தமிழகத்தின் சிவகங்கை மாவட்டத்தில் உளுந்து, பருத்தி, நிலக்கடலை ஆகியவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வரும் 15ம் தேதிக்குள் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, அந்தந்த மாவட்டத்தின் மண்வளம், சீதோஷணநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில்கொண்டு, வெவ்வேறு பயிர்கள் பயிரிடப்படுகின்றன.
அந்த வகையில் உளுந்து, பருத்தி, நிலக்கடலை ஆகிவற்றை சிவகங்கை மாவட்டத்தின் திருப்புவனம், எஸ்.புதூர், சிங்கம்புணரி பகுதியை சேர்ந்த விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர்.
இந்நிலையில், காரீஃப் பருவ பயிர்களான உளுந்து, பருத்தி மற்றும் நிலக்கடலை பயிருக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து கொள்ளளலாம் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு பருவத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரிடம், பயிர் காப்பீட்டு அடங்கல் பெற்று, ஒரு ஏக்கருக்கு ரூ.416 பிரீமியம் செலுத்தி காப்பீடு செய்து கொள்ளலாம்.இதேபோல் மற்ற பயிர்களுக்கும் காப்பீடு செய்து கொள்ளலாம்.
அந்தந்த பகுதியில் உள்ள பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள், வர்த்தக வங்கிகளில் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பூச்சி, நோய் தாக்குதல், வறட்சி, வெள்ள பாதிப்பு போன்ற காரணங்களால் பயிருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மகசூல் இழப்பினை கணக்கிட்டு ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்தால் (Oriental Insurance) விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.
மேலும் படிக்க...
கால்நடைகளின் பசுந்தீவனமான அசோலா- இயற்கை முறையில் வளர்ப்பது எப்படி?