வளர்த்து வருகிறோம். எங்கள் தோட்டத்தில் ரொம்ப ஸ்பெஷல் அப்படினு பார்த்தா வெற்றிலை வள்ளிக்கிழங்கினை சொல்லலாம். அதுமாதிரி கரும்பும், சும்மா நட்டு பார்க்கலாம்னு வச்சோம். கிட்டத்தட்ட 5,6 கரும்பு மேல நன்றாக வளர்ந்துச்சு. அப்புறம் வாழை ரகம்னு எடுத்துக்கிட்டா, செவ்வாழை, கற்பூரம், திண்டுக்கல் பகுதியில் வளரும் தன்மைக்கொண்ட சிறுமலை வாழை போன்றவற்றை வளர்த்து வருகிறோம். சோதனை முயற்சியாக தண்ணீரை கொடுக்காமல் இயல்பாய் மா மற்றும் நாவல் மரங்களை வளர்க்க முடியுமானு நட்டு வச்சுருக்கோம்” என்றார்.
Read also: விவசாயத்தை புரட்டிப் போட்ட டாப் 5 கண்டுபிடிப்புகள்- முழு விவரம் அறிக
மேலும் கூறுகையில், “தோட்டம் அமைப்பதற்கோ, அதை பராமரிப்பதற்கோ செலவுனு பெருசா இல்ல. காய்கறி குப்பை, சமையல் கழிவு இதை தான் தழைக்கூளம் மாதிரி பயன்படுத்தி வருகிறோம். பெயிண்ட் வாளி, பிளாஸ்டிக் டப்பா போன்றவற்றை செடி நடுவதற்கு பயன்படுத்துகிறோம். செயற்கையான உரம் போடுறது, மருந்து தெளிக்கிறது அப்படி எதுவும் நாங்க செய்யல."
"நாங்க இந்த வாரத்துக்கு, இவ்வளவு காய் அறுவடை பண்ணியே ஆகனும்னு எதுவும் டார்கெட் செஞ்சு வேலை செய்யல. இயற்கையோடு ஒன்றி என்ன செய்ய முடியுமோ, அதை செஞ்சா போதும்னு தான் இருக்கோம். Grow bag, விதைகள் வாங்குறதுனு சிறுசிறு செலவுகள் தான் ஆகும். பூசணி, கத்தரி, வெண்டை உட்பட கிட்டத்தட்ட 20 இரகங்களின் விதைகளையும் சேகரித்து வருகிறோம்” என குறிப்பிட்டார்.
Read also: மல்லிகையில் ஊட்டச்சத்து பற்றாக்குறையா? இதை செய்தால் போதும்
”இப்போது பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிற மனிதர்கள், இயற்கையிடமிருந்து ரொம்ப விலகி வந்துவிட்டதாக ஒரு எண்ணம் இருக்குது. இந்த தோட்டப் பணியில் ஈடுபடும் போது இயற்கையோடு கலந்து உரையாடுவது போல் மனதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி கிடைக்குது. ஒவ்வொரு நாளும் அந்த செடியும் நமக்கு ஏதேதோ சொல்லிக்கொடுக்குது. நமக்கு கிடைத்த வாழ்க்கையே ஒரு கிப்ட் தானு சொல்வேன். அந்த வகையில் இயற்கை மீது பெரிய மரியாதை இருக்கு."
"எதிர்க்காலத்தில் தண்ணீர் மற்றும் ஆள் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகளை சமாளிக்கும் வகையில் ஒரு தோட்டம் அமைக்க வேண்டும்னு ஒரு திட்டம் இருக்கு. பார்க்கலாம் என்ன ஆகுதுனு” என்று, தோட்ட வளர்ப்பினால் தனக்கு உண்டாகிய மன நிறைவினையும் நம்முடன் பகிர்ந்துக் கொண்டார் கல்லூரி இணை பேராசிரியர் விவேகானந்தன்.
Read more:
வெளியானது பாஜக தேர்தல் வாக்குறுதி- விவசாயிகளுக்கு, பிஎம் கிசான் உட்பட என்ன அறிவிப்பு இருக்கு?
TNAU சார்பில் நடப்பாண்டு வெளியிடப்பட்ட பழ இரகங்கள்- சிறப்பு என்ன?