Horticulture

Sunday, 23 July 2023 09:33 AM , by: Muthukrishnan Murugan

How to protect horticultural crops from strong winds

தென் மேற்கு பருவமழை மற்றும் பலத்த காற்றில் இருந்து தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது என்பது சவாலான விஷயம். கீழ்க்கண்ட ஆலோசனைகளை பின்பற்றுவதன் மூலம், தோட்டக்கலை பயிர்களை சேதமின்றி பாதுகாக்க இயலும். அவற்றின் விவரம் பின்வருமாறு-

கனமழை மற்றும் பலத்த காற்றில் இருந்து பசுமைக்குடில் அமைப்பு முறையில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாப்பது குறித்த ஆலோசனை விவரம்

பசுமைக்குடிலின் அடிப்பாகத்தை பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்க வேண்டும். பசுமைக் குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்கப்பட வேண்டும். அருகில் மரங்கள் இருப்பின் அதன் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். பசுமைக்குடிலின் கட்டுமானத்தினுள் கிளிப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை மாற்ற வேண்டும்.

நிழல்வலைக் குடிலில் கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும். நிழல்வலைக் குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்யவும்.

மா, பலா, முந்திரி, கொய்யா, எலுமிச்சை போன்ற பல்லாண்டு பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப் போன கிளைகளை அகற்றிட வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் பொருட்டு கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைத்தல் வேண்டும்.

தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். நோய்த் தடுப்பு மருந்துகள் தூர்ப்பகுதியில் நனையும்படி தெளிக்க வேண்டும். இளம் செடிகள் காற்றினால் பாதிக்கா வண்ணம் தாங்கு குச்சிகள் கொண்டு கட்டவேண்டும். கனமழை காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வேர் பகுதியை சுற்றி மண் அணைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களுக்கு தேவையான தொழு உரம் இட வேண்டும். நோய் தடுப்பு முறைகளை பின்பற்ற வேண்டும்.

வருடாந்திர பயிரான வாழை, காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்று கோலாக பயன்படுத்த வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைத்தல் வேண்டும். 75 சதவீதத்திற்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்தல் வேண்டும்.

தோட்டக்கலைப் பயிர்களுக்கான வழிமுறைகளாக, தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், மிளகாய், தக்காளி மற்றும் கொத்தமல்லி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்கா வண்ணம் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும்.

நீர்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர் திசையில் குச்சிகளால் முட்டுக் கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயா வண்ணம் பாதுகாக்க வேண்டும். வயல்களில் தேவையான பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், தோட்டக்க அலுவலர் மற்றும் உதவித்தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்.

pic courtesy: AIPH

மேலும் காண்க:

திருவள்ளூர் மாவட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)