இயற்கை உரங்களை இரசாயன உரங்களுடன் இணைத்துப் பயன்படுத்துவதன் மூலம், மண்ணின் வளத்தினை மேம்படுத்த முடியும். அத்துடன் பயிர் உற்பத்தியை பெருக்கி, உர உபயோகத் திறனைஅதிகரித்து, நல்ல தரமான உணவுப் பொருட்களையும் உற்பத்தி செய்யலாம்.
அந்த வகையில் அங்ககக் கழிவுகளை, அங்கக உரங்களாக மாற்றி பயிர்களுக்கு அளிப்பதில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழக (TNAU) நுண்ணுயிர் கூட்டுக் கலவையின் பங்கு மகத்தானதாகக் கருதப்படுகின்றது.
கூட்டுக்கலவை
அங்கக கழிவுகளான வைக்கோல், நிலக்கடலைத் தோல், நெல் உமி, சோளம், கம்பு மற்றும் மக்காச்சோள தட்டைகள், பயிர் கழிவுகள் பல, கால்நடை கழிவுகள், வீட்டு காய்கறி கழிவுகள் ஆகியவற்றை மட்கவைப்பதற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக்கலவை பயன்படுத்தப்படுகின்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக்கலவை, மட்குதலை துரிதப்படுத்தக் கூடிய பலவகை நன்மைதரும் நுண்ணுயிரிகளைக் கொண்டுள்ளது.
மட்கக் கூடிய கழிவுகளுடன் இந்த நுண்ணுயிர்க் கூட்டுக்கலவையைச் சேர்க்காத போது, அப்பொருட்களில் இயல்பாக இருக்கும் நுண்ணுயிரிகளே வளர்ந்து மக்குதலைச் செய்கின்றன. இதனால் கழிவுகள் மக்குவதற்கு நீண்ட நாட்கள் ஆகின்றன.
என்ன பயன்? ( What Benefit)
அதே சமயம், நுண்ணுயிர்க் கூட்டுக்கலவையைச் சேர்க்கும் போது, நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன், அவற்றின் செயல்பாடு விரைவாக தொடங்கி குறைந்த காலத்தில் மட்குதல் நிறைவடைகிறது.
பயன்படுத்துவது எப்படி? (How to Use)
-
ஒரு டன் அங்கக கழிவை மட்க வைக்க 2 கிலோ நுண்ணுயிர்க் கூட்டுக்கலவை பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
-
முதலில் இந்த 2 கிலோ நுண்ணுயிர்க் கூட்டுக்கலவையை 20 லிட்டர் தண்ணீரில் கலந்து கரைசலாக்கிக் கொள்ளவேண்டும்.
-
பின்னர் இக்கரைசலைக் குவித்து வைக்கப்பட்டுள்ள அங்ககக் கழிவுகளின் படுக்கைகளில் சீராக தெளித்துக் கிளறி விட வேண்டும்.
-
கழிவுகளில் ஈரப்பதம் எப்போதும் குறைந்தது 60 சதவிகிதம் இருக்குமாறு நீர் தளிக்க வேண்டியது மிக அவசியமாகும்.
-
இவ்வாறு செய்வதன் மூலம் குறைந்த நாட்களில் மட்கு உரம் தயாராகின்றது. இப்படித் தயாரிக்கப்பட்ட மட்கு உரத்தை ஒரு ஹெக்டேருக்கு 5 டன் என்ற அளவில் பயன்படுத்துமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
-
பயிரிடுவதற்கு முன்பு இதனை அடியுரமாக நிலத்திற்கு அளிப்பதன் மூலம் மண்ணின் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பண்புகள் மேம்பட்டு, ஊட்டச்சத்துக்களை பயிர்கள் எளிதில் எடுத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் பயிர்களின் உற்பத்தியையும் அதிகரிக்கச்செய்கிறது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நுண்ணுயிர் கூட்டுக்கலவையானது, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் விற்பனைக்கு உள்ளது. விலை – ஒரு கிலோ ரூ. 63 மட்டுமே.வாங்க விரும்புவோர், கோயமுத்தூரில் உள்ள தமிழ்நாடு வோண்மைப் பல்கலைக்கழகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
தகவல்
முனைவர் ப.முரளி அர்த்தனாரி
இணைபேராசிரியர்,
உழவியல் துறை,
தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக்கழகம்,
கோவை
மேலும் படிக்க...