விவசாய உற்பத்திக்கு மிக இன்றியமையாததாக விளங்குவது விதைகள் ஆகும். இத்தகைய விதைகள் பெரும்பாலும் தானிய விலையுடன் ஒப்பிடும் பொழுது அதிகமாகவே இருக்கின்றது. இத்தகைய விதைகளை உற்பத்தி செய்யும் விதை உற்பத்தி குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
விவசாயத்திற்கு இடுப்பொருட்கள் மிக இன்றியமையாதவை ஆகும். இடுப்பொருட்கள் இன்றி விவசாயம் செய்ய இயலாதுதான். ஆனால், இடுப்பொருள் இருந்து விதைகள் இல்லாமல் விவசாயம் செய்ய இயலாது. எனவே, விதைகள் என்பவை விவசாயத்திற்கு மிக முக்கியமான ஒன்றாகும். உரிய பருவத்தில் பயிரிடுவதற்கு நல்ல விதைகள் கிடைப்பதில்லை. இந்த நிலையைப் போக்கத்தான் விதை உற்பத்தி என்பது தேவையானதாக இருக்கின்றது.
நிலத்தினைத் தேர்ந்தெடுத்தல்
விதை உற்பத்திக்குத் தகுந்த நிலத்தினைத் தேர்வு செய்தல் வேண்டும். இவ்வாறு தேர்வு செய்யப்படும் நிலம் வளமாக, களர், உவர் தன்மை இல்லாமல் இருத்தல் வேண்டும். இதற்கெனத் தேர்வு செய்யப்படும் நிலத்தில் இதே ரக முந்தைய பயிர்களைப் பயிரிடாமல் இருந்திருக்க வேண்டும்.
விதையினைத் தேர்ந்தெடுத்தல்
தேர்ந்தெடுக்கப்படும் விதைகள் விதையினைப் பயிரிடும் சூழலுக்கும், தட்ப வெப்பத்திற்கும் உகந்ததாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட தட்ப வெப்ப நிலையில் நல்ல மகசூலைத் தரும் பயிர்களின் விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அதோடு, விதையின் இரகம் விவசாயிகளுக்கும், விற்பனைக்கும் உகந்த ஒன்றாக இருக்க வேண்டும். சீரான ஒரே அளவுள்ள விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
நீர் பாசனம்
விதை உற்பத்தி பயிர்களுக்கு வளரும் பருவம், பூக்கும் பருவம் மற்றும் அதன் முதிர்ச்சி பருவத்தில் பாசனம் செய்தல் வேண்டும். ஒவ்வொரு பருவத்திற்கு ஏற்றால் போல் பாசனம் செய்தால் உற்பத்தி ஆகும் விதையின் அளவு அதிகரிக்கும். பொதுவாக, பாசனத்தின் இடைவெளி, மண்ணின் தன்மையைப் பொறுத்தே அமையும்.
விதைகளை உலர்த்திப் பாதுகாத்தல்
தயாரான விதைகளைச் சூரிய ஒளி அல்லது மின் இயந்திரங்களைக் கொண்டு உலர்த்துதல் வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு உலர்ந்த நிலையில் உள்ளதோ அதைப் பொருத்து விதையின் வளர்ச்சி இருக்கும். எனவே, வளர்வதற்குத் தேவையான ஈரப்பதம் வரும் வரை விதைகளை நன்கு உலர்த்துதல் வேண்டும்.
இவ்வாறு பதப்படுத்தப்பட்ட விதைகளைக் கிடங்குகளில் வைத்து சேமிக்கும் போது பூச்சி, பூசணத் தாக்குதல் இன்றி இருக்குமாறு பாதுகாத்தல் வேண்டும். மழைக்காலங்களில் பாதுகாக்க வேண்டுமாயின் ஈரக்காற்றுப் புகாத பைகளைக் கொண்டு பாதுகாத்தல் வேண்டும். இத்தகைய விதை உற்பத்தியினை, அரசு அல்லது தனியார் என இரண்டின் மூலம் செய்து தகுந்த இலாபம் பெறலாம் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க